14 ஜூலை, 2010

சூரியின் டைரி-20: ஜவ்மிட்டாய்க்காரன்

சிறுவயதில் எவ்வளவோ குட்டிக்குட்டி  சந்தோஷங்கள்.  கவலை என்றால்  என்னவென்றே தெரியாத  அந்த  நாட்களில் குதியாட்டம், கும்மாளம்.  வாழ்க்கை எவ்வளவு எளிதாக இருந்தது! (பள்ளிக்கூடம் தவிர!  அது ஒரு கழுத்தறுப்பு மட்டும்தான்.  அதைச் சமாளித்துவிட்டால் வேறு பிரச்சினை இல்லை. அதிலும் எனக்கு எங்கள் டிரில் மாஸ்டரைக் கண்டால் நடுக்கம்)  குறிப்பாக  வீதியில்  விதம் விதமான தின்பண்டங்கள் வரும்.  பள்ளிக்கூடத்திற்கு அருகிலும் மிட்டாய்க்  கடைகள், அவற்றில் எத்தனையோவித ஆனந்தங்கள்!  இலந்தை அடை, குலேபகாவலி மிட்டாய்,  கொக்கோச்சு.  வாசலில் தினமும் வரும்  மிக்சர் வண்டி, அதில் விதம் விதமான தின்பண்டங்கள்.  அப்புறம்  ஜவ்மிட்டாய்.  திருவிழாக்காலங்களில் சொல்லவே வேண்டாம்.  ஆனால் இன்று அவற்றில் பல காணாமல் போய்விட்டன.  இன்றைய குழந்தைகளுக்கு அவற்றில் பல என்னவென்றே தெரியாமல் போய்விட்டது.  பதிலாக, இன்று  வேறு என்னென்னவோ விதம் விதமாக வந்துவிட்டது: ஐஸ் கிரீம், குர்குரே,  வகை வகையான சாக்லேட்டுகள் என்று வண்ண வண்ண பிளாஸ்டிக் கவர்களில்.

திண்டுக்கல்லில் அரசமரத்தடியில் பாட்டி விற்கும்  இலந்தை அடை, கொடுக்காப்பிளி, தேன் மிட்டாய்.  மதுரையில் நியூ சினிமா வாசலில்  ஒரு சிரட்டையில்  கடுகு, எண்ணெய்க்  கலவையை  நசுக்கி,  உப்பு, மிளகாய்த்தூள்  தூவி,  பொடியாக  நறுக்கிய  மாங்காய்த் துண்டுகளைக் கலந்து  விற்பவர் (இப்பொழுது நினைத்தாலும்  வாயில் எச்சில் ஊருகிறது), வாசலில் வரும்  சீத்தாப்பழம்.    


 ஜவ்மிட்டாய்க்காரர்  ஒருவர் எனக்கு நண்பர் என்று சொல்லலாம்.  ஒரு பெரிய கழியின் உச்சியில்  பாம்புபோல சுற்றிப்படர்ந்திருக்கும் மிட்டாய்.  அதிலிருந்து, சிறு பகுதியை லேசாக இழுக்க, இழுக்க வண்ண வண்ணமான  அந்தக் கலவை பல வடிவம் எடுக்கும்.  பையன்களுக்கு  கையில் கட்டிக்கொள்ள  கடிகாரம், சிறுமிகளுக்கு  கழுத்தில் நெக்லேஸ் என்று. ஆனால் எத்தனை பேருக்குக் கொடுத்தாலும்  அப்படியே இருக்கும்.  அளவே குறைவதே இல்லை.  எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.  அவரிடம் கேட்பேன் அதன் சூக்சுமத்தை.  சிரித்து மழுப்பி விடுவார்.  எவ்வளவு நாட்களுக்கு வரும்?  மாதக் கணக்கில்.  எப்படிப் பாதுகாப்பது?  பதில் சொல்லாமல் கண்ணைச் சிமிட்டிவிட்டுப் போய்விடுவார்.  பிசுபிசு என்று ஓட்டினாலும் அதன் மேல் தனி மோகம்.  இன்று பொடுசுகள் எல்லாம்  விலை உயர்ந்த உணமையான  கைக்கடிகாரங்களை கட்டிக்கொண்டு திரிவதால், இந்த மிட்டாய்க் கடிகாரம் இருந்திருந்தாலும் அவர்களுக்குப் பிடித்திருக்குமா என்று தெரியவில்லை.  

இன்றும் திருவிழாகளுக்கோ,  கிராமங்களுக்கோ  சென்றால்  எங்காவது  இவர்கள் தென்படுகிறார்களா என்று பார்ப்பேன்.  சில  முற்றிலுமாக காணாமல் போய்விட்டன.  அந்த ஜவ்மிட்டாய்க்காரர்கள்?  நான்  நினைக்கிறேன்,  அவர்களும், அவர்களது சந்ததியினரும்  டிவி சானல்களில்  மெகா  சீரியல்  நடத்தப் போய்விட்டார்கள் என்று.    

கருத்துகள் இல்லை: