3 ஆக., 2011

சூரியின் டைரி-50: "சாருமுகம்"

நேற்று திடீரென என் பால்ய கால நண்பன் ஆறுமுகத்தின் நினைவு வந்தது.

நெல்லை டவுணில் (நெல்லையில் 'டவுன்' என்று எழுதுவதில்லை.   மூன்று சுழி 'ண" தான் பயன்படுத்துவார்கள்.) அம்மன் சன்னதி நேராக வந்து கீழப் புதுத்தெருவில் மோதும்  இடம்தான் எங்கள் வீடு.  இடது பக்க எதிர் வரிசையில் ஆறுமுகத்தின் வீடு.  அப்போது எனக்கு பல நண்பர்கள் இருந்தபோதும் அவன்தான் மிக நெருக்கம். புத்தகங்கள் மீதிருந்த ஈடுபாடு இதற்கு முக்கிய காரணம். தவிர,  இரண்டு பேருக்கும் எழுதவேண்டும் என்ற ஆசையும்  உண்டு.  

நான் "அமுதம்" என்ற பெயரில் ஒரு கையெழுத்து இதழைத் துவங்கினேன்.  அவன் அதில் முழு மூச்சுடன் ஒத்துழைத்தான். அப்போது நான் மந்திரமூர்த்தி உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு  படித்துக் கொண்டிருந்தேன்.  எங்கள் பள்ளி பிரச்சினையில் சிக்கி, அரசு மானியம் நின்று, ஆசிரியர்களுக்கு சம்பளமும் நிற்க, பெரும்பாலான ஆசிரியர்கள்  வேலையைவிட்டு விலக, மாணவர்களும் வேறு பள்ளிகளுக்குச் செல்ல, என்னைப்போல் ஒரு சிலர் மட்டும் பள்ளியில் வகுப்புகள் சரியாக நடைபெறாமல், பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தோம்.  கையெழுத்து இதழ்கள் நடத்துவது போன்ற பொழுதுபோக்குகளுக்கு பள்ளியில் நிறைய அவகாசம் கிடைத்தது.   ஆனால் ஆறுமுகமோ நகரில் நல்ல பள்ளிகளில் ஒன்றான, சாஃப்டர் உயர்நிலைப்பள்ளியில் ஏழாவது  படித்துக் கொண்டிருந்தான். அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி கொலை செய்யப்பட சமயம் அது (நவம்பர் 1963).  அதைப் பற்றியும், "கார் ஒட்டி வந்தது யார்?" என்ற சிறுகதையும் வேறு சில துணுக்குகளும் நான் எழுதினேன்.  அவன் அவன் பங்கிற்கு துக்கடாக்களாக நிறைய எழுதினான், "சாருமுகம்" என்ற பெயரில். (அவனது இனிஷியல் 'S') .  எங்கள் வகுப்பிலும், அவன் வகுப்பிலும் இதழைப் படிக்கக் கொடுப்போம். இரண்டு மூன்று இதழோடு "அமுதம்" நின்றுபோனது. காரணம் நினைவில் இல்லை. 

பதினோராம் வகுப்பிற்கு (அப்போது பள்ளியிறுதி வகுப்பு - SSLC) அவன் படித்த பள்ளியிலேயே நானும் படிக்கச் சென்றேன். அப்போது எங்கள் நட்பு இன்னும் நெருக்கமானது. அவன் வாங்கும் புத்தகங்களை எனக்குப் படிக்கக் கொடுப்பான். நானும் கொடுப்பேன். புத்தகங்கள் பற்றி கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும். ஆனால் அந்த ஆண்டு கோடை விடுமுறையிலேயே என் அப்பாவிற்கு மாற்றலாகி நான் மானாமதுரை சென்றுவிட்டேன்.  வருடம் ஒரு முறை நெல்லை செல்லும்போது அவனைப் பார்ப்பேன்.  அதன் பிறகு தொடர்பு படிப்படியாகக் குறைந்துபோனது. திடீர் திடீரென்று என்  வாழ்வில் வந்து குதிப்பான், காணாமல் போவான்.  

நான் காரைக்குடி வந்து, அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் ஒரு நாள், எப்படியோ என் முகவரியைக் கண்டுபிடித்து எனக்கு கடிதம் எழுதினான்.  அதில் நினைவில் இருக்கும் ஒரு வரி: "என் இலக்கிய தாகத்தைத் தூண்டியவனல்லவா நீ!" நான் உடனே பதில் எழுதினேன்.  ஆனால் அவன் அதன் பிறகு தொடரவில்லை. 

பல ஆண்டுகள் கழித்து மதுரையில் அரசு ஊழியனாக மனைவி, மகளுடன் அரசு குடியிருப்பில் இருப்பதாக எழுதியிருந்தான்.  ஒருநாள் அதிகாலை அவன் வீட்டிற்குச் சென்று பார்த்தேன்.  அது ஒரு வேலை நாளாக இருந்தபடியால், நான் அதிக நேரம் தங்கவில்லை. ஒரு காப்பி குடித்துவிட்டுக் கிளம்பிவிட்டேன்.  அதன் பிறகு ஒரீரு கடிதப் பரிமாற்றம். அப்புறம் முற்றிலுமாக நின்றுபோனது.

நான்கைந்து வருடங்களுக்கு முன் எனக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு.  பேசியது ஆறுமுகத்தின் மகள். எனக்கு ஒரே ஆச்சரியம். எனது எண் எப்படிக் கிடைத்தது என்று. திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் இருப்பதாகக் கூறினாள்.  மதுரையில் நான் பார்த்த சின்னப்பெண் பெரியவளாகி, திருமணமாகி அமெரிக்காவில்! காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்று எண்ணிக்கொண்டேன்.  அவளது உறவினர் ஒருவர் எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு முயல்வதாகவும், நெல்லையில் ஒரு அரசியல்வாதி இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால், காரைக்குடியில் உள்ள ஒரு ஆடிட்டர் மூலம் வேலைவாங்கித் தருவதாகச் சொன்னாராம். கொடுக்கலாமா என்று என்னைக் கேட்டாள்.   கொடுக்க வேண்டாம், யாரையும் நம்பவேண்டாம், எனக்குத் தெரிந்தவரை அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று கூறினேன்.  அப்போது அவள் 'கேஷுவலாக'  "மாமா, உங்களுக்குத் தெரியுமா, அப்பா இப்போது இல்லை என்று கூற, நான் திகைத்துப் போனேன்.  எனக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.  "என்னம்மா, சொல்கிறாய்?" என்று கேட்டேன்.  ஒரு சில வருடங்களுக்கு முன், அவளது திருமணம் பேசி முடித்திருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒருநாள் இரவில் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு, அன்றே ஆறுமுகம் இறந்துவிட்டான்.  என்னைவிட, இரண்டு மூன்று வயது சிறியவன்.  என்னால் நம்பவே முடியவில்லை.  எனது வருத்தத்தை அவளிடம் தெரிவித்தேன்.  

அவனது நிழற்படமோ, அவன் எழுதிய கடிதங்களோ எதுவுமே என்னிடமில்லை. நினைத்தால் வருத்தமாக இருந்தது.  என்னுடைய இலக்கிய ஆர்வத்தை வளர்த்தவன் அவன் என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன். அதன் பிறகு அவனை நான் மறந்துவிட்டேன்.  ஏனோ நேற்று அதிகாலை அவனது நினவு வந்தது.  என் வாழ்க்கையில் என்னுடன் பயணித்தவர்களில் அவனும் ஒரு முக்கியமானவன் என்று நினைக்கிறேன்.  

கருத்துகள் இல்லை: