பொத்தென்று விழுந்தது மதில் சுவர்மேல்
பின்னிப் பிணைந்த குரங்கும் பாம்பும்
குரங்கின் உடலை இறுக்கியபடி பாம்பு,
பாம்பின் தலையோ குரங்குப் பிடியில்.
பிடிதளர்த்த முடியா மரணபயம் இரண்டிற்கும்;
"விட்டால் போதும்" மனநிலைக்கு வந்த பின்னும்
அதை உணர்த்த தெரியாமல் விழித்தன இரண்டும்.
மதிலின் மறுபுறம் கூக்குரலிடும் குரங்குகள்
"ஐயோ பாவம் பாம்பு" எனக் கதைக்கும்
பாம்பாட்டிக்கூட்டம் மதிலின் முன்புறம்.
வேண்டும் வேண்டும் விடுதலை வேண்டும்!
யாரிடமிருந்து யாருக்கு விடுதலையாம்?
பாம்பிடமிருந்து குரங்கிற்கா? குரங்கு பிடித்த பாம்பிற்கா?
ஒன்றின் அழிவுதான் மற்றதின் விடுதலையா?
இரண்டுக்குமான விடுதலை அங்கே சாத்தியமில்லையா?
யோசிக்க விரும்பவில்லை கு.கூட்டமும் பா.கூட்டமும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக