நான் ஒரு டிவி பைத்தியமோ, அல்லது மெகா சீரியல் பைத்தியமோ அல்ல. எப்போதாவது டிவி பார்ப்பேன்: செய்திகள் அல்லது ஆங்கிலப் படங்கள், சமயத்தில் நகைச்சுவை நிகழ்ச்சிகள். ஆனால் நான் டிவி பார்க்க உட்கார்ந்தவுடன் யாராவது வந்து ரிமோட்டைப் பிடுங்கி சேனலை மாற்றி விடுவார்கள். நானும் எழுந்து போய்விடுவேன். ரிமோட் பட்டனைத் தட்டி யாராவது விநாடிக்கொரு தடவை சேனல் மாற்றும்போது டிவியின் மேலேயே வெறுப்பு வந்துவிடும்.
எங்கள் வீட்டில் லோகல் கேபிள் டிவி இணைப்பு இருந்தது. ஊரெங்கும் விதவிதமாக DTH இணைப்பு வந்தபிறகு கேபிள் டிவி இணைப்பிலிருந்து மக்கள் விடுபட, கேபிள் டிவிக்காரர்கள் பாடு திண்டாட்டமாகி வருகிறது. அவர்கள் வேறு வழியின்றி சேனல்களைக் குறைக்கத் தொடங்கி விட்டனர். என் வீட்டில் ஸ்டார் ப்ளஸ் மெகா சீரியல்களைத் தொடர்ந்து பார்த்து வந்தனர். திடீரென அந்த சேனல் இணைப்பு துண்டிக்கப்பட, DTH இணைப்பு பெறும்படி எனனை நச்சரிக்க ஆரம்பித்தனர். வேறு வழியின்றி நானும் உடன்பட்டேன்.
எங்கள் வீடு கோட்டையூர் ஸ்ரீராம் நகரில் உள்ளது. ஸ்ரீராம் நகரில் டீலர் யாரும் இல்லை என்றும், காரைக்குடி சென்றுதான் இணைப்பு பெறவேண்டும் என்று கூறினர். காரைக்குடி சென்றபோது எதிர்பாராத விதமாக ராஜா பேப்பர் ஸ்டோர் உரிமையாளர் நண்பர் ராஜா அவர்கள் எதிர்பட்டார். அவர் எனது இனிய நண்பர். நான் எப்போது எந்த உதவியை நாடினாலும் உடனே அக்கறையோடு உதவுபவர். அவரிடம் சொன்னேன். அரை மணியில் விபரங்கள், பல்வேறு DTH இணைப்பு பற்றி தகவல்கள், சேகரித்துத் தந்தார்.
சென்னையில் என் உறவினர் வீட்டில் Airtel DTH இணைப்பு இருந்தது. அவர்கள் பரிந்துரையின் பேரில் அதைத் தேர்ந்தேன். நண்பர் ராஜா அவரது கடைக்கு அருகிலேயே உள்ள, அவர்க்குத் தெரிந்த ஏர்டெல் DTH டீலரான கல்யாணி ஸ்டோருக்கு அழைத்துச் சென்றார். இது நடந்தது அக்டோபர் 21-ஆம் நாள். எனக்கு DTH பற்றி எதுவும் தெரியாததால் கடைக்காரர் கூறியதைக் கேட்டுக் கொண்டேன். அவர் ஏர்டெல்லின் குறிப்பேட்டினைத் (Brochure) தந்தார்.(கீழே பதிந்துள்ளேன்). செட் டாப் பாக்ஸ், டிஷ் அன்டென்னா மற்ற இதர உபகரணங்களுடனும், ஏழு மாத South Super Value Pack மற்றும் இரண்டு Regional Pack பெற ரூபாய் 1970 /- (ஆயிரத்து எழுநூற்று தொண்ணூறு) மட்டும் தரவேண்டும் என்று Airtel DTH குறிப்பேட்டில் தன் கையினால் எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தார். பின்னர் நண்பர் ராஜா அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தொகையை ரூபாய் 1750 /- ஆகக் குறைத்தார்.
அதிக சேனல்கள் பெற குறிப்பேட்டில் உள்ள தொகையைக் காட்டினார். அதிலிருந்து நான் இரண்டு பேக்குகளைத் தேர்ந்தேன். அவை: இங்கிலீஷ் ப்ளஸ் பேக் - பத்து ஆங்கிலச் சேனல்கள் கொண்டது. மேலும் மாதம் ரூபாய் ஐம்பது தரவேண்டும். அடுத்து இன்ஃபோடைன்மென்ட் பிரிவிலிருந்து , டிஸ்கவரி பிளஸ் பேக் (டிஸ்கவரி சேனல் மற்றும் அனிமல் பிளானெட்) மேலும் மாதம் இருபது ரூபாய் அதிகம் தரவேண்டும். ஆக இந்த கூடுதல் சேனல்களுக்காக, மாதம் ரூபாய் எழுபது x ஏழு மாதம் = ரூபாய் 490/-; ஆக மொத்தம் ரூ.2240 /- செலுத்தி, ரசீது பெற்றுக் கொண்டேன்.(இந்த விபரங்களைத் தெளிவாக ரசீதில் எழுதியுள்ளனர்; அந்த ரசீதை ஸ்கேன் செய்து கீழே பதிந்துள்ளேன்.)
இணைப்பு தரப்பட்டது. இணைப்பு தர வந்தவர்கள் டிப்ஸ் வேண்டுமெனக் கேட்க, நூறு ரூபாய் கொடுத்தேன். அவர்கள் போனபிறகு நண்பர் தெரிவித்த தகவல் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. செட் டாப் பாக்சுடன் அவர்களே அதற்குரிய பேட்டரிகளைத் தரவேண்டும். ஆனால் வந்தவர்களோ பேட்டரிகளைத் தராமல், என்னுடைய பேட்டரிகளைப் போட்டு இயக்கினர். அது மட்டுமன்றி, டிவி ரிமோட்டை ஏர்டெல் ரிமோட்டுடன் மேச் செய்யவில்லை. அதனால் டிவியை இயக்க எனக்கு இரண்டு ரிமோட் தேவைப்படுகிறது. மற்றவர்கள் எல்லாம் ஏர்டெல் ரிமோட்டை மேச் செய்து, அதன் மூல மட்டுமே டிவியை இயக்கி வருவதை அறிந்து கொண்டேன். டீலரிடம் கேட்டபோது பேட்டரிகள் விட்டுப்போய் விட்டது என்று கூறி இரண்டு பட்டேரிகளைக் கொடுத்தார். ரிமோட்டுகளை மேச் செய்வது பற்றி தனக்கு எதுவும் தெரியாது; அதுகுறித்து ஏர்டெல் அவர்களுக்கு எந்த விதத் தகவலோ அல்லது பயிற்சியோ அளிக்கவில்லை என்றார்.
அடுத்த குளறுபடி, இணைப்பை செயல்படுத்த கிட்டத்தட்ட 48 மணி நேரம் ஆனது. அதுவும் நான் பலமுறை தொலைபேசியில் பேசிய பின்னரே. டீலர் ஒரு தேவகோட்டை ஏர்டெல் சர்வீஸ் ப்ரோவைடர் நம்பரைக் கொடுத்து அவர்களுடன் பேசும்படி கூறினார்; தானும் பேசுவதாகச் சொன்னார். ஒவ்வொரு முறை அந்த தேவகோட்டை நம்பருடன் தொடர்பு கொள்ளும்போது ஒவ்வொருவர் பேசுவார். அவருக்கு ஆதியோடந்தமாக எல்லாவற்றை சொல்லி விளக்கியபின், சிறிது நேரத்தில் இணைப்பு கிடைத்துவிடும் என்று இழுத்தடித்தார்கள். இணைப்பு வந்தபின்னரும் பிரச்சினை தீரவில்லை. அதிக பட்ச சேனல்களின் இணைப்பு தரப்படவில்லை.
ஒரு வாரம் சென்றபின், இறுதியாக அதிக பட்ச இணைப்புகள் தரப்பட்டது. ஆனால் அவற்றில் இரண்டு சேனல்கள் விடுபட்டன. அதுபற்றிக் கேட்டால் ஏர்டெல் நிறுவனத்திற்கு இமெயில் அனுப்புகிறேன் என்று பதில் வரும். அடுத்த பத்து நாட்களில் டீலரிடமும், தேவகோட்டையில் உள்ள சர்வீஸ் ப்ரோவைடருடனும் மொத்தம் இருபது, முப்பது முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறேன்; அப்போதைக்கு ஏதாவது பதில் சொல்வார்கள். ஆனால் எதுவும் நடக்க வில்லை.
ஒருநாள் இரண்டு பேர் டீலர் அனுப்பியதாக வந்து ரிமோட்டுகளை மேச் செய்ய முயன்றனர். அவர்களுக்குத் தெரியவில்லை. தொலைபேசியில் விசாரித்து மறுபடியும் முயன்றனர். அப்போதும் அவர்களால் மேச் செய்ய இயலவில்லை. ஒருநாள் கடைக்கு இரண்டு ரிமொட்டுகளையும் கொண்டுவாருங்கள்; தெரிந்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் மூலம் மேச் செய்யலாம் என்று கூறிச் சென்றனர். அதோடு அது சரி.
வேறு வழியின்றி, Airtel DTH வாடிக்கையாளர் பிரிவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, குறையைப் பதிவு செய்தோம். தினமும் ஏதோ ஒரு கால் சென்டரிலிருந்து மெக்கானிக்கலாக யாராவது தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரிப்பர். ஒவ்வொரு முறையும் ஒருவர் தொடர்பு என்பதால் எனது சோகக் கதையை ஒவ்வொரு நாளும் திருப்பித் திருப்பிச் சொல்வேன். நடவடிக்க எடுப்பதாக உறுதி கூறுவார். ஒரு குறுஞ்செய்தி வரும். ஒரு எண்ணைக் கொடுத்து தொடர்புகொள்ளச் சொல்வர். மறுபடியும் ராமாயணம் போல் கதையைச் சொல்லவேண்டும். மாலைக்குள் வீடு தேடி வந்து, ரிமொட்டுகளை மேச் செய்வார்கள் என்று கூறப்படும். ஆனால் இன்று வரை யாரும் வரவில்லை.
ஒருநாள் ஒரு குறுஞ்செய்தி வந்தது. 2011 மே மாதம் வரை சந்தா பெற்றுக் கொள்ளப் பட்டதாகவும், எனது கணக்கில் பணம் மிச்சமில்லை என்றும். உடனே தொடர்பு கொண்டு, இரண்டு சேனல்கள் தரப்படாததைப் பற்றிச் சொன்னால், சரியான பதில் கிடைக்காது. ஒருமுறை பேசியவர் உங்கள் டீலரிடம்தானே பணம் கொடுத்தீர்கள்; அவரைப் போய்க் கேளுங்கள் என்று எரிந்து விழுந்தார். பேசியவர்கள் அனைவருமே Airtel DTH என்றே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள். எனவே இவர்களெல்லாம் யார், இவர்களுக்கென தனி அடையாளமோ, ஊரோ, பெயரோ கிடையாதோ, யார் எதைச் சொன்னார்கள் என்பதைக் கண்டுகொள்வதே சிரமம்.
இந்த 35 நாட்களில் கிட்டத்தட்ட 100 முறை தொலைபேசியில் பேசியிருப்பேன். இதற்கிடையில் ஒருநாள் ஒரு அழைப்பு வந்தது, ஏர்டெல் சேவை திருப்தியாக இருக்கிறதா என்ற வினவலுடன். எனக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. யார் மேலும் நம்பிக்கையில்லாமல் நொந்து போய் இருக்கிறேன்.
இடை இடையே அதிகப்படி சேனல்கள் வேண்டுமா, வேண்டுமெனில் அதற்கு கட்டணம் எப்படி செலுத்துவது போன்ற குறுஞ்செய்திகள் வந்துகொண்டேயிருக்கிறது; நான் அவற்றை கண்டுகொள்வதே இல்லை. ஏற்கனவே பணம் கட்டிய சேனல்களே வராதபோது மேலும் பணம் செலுத்த நான் என்ன பைத்தியமா? என்ன ஆனாலும் சரி, பல்லைக் கடித்துக்கொண்டு இந்த ஏழு மாத காலம் முடியும் வரை காத்திருந்துவிட்டு, அடுத்து தொடர்வதா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டும்.
இந்த 35 நாட்களில் கிட்டத்தட்ட 100 முறை தொலைபேசியில் பேசியிருப்பேன். இதற்கிடையில் ஒருநாள் ஒரு அழைப்பு வந்தது, ஏர்டெல் சேவை திருப்தியாக இருக்கிறதா என்ற வினவலுடன். எனக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. யார் மேலும் நம்பிக்கையில்லாமல் நொந்து போய் இருக்கிறேன்.
இடை இடையே அதிகப்படி சேனல்கள் வேண்டுமா, வேண்டுமெனில் அதற்கு கட்டணம் எப்படி செலுத்துவது போன்ற குறுஞ்செய்திகள் வந்துகொண்டேயிருக்கிறது; நான் அவற்றை கண்டுகொள்வதே இல்லை. ஏற்கனவே பணம் கட்டிய சேனல்களே வராதபோது மேலும் பணம் செலுத்த நான் என்ன பைத்தியமா? என்ன ஆனாலும் சரி, பல்லைக் கடித்துக்கொண்டு இந்த ஏழு மாத காலம் முடியும் வரை காத்திருந்துவிட்டு, அடுத்து தொடர்வதா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டும்.
எல்லாவற்றிற்கும் சிகரமாய், இன்று ஏர்டெல்லிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. உடனடியாக ரூபாய் முன்னூறு செலுத்தாவிடில், இணைப்பு துண்டிக்கப்படும் என்று. ஒன்றுமே புரியவில்லை; தலையைச் சுற்றியது. டீலரான கல்யாணி ஸ்டோருடன் தொடர்பு கொண்டேன். இதுபோன்று பலருக்கு தவறாக குறுஞ்செய்தி வந்திருக்கிறது; அதைப்பற்றிக் கவலை கொள்ளவேண்டாம்; இணைப்பு துண்டிக்கப்படாது என்று உறுதி கூறினார். ஏழு மாதத்திற்கான மொத்த பணம் கட்டி முப்பத்தைந்து நாட்கள் ஆகிறது. பழைய பிரச்சினைகள் தீரவில்லை; புதிய பிரச்சினை உருவாகி உள்ளது. எப்போது இணைப்பு துண்டிக்கப்படுமோ தெரியவில்லை. ஏன் இவ்வளவு குளறுபடி? எங்கே பிரச்சினை? ஒன்றும் புரியவில்லை. இன்னும் எத்தனை குழப்பங்கள் காத்திருக்கின்றதோ?
மன உளைச்சலைப் போக்கிக் கொள்ள என் வலைப்பூவில் பதிந்துள்ளேன். உங்களில் யாருக்காவது இதுபோன்ற மோசமான அனுபவம் இருக்கிறதா? இல்லை எனக்கு மட்டும்தான் இந்த நிலையா? அனுபவசாலிகள் தயவு செய்து சொல்லமுடியுமா?