இன்று காலை இந்து ஆங்கில நாளிதழின் முதல் பக்கத்தில் லக்னோவில் நான்கு குழந்தைகள் தட்டம்மை தடுப்பூசி போட்டபின் இறந்தது பற்றி விசாரணை நடத்த மத்திய சுகாதார அமைச்சகத்திலிருந்து ஒரு குழு லக்னோ சென்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே டி.வி.யில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கதறி அழும் நெஞ்சைப் பிழியும் காட்சியைப் பார்த்திருந்தேன்.
என் நெஞ்சில் சில கேள்விகள் எழுகின்றன. இந்தக் கொடுமைக்குக் காரணம் அலட்சியமா, கலப்படமா? இதன் பின்னணியில் யார்யார் இருக்கிறார்கள்? யார் இதற்கெல்லாம் பொறுப்பு? விசாரணையில் உண்மை வெளிவருமா? அப்படியே வந்தாலும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்களா? இது போன்று கொடுமைகள் இனியும் நடக்காதிருக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
அடுத்து, மாற்றுமுறை மருத்துவங்களில் ஈடுபாடு கொண்டவன் என்றமுறையிலும், ஹோமியோபதி மருத்துவத்தைப் பயின்றவன், அதைப் பற்றி ஆழமாகச் சிந்தித்தவன் என்றமுறையிலும் என் கருத்துக்கள் சிலவற்றை இங்கே பதிகின்றேன்.
ஹோமியோபதியிலும் தடுப்பு மருந்துகள் உள்ளன. ஆனால் அவை யாரையும் கொன்றதாக நான் கேள்விப்பட்டதில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. ஏனெனில் ஹோமியோபதி மருந்துகள் அனைத்தும் நுன்மமாக்கப் பட்டவை; மருந்தின் அளவு மிக மிகக் குறைவு. You can express the medicinal content only in exponential form like hundred to the power of minus two hundred. மருந்திற்காக ஆகும் செலவும் நம்பமுடியாத அளவிற்குக் குறைவு. முறைப்படி ஹோமியோபதியைப் பயன்படுத்தும்போது பக்கவிளைவுகளோ, பின்விளைவுகளோ ஏற்படுவதில்லை. தீராத நோய்கள் குணமாகின்றன. ஹோமியோபதி ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் இந்த உண்மைகள் தெரியவரும். இருப்பினும் யாரும் ஹோமியோபதி மருத்துவத்தை முறைப்படி அறிந்து கொள்ளவோ, பயன்படுத்தவோ முன்வருவதில்லை. அதைக் குறைகூறுவோரும், கேலி செய்வோரும் அதிகம்.
ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை டாக்டர் ஹானிமன் ஆறு ஆண்டுகள் கடுமையான சோதனைக்குப் பின்தான் ஹோமியோபதியை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். அம்மருத்துவத்தின் அடிப்படையைக் கூறி யார் வேண்டுமானாலும் பரீட்சித்துப் பார்க்கலாம் என்று வெளிப்படையாகவே வேண்டுதல் விடுத்தார். பல அல்லோபதி மருத்துவர்கள் அவ்வாறு முயன்றபின் ஹோமியோபதித் துறைக்கு மாறினர், மகத்தான சாதனைகள் படைத்தனர் என்பதை ஹோமியோபதி வரலாறு கூறுகிறது.
நான் எந்த மருத்துவத் துறைக்கும் எதிரி அல்ல. இந்த உண்மைகளை அனைவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டும் எண்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். நன்றி, வணக்கம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக