நக்கீரன் குழுவிலிருந்து வெளிவரும் மாத இதழ் இனிய உதயம். திசை எட்டும் இதழ் போல, இதுவும் ஒரு மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கான இதழ். இதன் ஆசிரியர் சுரா. இதன் முக்கியமாக எழுதுபவரும் அவரே. பெரும்பாலான கதைகள் மலையாளத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை. ருசிய மொழிக் கதைகளும் அவ்வப்போது வருகின்றன. இந்த இதழைத் தேடிப் பிடித்து வாங்கிப் படிப்பவன் நான். இதில் என்னைப் பெரிதும் கவர்ந்தது இதில் வெளியும் எழுத்தாளர் நேர்காணல்களே. அவை அனைத்துமே மிகச் சிறப்பாக அமைந்துள்ளன.
இந்த மாத இதழை (ஆகஸ்ட் 2010 ) சென்னை சென்றிருக்கும்போது ஒரு கடையில் வாங்கினேன். (எல்லாக் கடைகளிலும் இது கிடைப்பதில்லை). இதழ் முழுவதையும் சமீபத்தில் சென்னை-திருச்சி பயணத்தின்போது படித்து முடித்தேன். நிறைவாக இருந்தது. குறிப்பாக திருப்பூர் கிருஷ்ணன் அவர்களது நேர்காணல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு திருப்பூர் கிருஷ்ணன் அவர்களைத் தெரியும். காரைக்குடி புத்தகத் திருவிழாக்களில் ஒவ்வொரு நாளும் ஒரு எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியும், சிறப்புரையும் என் பொறுப்பில் இருந்த நான்காண்டுகளிலும் நடந்திருக்கின்றன. அது போன்று ஒரு புத்தகத் திருவிழாவில், ஒரு நாள் மாலை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அவர் வந்திருந்தார். அப்போது எனக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாது. சிறுவயது முதலே இதழ்கள், நூல்கள் சேகரிப்பதும், கதைகள் வாசிப்பதும் என் மனதிற்குப் பிடித்த ஒன்று. ஆனால் இடைய ஒரு பத்துப் பதினைந்து வருடங்கள் ஆங்கில மோகம் கொண்டு, ஆங்கில இதழ்கள், ஆங்கில நாவல்கள், சிறுகதைகள் என்று போய்விட்டபடியால், இடைக்காலத்தில் எழுதிய எழுத்தாளர்களைப் பற்றி எனக்குத் தெரியாமல் போய்விட்டது. அது என்னுடைய இழப்புத்தான்.
புத்தகத் திருவிழாவிற்கு தினமும் ஒரு எழுத்தாளரைத் தேடும் பணியில் எனக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தவர் நண்பர் பசுமைக்குமார் அவர்கள். அவர்கள் மூலமாகத்தான் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களைத் தொடர்புகொண்டு காரைக்குடிக்கு வரவழைத்தோம். எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்ச்சி, சிறப்புரை தவிர அன்றிரவு நண்பர் பசுமைக்குமார் அவர்களது சிறுகதைத் தொகுப்பை திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டார். (சோதனையாக, அன்றிரவின் இறுதி நிகழ்ச்சி என்பதாலோ என்னவோ, புத்தக வெளியீட்டின் போது கூட்டமே இல்லை. சரியாக விளம்பரம் செய்து, கூட்டம் சேர்க்கத் தவறிவிட்டேனோ என்று என் மேலேயே எனக்கு வருத்தம்.) நூலை வெளியிட்டுப் பேசும்போது கிருஷ்ணன் அவர்கள் பசுமைக்குமார் அவர்களது எழுத்தாற்றலைப் போற்றிப் பேசிவிட்டு, அவரது நூலுக்கு ஆதரவு நல்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எங்கள் அமைப்பின் சார்பாக நான் 100 பிரதிகள் வாங்கினேன். அவற்றை எங்கள் அமைப்பின் நிகழ்ச்சிகளில், குறிப்பாக அந்த ஏப்ரலில் நாங்கள் நடத்திய உலக புத்தக தினவிழாவில் அனைவருக்கும் பரிசாக அந்த நூலை வழங்கினோம். மன்னிக்கவும், எங்கிருந்து எங்கேயோ போய்விட்டேன். மறுபடியும் இனிய உதயம் நேர்காணலுக்கு வருகிறேன்.
திருப்பூர் கிருஷ்ணன் அவர்களைப் பற்றி நிறையத் தெரிந்துகொள்ளும் இனிய வாய்ப்பை இனிய உதயம் நல்கியது. நா.பார்த்தசாரதி, கோமல் சுவாமிநாதன், சுஜாதா, வல்லிக்கண்ணன், சி.சு.செல்லப்பா, லா.சா.ரா. தி.க.சி. போன்ற மூத்த எழுத்தாளர்களது அன்பைப் பெற்ற பத்திரிக்கையாளர், எழுத்தாளர், கவிஞர், அம்பலம் இணைய இதழின் ஆசிரியர்; இப்படிப் பன்முக சாதனையாளர். அவர் நா.பாவின் தீவிர ரசிகர். நா.பா. அவருக்கு குரு. நா.பாவுக்கோ அவர் சொந்தத் தம்பி போல. தினமணி கதிரில் உதவி ஆசிரியராக இருபத்தைந்தாண்டுகளும், பின்னர் தீபம், அமுதசுரபி பத்திரிக்கையிலும் பணியாற்றியிருக்கிறார். 250 சிறுகதைகளும், 5000க்கும் மேற்பட்ட மரபுக்கவிதைகளையும் எழுதியுள்ளார். அவரது படைப்புகள் தாமரை, ஆனந்த விகடன், கல்கி, குமுதம் ஜங்ஷன் போன்ற இதழ்களில் வெளியாகி உள்ளன. தன் குருவைப் பற்றி, 'வாழ்வும் பணியும்' என்ற தலைப்பில் ஒரு நூலைச் சாஹித்ய அகாதெமிக்காக எழுதியுள்ளார். கல்கியில் தனது பத்திரிகை, எழுத்துலக அனுபவங்களை 'சுவடுகள்' என்ற தலைப்பில் 42 வாரங்கள் எழுதியுள்ளார். 'அரவிந்த அமுதம்' என்ற ஆன்மிகத் தொடரையும் அதில் எழுதியுள்ளார்
எல்லோருடனும் இனிமையாக, வேற்றுமை பாராட்டாது பழகும் ஆன்மிகவாதியான இவருக்கு பொதுவுடைமை நண்பகலும் உண்டு. மேலாண்மை பொன்னுச்சாமி, பொன்னீலன், சின்னப்பா பாரதி போன்றவர்கள் நெருங்கிய நண்பர்கள்.
இலக்கியம் பற்றிய அவரது கருத்து எண்ணெய் மிகவும் கவர்ந்தது: "உலகில் மனிதன் பிறக்கிறான், ஒரு நாள் இறக்கிறான். இடையில் இருக்கும் வாழ்க்கையில் பல்வேறு வகையான கருத்துப் போக்குகள், உணர்ச்சிகள் அவனை அலைக்கழிக்கின்றன. அதைப் பற்றிய ஆழ்ந்த விசாரணையாக அமைவதுதான் ஆழ்ந்த இலக்கியம்."
அவரது திருப்பூர் குமரன் பதிப்பகத்தின் மூலம் கல்கியில் தான் எழுதிய சுவடுகள் தொடரை நூலாக வெளியிட்டுள்ளார். 'இலக்கிய முன்னோடிகள்', 'இலக்கிய உலகில்', மற்றும் அவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு மரபுக் கவிதைத் தொகுப்புகள் ஆகியவற்றையும் வெளியிடவிருக்கிறார். தனது நெடுநாளைய ஆசையான இலக்கிய இதழ் தொடங்கும் ஆசை விரைவில் நிறைவேறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது சாதனைகள் தொடர, அவரது ஆசை நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக!
இந்த நேர்காணல் தவிர, இந்த இதழில் வைக்கம் முஹம்மது பஷீர் அவர்களது இரு சிறுகதைகளும் (இரு சிறப்பான, வித்தியாசமான காதல்கதைகள்), கேசவதேவ் அவர்களது இரு சிறுகதைகளும் (வாழ்க்கையின் வரேதனைகளையும், அத்தனைக்கும் ஊடே சுடர்விட்டுப் பிரகாசிக்கும் அற்புத மனிதர்களையும் பற்றிக் கூறும் இரு கதைகள்) உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக