ஸ்ரீ கற்பக சிந்தாமணி விநாயகர்
அருள்மிகு அடைக்கலம் தந்த அய்யனார் கோவில்
ஸ்ரீஅஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் முகப்பு
ஸ்ரீஅஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் பிரகாரம்
ஸ்ரீஅஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் வெளித் தெப்பக்குளம்
கடந்த வியாழக்கிழமை பட்டமங்கலம் சென்று பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீஅஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் சென்று வழிபாட்டு வருகிறேன்
பட்டமங்கலம் சிவகங்கைமாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர். ஊருக்குள் நுழையுமுன் கோவில் வந்து விடுகிறது. அமைதியான, இயற்கை எழில் கொஞ்சும் சூழல். மனம் அடங்கி மகிழ்வைத் தந்தது.
இங்குவியாழக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குரு பகவானுக்கமிகவும் உகந்த நாள்வியாழன் என்பதால். வியாழக்கிழமை காலை ஒன்பது மணிக்கு முன்னரே கோவிலுக்கு வந்துவிட்டேன் முதலில் வழியில் அரசமரத்தடியில் வீற்றிருக்கும் அருள்மிககற்பக சிந்தாமணி விநாயகரை அருகம்புல் கொண்டு வழிபட்டேன். அடுத்து, அருள்மிகு அடைக்கலம் தந்த அய்யனார் கோவில் அங்கே வழிபாட்டு அதன் பின்னர் கோவிலுக்குள் நுழைந்தேன்.
முதலிலேயே குரு பகவான் சன்னதி. கூட்டத்தில் காத்திருந்து, அவருக்குகந்த முல்லைப்பூ மாலையோடு அர்ச்சனை செய்து. நெய் விளக்கேற்றி வழிபட்டேன். மும்முறை பிரகாரம் சுற்றி வந்து வழிபட்டேன். பிரகாரம் பின்புலம் முழுவதும் ஒரு நெடிய ஆலமரம் விழுதுகள் விட்டுக் கிளர்ந்து விழுதுகள் மரங்களாகி அற்புதமாகக் காட்சியளித்தது. மரத்தடியில் நாகர்கள். அருள்மிகு நாகனாதப் பெருமானை நினைந்து, ஒம் நமோ நாகராஜாய நமோஸ்துதே என்று ஜபித்து வழிபட்டேன்.
பிரகாரத்திலிருந்து உள்ளே சென்றால் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி மற்றும் நவ கிரகங்களின் சன்னதி. அங்கெல்லாம் வழிபட்டபின அக்கோவிலின் பிரகாரத்தில் திருக்குளம் தென்பட்டது எட்டிப் பார்த்தால் அங்கே ஒரு விநாயகர் சன்னதி அருள்மிகு அனுக்க விநாயகர் சன்னதி. அங்கும் வழிபாட்டு வெளியே வந்தேன். மனம் நிறைந்த அனுபவம். இயன்றவரை oஒவ்வொரு வியாழனும் வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.
ஒரு சிற்றூரில் இவ்வளவு பெரிய கோவிலா! தல வரலாற்றைப் பார்த்தபோதுதான் தெரிந்தது அது முப்பத்துமூன்றாவது திருவிளையாடல் நடை பெற்ற திருத்தலம் என்பது.
மேலும் பிரகாரத்தில் திருவிளையாடற் புராணத்தில் இடம் பெற்றுள்ள, ஸ்ரீ பரஞ்சோதி முனிவரின் பிரசித்தி பெற்ற, பெரும்பாலும் அனைவரும் அறிந்த குரு பகவானைப் பற்றிய திருப்பாடல்:
கல்ஆலின் புடை அமர்ந்து நான்மறை ஆறு
அங்க முதற் கற்றகேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாம் ஆய் அல்லதும் ஆய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து
பவத் தொடக்கை வெல்வாம்.
மன நிறைவைத் தந்த அந்தப் பயணக்காட்சிகளில் சிலவற்றை எனது புகைப்படக்கருவியில் பதிந்தேன். அவற்றுள் சில மேலே.
புதிதாக அக்கோவிலுக்குச் செல்லும் அன்பர்களுக்காகச் சில தகவல்கள்:
காரைக்குடியிலிருந்து காலை எட்டு மணி அளவில் மல்லிகா எனும் பேருந்து பட்டமங்கலம் வழியாக திருக்கோஷ்டியூர் செல்கிறது சிவகங்கையிலிருந்து காலை ஆறு மணி அளவில் ராயல் இந்தியா எனும் பேருந்து பாகனேரி, பட்டமங்கலம், திருக்கோஷ்டியூர், திருப்பத்தூர் வழியாக புதுக்கோட்டை செல்கிறது.
ஐந்து கால பூஜை நேரம்:
---------------------------------
காலை 6 மணி முதல் 6.30 மணி வரை திருவனந்தல்
காலை 8 மணி முதல் 9 மணி வரை காலசந்தி
மதியம் 12.30 முதல் 1.00 வரை உச்சிக்காலம்
மாலை 5 முதல் 6 வரை சாயரட்சை
இரவு 7.30 முதல் 8.00 வரை அர்த்தஜாமம்
வியாழன் மட்டும்
------------------------------
காலை 4.30 மணி முதல்
இரவு 9.00 மணி வரை
கோவிலமுகவரி
-------------------------------
ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேஸ்வரர்
ஸ்ரீஅஷ்டசித்தி தட்சிணாமூர்த்தி திருக்கோவில்
பட்டமங்கலம் - 630 310
சிவகங்கை மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக