கால்களே!
உன் திருவடிகளில்
அவன் தலை பதிக்கிறான்!
இனிய வாகனமே,
எங்கெல்லாம் நீ
கொண்டு சேர்த்தாய்!
அவன் கவனக் குறைவால்
நீ பெற்ற விழுப்புண்கள்
எத்தனை எத்தனை!
சில இடங்களுக்கு
செல்ல நீ தயங்கியதால்
அவன் தப்பித்தான்!
பணி நிமித்தம்
பல இடம் அவன் ஓடியாட
முனகியதில்லை நீ!
அவன் கால தாமதமெல்லாம்
இறுதியில் முடிந்தது
உன் தலைமேல் தானே!
வாயைக் கட்டாததால்
உடல் நலம் தவற,
கைகொடுத்தவன் நீ!
நடைப் பயிற்சி இன்றேல்
இன்னேரம் அவன்
நடையைக் கட்டியிருப்பான்!
உன்னால் அவன்
மலர்களை மிதித்ததில்லை
ஏற்றி விட்ட ஏணிகளை
எட்டி உதைத்ததில்லை
மதியாதார் தலைவாசல்
மறுபடி போனதில்லை
கைம்மாறு என் செய்வான்!
அழியாச் சுவடுகளை
விட்டுச் செல்ல விரும்பும்
உன் பேராசைக்காக
இனி அவன் முயல்வான்!