2 டிச., 2011

சூரியின் டைரி-56: "சோனா"

சில நாட்களுக்கு முன், காலையில் நண்பர் அலெக்சிடமிருந்து ஒரு அழைப்பு.  "எங்கே இருக்கிறீர்கள்? நண்பர் சோனா இன்று காலையில் காலமாகிவிட்டதாக, நண்பர் செல்வராஜ் சொன்னார்.  நீங்கள் கோட்டையூரிலிருந்தால், நாம் இருவரும் ஒன்றாகச் சென்றுவரலாமே என்பதற்காகத்தான் கூப்பிட்டேன் என்றார்.  அதிர்ச்சியிலிருந்து மீள  எனக்கு  சில நொடிகள் ஆயின.  பின்னர் அவரிடம்  நான் சென்னையில் இருப்பதாகச்  சொல்லிவிட்டு, என்ன ஆயிற்று என்று விசாரித்தேன்.  அவருக்கும்  தெரியவில்லை.  ஒரு மாதமாக  உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் என்ற அளவில் மட்டும் தெரிந்துகொள்ள முடிந்தது.   சென்று வந்தபின், விபரங்களைக் கூறுங்கள் என்று அலெக்சிடம் கேட்டுக்கொண்டேன்.  ஆனால் இன்று வரை அலெக்சிடமிருந்து தகவல் இல்லை, நானும் போன் செய்து கேட்டுக் கொள்ளவில்லை.  என்றாலும் என் மனதில் அவர் பற்றிய சிந்தனைகள் ஓடின.


சோனா ஒரு வித்தியாசமான மனிதர்.   ஒரு புத்தக விற்பனையாளர் என்று அறிமுகமானார்.  பின்னர் நான் ஹோமியோபதி பயின்றபோது, சக மாணவர் என்ற முறையிலும், பின்னர் நாங்கள் ஒரு ஹோமியோபதி இயக்கத்தை தோற்றுவித்தபோது நான் பொதுச்செயலர் என்ற முறையிலும், அவர் பொருளாளர் என்ற முறையிலும் நெருக்கமானார்.  இயக்கக் கூட்டம் அவரது வீடான ஜீவா இல்லத்தில்தான் பெரும்பாலும் நடைபெறும்.  சில ஆண்டுகளுக்குப்பின் அந்த இயக்கத்தைவிட்டு, நான் வெளியேறும்படி ஆயிற்று;  அடுத்த சில மாதங்களில் அவரும் வெளியேறினார்.


அதன் பின்னர் நான் மனித மேம்பாட்டு அமைப்பில் முக்கிய பொறுப்பிலிருந்தபோது அவர் உறுப்பினராகச் சேர்ந்தார்.  நான் காரைக்குடியில் மாநில அளவிலான புத்தகக் கண்காட்சி நான்கு ஆண்டுகள்  கம்பன் மண்டபத்தில் நடத்தியபோது,  அவர் எனக்கு உறுதுணையாக இருந்தார்.  நான் அந்த அமைப்பிலிருந்தும் ஒரு காலகட்டத்தில் வெளியேறும் சூழ்நிலை உருவானது.  அதன் பின்னர் அவரது தொடர்பு குறைந்தது.


அவர் காரைக்குடி நகரத்தார் பிரிவைச் சேர்ந்தவர்.  என்னைவிட பல வயது இளையவர்.  அவர் வேலை என்று எதுவும் இல்லாமல், பெயரளவில் புத்தக வியாபாரம், புத்தகங்கள் சேர்ப்பது, அப்புறம் எல்லாவற்றையும்விட ஆச்சரியமான விஷயம் அவர் காரைக்குடி நகர இந்திய பொதுவுடமைக் கட்சியின் பொருளாளராக இருந்தது.  பெற்றோர் மூலமாகவோ, அல்லது திருமணத்தின் மூலமாகவோ கிடைத்த பணத்தை, அரசு ஊழியர்களுக்கு குறைந்த வட்டியில் கொடுத்து, சிறிதளவு வருமானம் தேடிக்கொண்டார். 


 திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியிருந்தபோதும், அவர்கள் இல்லத்தில் குழந்தைப் பேறு இல்லாதது ஒரு பெரிய குறையாக இருந்தது.  பொதுவாக அவரைவிட அவரது துணைவியார் தோற்றத்தில் அவரைவிட வயது முதிர்ந்தவராகத் தென்பட்டார். அவர்களுக்கிடையில் பெரிய நெருக்கம் என்று சொல்ல வாய்ப்பில்லாததுபோல் பொதுவாக நண்பர்கள் அனைவரும் உணர்ந்தனர்.  ஆனால் நான் இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான ஒன்று, அவரது துணைவியார் எங்கள் அனைவரிடமும் நன்றாகப் பேசினார், பழகினார், அவர் வீட்டில் நாங்கள் இயக்கக் கூட்டங்கள் நடத்தியபோது உறுதுணையாக இருந்தார்.  எனவே எங்களைப் பொறுத்தவரை அவர் மதிப்பிற்குரியவராக இருந்தார். 


பின்னர் ஒருநாள் சில ஆண்டுகளாக அவரும், அவரது துணைவியாரும் சேர்ந்து வாழவில்லை என்ற தகவல் கிடைத்தது.  அவரது வீடு, அவர் சேர்த்த புத்தகங்கள் என்று எல்லாமே அவரது துணைவியார் உடையதாகியது.  அவர் தனது பெற்றோருடன் வசித்தார் என்ற அளவில் அறிந்திருந்தேன்.  சில முறை அவருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றபோது, அவரது அன்னையார் வெறுப்பேற்றுவது போல் பேசினார்; எனவே அதையும் நிறுத்த வேண்டியதாயிற்று.


என் பெண்ணின் திருமணத்திற்குப்  பிறகு தற்செயலாக அவரை எங்கோ வழியில் சந்தித்தேன்.  நான் அவரை திருமணத்திற்கு அழைக்காதது குறித்து வருத்தப்பட்டார்.  அவருடைய முகவரி கிடைக்காதது, மற்றும் மகளின் திருமணச் சுமைகளில் மூழ்கியிருந்ததால் விடுபட்டுப் போயிற்று என்று கூறி அவரிடம் என் வருத்தத்தைத் தெரிவித்தேன்.  அதுதான் நான் அவரைக் கடைசியாகப் பார்த்தது.


நாங்கள் நண்பர்கள் சிலர் பேசிக் கொள்கையில் சோனா பற்றி ஒரு கருத்து பொதுவாக அனைவரிடமும் இருந்தது.  அது அவர் எதிலுமே ஆழமாக இல்லாமல் மேலோட்டமாக இருந்தார் என்பதும், அதுபோல் அவருடைய புரிதலும் ஆழமாக இல்லை என்பதும்.  எத்தனை குறைகள் இருந்தாலும் என்னிடம் அன்போடு பழகியவர்; பல சமயங்களில் எனக்கு உறுதுணையாக இருந்தவர்; எங்கள் வீட்டிலும் அனைவரிடமும் உரிமையோடும் அன்போடும் பழகியவர் என்றமுறையில் அவரது மரணம் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.  அடுத்தபடி அவரை எடைபோட நான் யார்?  நான் என்னவோ பெரிதாக வாழ்ந்த்துவிட்டதாகவோ, சாதித்துவிட்டதாகவோ கூறமுடியாது என்கிறபோது அவரை எடைபோடும் தகுதி எனக்கு இல்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். 


சமயத்தில் நினைத்துப் பார்க்கையில் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடுவது பைத்தியக்காரத்தனமோ என்று தோன்றுகிறது.  இதையொத்த கருத்தை லியோ டால்ஸ்டாய் கூறியதாக எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது.  ஏன், என்னுடைய வாழ்க்கையையே எடுத்துக் கொள்கிறேன்; வாழ்க்கையில் புரியாத விஷயங்களே அதிகமாக இருப்பதுபோலவும்,  பல சமயங்களில் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் என்பதுபோலவும், ஏன், எதற்கு என்று புரியாமலேயே பலவற்றை செய்திருக்கிறேன் என்பதையும்  ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்; அதுவே உண்மை.


சோனாவின் நிழற்படம் எனகாவது இருக்குமா என்று தெரியவில்லை.  தேடிப் பார்த்து கிடைத்தால் இதில் பதிவு செய்யவேண்டும்.           

எனக்குப் பிடித்த கவிதை-69: மனிதம்

என் மனம் அழுதது
பறவைகளின் சுதந்திரத்தை 
விலங்குகளின் கள்ளங்கபடமற்ற தன்மையை 
மனிதன் கற்றுக் கொண்டிருக்கலாம்.
இந்த உலகம் 
அழகாக இருந்திருக்கும்  
ஆனால் அவனோ
பறவைகளுக்கும் 
விலங்குகளுக்கும் 
மனித புத்தியைக்
கற்றுக் கொடுத்துவிட்டான்.
விலங்கிலிருந்து
மனிதமானது
பரிணாம 'வளர்ச்சி' தானா?


கவிக்கோ அப்துல்ரகுமான் 



1 டிச., 2011

எனக்குப் பிடித்த கவிதை-68: வணக்கம் என்பார் ...

வணக்கம் என்பார்
வணங்க மாட்டார்
நலம் பார்த்தறியார்
நலமென் றெழுதுவார்  
பொதுவான பொய்களில் 
பொலிகிறது வாழ்க்கை. 


- கவிஞர் பாலா