இன்று நாடெங்கும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. முனைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவர், நாட்டின் முதற் குடிமகன், புகழ் பெற்ற சிந்தனையாளர் என்ற அடையாளங்களை விட ஒரு ஆசிரியர் என்பதையே பெருமையாக நினைத்தார். அதன்படி அவரது பிறந்தநாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் நாட்டின் வருங்காலச் சிற்பிகளை உருவாக்கும் உன்னத வாய்ப்பைப் பெற்றுள்ள ஆசிரியப் பெருந்தகைகளுக்கு எனது பணிவான வணக்கங்களும், ஆசிரியர் தின வாழ்த்துக்களும்.
இத்தருணத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி பற்றிய என்னுடைய சிந்தனைகளை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.
நமது பாரம்பரிய மிக்க சமுதாயத்தில் அன்னை தந்தையோடு குருவையும் தெய்வமாக வணங்கும் பழக்கம் இருந்தது. இதைக் கருத்தில் கொண்டால் அன்றைய நமது கலாச்சார மேன்மைக்கும், இன்றைய சரிவிற்கும் காரணம் புரியும். ஆதர்ஷ ஆசிரியர்களும் சரி, லட்சிய மாணவர்களும் சரி, இன்றைக்கு அருகிப் போய்விட்டார்கள். கல்வியே தரம் தாழ்ந்து, ஒரு கேவலமான வியாபாரமாகி விட்டது. ஆனால் இன்றைக்கும் மேன்மையான ஆசிரியர்களும், அவர்களைப்போற்றும் மாணவர்களும் இல்லாமலில்லை. எண்ணிக்கைதான் குறைந்துவிட்டது.
மனிதமேம்பாட்டு அறிவியல் அமைப்பில் இருக்கும்போது நண்பர்களுடன் விவாதித்திருக்கிறேன். ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க நல்ல ஆசிரியர்கள் தேவை; நல்ல ஆசிரியர்கள் இல்லாமல் நல்ல மாணவர்கள் இல்லை; நல்ல மாணவர்கள்தான் நல்ல பிரஜைகள் (குடிமகன்கள் என்ற வார்த்தைக்கு இன்று அர்த்தம் வேறு, ஆகவேதான் பிரஜைகள்); நாளை நாட்டின் முக்கிய பொறுப்புகளை வகிக்கப் போகிறவர்கள்; நாட்டின் உயர்வு அவர்கள் கையில்தான். இந்த எண்ணத்தில்தான் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் சென்று, சீரிய சிந்தனைகளை விதைக்க, விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு சிறிய அளவில், ஏதோ எங்களால் இயன்றவரை முயன்றிருக்கிறோம். ஆசிரியர்களோடும், மாணவர்களோடும் கலந்துரையாடி, கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வோம். எங்கள் அமைப்பிலேயே பல லட்சிய ஆசிரியர்கள் இருந்தார்கள்.
கல்வித்துறையில் அரசியல்வாதிகளும், வியாபாரிகளும் கால்வைத்த பிறகு கல்வித்துறை மிக மோசமான நிலையை அடைந்து விட்டது. சொல்லிக்கொள்ளலாம், ஆண்டுக்கு அதிக பட்ச பொறியாளர்களை, பட்டதாரிகளை உருவாக்குகிறோம் என்று. அப்படி உருவானவர்கள் வெளிநாடுகளில் பல சாதனைகள் படைத்து, நாட்டுக்குப் பெருமை தேடித் தருகிறார்கள், நிறைய அந்நியச் செலாவணி ஈட்டித் தருகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் கல்வியின் அடிப்படை வெறும் அறிவைப் புகட்டுவது, சாதனையாளர்களை உருவாக்குவது மட்டுமல்ல, உயர் பண்புகளை ஊட்டுவதும் தானே. அப்படிப் பண்பாளர்களை உருவாக்கி இருக்கிறோமா? எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் பொய், பித்தலாட்டம், அநியாயம், அராஜகம், லஞ்ச லாவண்யம்; நேர்மையான வழியில் சம்பாதிக்க வழிகள் இருந்தாலும், பேராசையால் எப்படியாவது குறுக்கு வழியில் நிறையப் பணம் குவிக்கவேண்டும், அளவில்லாத சொத்து சேர்க்கவேண்டும் என்ற மனப்பான்மையல்லவா எங்கும் மேலோங்கியிருக்கிறது.
நான் ஆசிரியர்களை மட்டும் ஏதோ குறைகூறுகிறேன் என்று எண்ணவேண்டாம். இது ஒரு முக்கிய சமுதாயப் பிரச்சினை. இதன் அடிப்படை என்ன? இந்தச் சரிவிலிருந்து மீள என்ன வழி? என்று அனைவரும் ஆழமாகச் சிந்தித்துச், செயல்படவேண்டிய தருணம் இது. இதற்கு மேலும் கீழே போக முடியாது.
கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் வாட்டி வதைக்கும் இந்நாளில் ஆசிரியப் பணிக்கு வருபவர்களெல்லாம் விரும்பி, லட்சியத்தோடு அந்தத் துறைக்கு வருகிறார்கள் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும். ஏதோ ஒரு வேலை, இதுதான் கிடைத்தது, என்பதுபோல் ஆசிரியத் துறையில் உள்ளவர்கள்தான் இன்று அதிகம். அதிலும் என் தலையெழுத்து, இதில் வந்து மாட்டிக் கொண்டேன் என்று சொல்பவர்களும் நிறைய இருக்கிறார்கள். பெரும்பாலும் கையூட்டு இல்லாமல் எந்த வேலையும் இல்லை என்பதும் இன்றைய நிலை. பெரும்பாலும் லட்சக் கணக்கில் கொடுத்து வேலைக்கு வருகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் எப்படி மாணவர்களுக்கு லட்சிய ஆசிரியர்களாக அமையமுடியும், நல்ல வழிகாட்ட முடியும், உயர் பண்புகளை ஊட்டமுடியும்? நாட்டின் நலனில், எதிர்காலத்தில் அக்கறை உள்ள அனைவரும் சிந்திக்க வேண்டும்.
2 கருத்துகள்:
ஜப்பான் போன்ற நாடுகளில் சிறுவர் பள்ளிகளில் பாடம் நடத்த அதிகம் படித்திருக்க வேண்டும். அவர்களுக்குத் தான் சம்பளமும் அதிகம்.
நம் நாட்டில் அதற்கு நேர் எதிர். வேறு எந்த வேலையும் கிடைக்கவில்லை என்று ஆசிரியர் வேலைக்குச் செல்லும் நிறைய பேரை எனக்குத் தெரியும். நீங்கள் சொல்வது போல கல்வி வியாபாரமாகிவிட்டது. ரவுடிகளும், அரசியல் தலைகளும், சமூக விரோதிகளும் தான் இன்றைக்கு தாளாளர்களாக இருக்கிறார்கள்.
எங்கு போய் முடியப் போகிறதோ!?
நன்றி கிருஷ்ண பிரபு!
கருத்துரையிடுக