17 செப்., 2012

மனதில் பதிந்தவை-15: ஆனந்த விகடன் செப்டம்பர் 19, 2012 இதழ்

ஆனந்த விகடன் செப்டம்பர் 19, 2012 இதழ்

ஆனந்தவிகடனும், புதிய தலைமுறையும் தமிழில் நான் தவறாது வாங்கிப் படிக்கும் வார இதழ்கள். படித்து மகிழ்ந்தவற்றை எனது வலைப்பூவில் பதிந்து, மற்றவர்களும் படித்து மகிழச் செய்ய வேண்டும் என்பது ஆசை. ஆனால் அது பெரும்பாலும் முடியாமலேயே போய்விடுகிறது. அதற்கு எவ்வளவோ காரணங்கள். இன்று என்னவோ, ஒரு வேகம். பதிந்தே தீரவேண்டும் என்ற உறுதி. இதோ ஆரம்பித்துவிட்டேன்.

முதலில் ஆண்டனி ராஜின், “உலை கொதிக்கும் கூடங்குளம்”. சிறப்பான கட்டுரை. எனது தனிப்பட்ட கருத்து அணு உலைகளுக்கு எதிரானது. அணு உலை எங்கு அமைப்பதாயினும், என்னைப் பொறுத்தவரை அது கவலை அளிக்கும் ஒரு செயல், தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். அதன் ஆபத்துக்கள் அவ்வளவு கொடூரமானவை. தலைமுறை தலைமுறையாக, நூற்றுக் கணக்கான ஆண்டுகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. பல நூறு சதுர கிலோமீட்டர்கள் மனிதர்கள் அணுக முடியாத இடமாக மாறும் அபாயம் நிச்சயமாக இருக்கிறது. பெரிய நில நடுக்கங்கள் நேராது என்றோ, பெரிய சுனாமிகள் ஏற்படாது என்றோ யாரும் உறுதி கூறமுடியாது. மேலும் நம் நாட்டைப் பொறுத்தவரை பயங்கரவாத ஆபத்தும் அதிகமாக இருக்கிறது. இதைப் பற்றிய தகவல்களை ஏராளமாகத் தொகுத்து வைத்திருக்கிறேன். அவை அனைத்தையும் ஒரே இடத்தில் பதிந்து, படிக்கச் செய்தால் யாருமே அணு உலைகளுக்கு ஆதரவு வழங்கமாட்டார்கள். பிரச்சினை என்னவென்றால், ஒவ்வொன்றும் அங்கும் இங்குமாக சிதறிக் கிடக்கின்றன. மறுபடியும் அவற்றை ஒன்று திரட்ட வேண்டும்.

மனித வாழ்க்கையில் எவ்வளவோ ஆபத்துக்கள் இருக்கின்றன. ஆபத்து என்று பார்த்தால் எந்த சாதனையுமே செய்யமுடியாது என்ற வாதம் அணு உலைகளுக்குப் பொருந்தாது. ஆயிரம் ஆண்டுகள் அவற்றின் பாதிப்புக்கள் தொடரக்கூடும். அதை நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வளவு ஆபத்து இருக்கையில், மின் சக்தியை உற்பத்தி செய்ய வேறு வழியே இல்லை என்பது போல் காட்டுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. ஒரு அணு உலைக்காகச் செலவழிக்கும் பணத்தில் நிச்சயமாக மாற்று முறைகளில் மின்சாரம் தயாரிக்க முடியும்.

என்னைப் போன்றப்வர்கள் பலவகைகளில் கோழைகள். எங்கள் கருத்துக்களை மனதுக்குள் வைத்துப் புழுங்கவோ, நெருங்கியவர்களிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ளவோ அல்லது வலைப்பூவில் பட்டும் படாமலும் பதிவுசெய்யவோதான் முடியும். ஆனால் கூடங்குள கிராம மக்கள், எளிய மீனவ மக்கள், குழந்தைகள், பெண்டிர்கள் என்று குடும்பத்தோடு மிகத் துணிச்சலோடும், உறுதியோடும், தெளிவோடும், ஆவேசத்தோடும் அறப்போராட்டத்தில் இறங்கி, எல்லாவித் அடக்குமுறைகளையும், ஆபத்துக்களையும் தைரியமாக எதிர்கொள்வதைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. அவர்களது விழிப்புணர்வு போற்றத்தக்கது.

“இது எங்க மண்ணு. இது எங்க கடல். உங்களுக்கு அணு உலை வேணும்னா உன் இடத்துல தூக்கிட்டுப்போயி வச்சுக்க...” என்று முதலில் பாராவிலேயே அந்த மக்களின் அனல் கக்கும் வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டுவீச்சு, துப்பாக்கி சூடு என்ற போலீஸ் நெருக்கடிகள் கூடக்கூட இன்னும் உறுதியாகிறார்கள் கூடங்குளம் மக்கள்.

மேலும் சுப.உதயகுமாரனின் கீழ்க்கண்ட வரிகள் இன்றைய உண்மைய அப்படியே பிரதிபலிக்கின்றன:

“நாம் நம் இயற்கை வளங்களை இவர்களிடமிருந்து மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. நம் மண், நிலம், நீர், கடல் என்று இயற்கைச் செல்வங்கள் அனைத்தும் நமக்கே சொந்தம் என்று உரக்கச் சொல்ல வேண்டியிருக்கிறது.”

அடுத்து, சொல்வனம் பகுதியில் ஹேமா செல்வராஜ் அவர்களது கவிதை, “கறுப்பும் வெள்ளையும்” சிறப்பாக இருந்தது.

பாரதி தம்பியின் “மிஸ்டுகால்”பகுதியில் பெண்களுக்கும் செல்போங்களுக்குமான உறவு பற்றி மிகச் சிறப்பாக இருந்தது. அது:

“ஒரு பெண்ணுக்கும் செல்போனுக்குமான உறவு, மிக அந்தரங்கமானது. கட்டுப்பாடுகள் நிறைந்த பெண்ணின் ரகசிய உலகத்தை செல்போன் மிக இலகுவாக திறந்து வைக்கிறது. ‘இவர் கூடப் பேசாதே, அவர் கூடப் பேசாதே, மெதுவாகப் பேசு, அக்கம் பக்கம் பார்த்துப் பேசு’ எனப் பெண்ணைப் பேசாமல் இருக்கவைக்கத்தான் எத்தனை எத்தனை கட்டுப்பாடுகள்? அனைத்தையும் ஒரு விரல் சொடுக்கில் உடைத்துவிட்டது செல்போன். அந்தச் சின்னஞ் சிறிய கருவி, பெண்களின் உலகத்தில் நிகழ்த்தியிருக்கும் பாய்ச்சல் அசாத்தியமானது.”

அடுத்து, கே.ராஜா திருவேங்கடத்தின், “இது புது ரூட்டு!”. ரூட்ஸ் என்ற நிறுவனம் ஒரு நல்ல ஐடியாவைச் செயல்படுத்தியிருக்கிறது. அதிலிருந்து:

“...வந்துவிட்டது ‘ரூட்ஸ்’. சென்னையில் எந்த வழித்தடத்தையும் ஒரே போனில் தெரிந்துகொள்ளலாம்.

...

8695959595 நம்பருக்கு யார் போன் செஞ்சாலும் அவங்களுக்குத் தேவையான பஸ் ரூட், லோக்கல் டிரெய்ன் ரூட், டைம்னு எல்லா விஷயங்களும் சொல்வோம். அதோட நீங்க வெளியூர் கிளம்பினால், அந்த ஊருக்கு ரயில் வசதி இருக்குதா? அதில் இடம் இருக்குதானு அத்தனை தகவல்களும் கொடுப்போம்” என்றார் (அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அஸ்வின் குமார்.)

பாராட்டப்பட வேண்டிய சேவை! ரூட்ஸ் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

அடுத்து விகடன் வரவேற்பறையில் வி.ஆர்.பி.மனோகர் இயக்கி, எஸ்.ஜே.கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ள அவஸ்தை என்ற குறும்படம் பற்றி. கிராமங்களில் கழிப்பிட வசதியின்மை தொடர்பான பெண்களின் அவஸ்தையச் சொல்லும் படம். கிராமம் என்றல்ல நகரங்களிலும் ஆணாகிய நானே சில முறை அவஸ்தைப் பட்டிருக்கிறேன். ஆண்கள் என்னவோ எப்படியோ சமாளித்துவிடுகிறோம். ஆனால் பெண்களின் நிலை உண்மையிலேயே படு அவஸ்தைதான். இந்தப் பிரச்சினையை படமாக்கிய அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். பாராட்டுக்கள்.

அடுத்து, எனக்கு மிகவும் பிடித்த, நான் விடாது தொடர்ந்து படித்துவரும் ராஜு முருகனின், “வட்டியும் முதலும்’. அப்பா! என்ன அற்புதமாக எழுதுகிறார். நான் இந்தத் தொடரை தொகுத்து வைத்திருக்கிறேன். அதிலிருந்து:

“எக்ஸிபிஷன் போனீங்களா குட்டி?”

“ஆமாம்பா!”

“எப்போ போனீங்க?”

“நாளைக்குப் போனோமே!”

இப்படிச் சொல்லிவிட்டு விளையாட ஓடிவிட்டாள் என் அண்ணன் மகள் பொன்மலர். எனக்கு அவள் சொல்லிவிட்டுப்போன கடைசி வார்த்தைகள் புகைப்படப் புன்னகையைப் போல நிலைத்துவிட்டது. காலத்தை இப்படி அசால்ட்டாகத் தூக்கிப்போட்டு மிதிக்க ஒரு குழந்தையால்தான் முடியும்.....

....

...ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்துகிடக்கும் ஒரு குழந்தைதான் மனித இனத்தின் பேரழகு இல்லையா? வந்து சேர்ந்துவிட்ட உணர்ச்சிகளை எல்லாம் எரித்து விட்டு, குழந்தையாகிவிடத்தானே தவிக்கிறோம் எல்லோரும்?...

...

...அ நேக உணர்ச்சிகளை, நியாய அ நியாயங்களைக் கடந்து வந்துவிட்ட பிறகு, அழுகையும் சிரிப்பும் காற்றும் இசைய்ம் மட்டும் நிறைந்திருக்கிற பரிசுத்தத்துக்குள் போய் ஒருகணம் ஒளிந்து கொள்கிற கைக்குழந்தை நம் ஒவ்வொருக்குள்ளும் தூங்கிக் கொண்டு இருக்கிறது...

....

இப்போது வீட்டுக்குள் நுழையும்போது பொன்மலர் விளையாடிக் கொண்டு இருக்கிறாள்.

“ஏய்! காலைல ஸ்கூல்தானே? போய் சீக்கிரம் படு!”

“இல்லையே... ஸ்கூல் இல்லையே... நேத்திக்கு லீவாச்சே!” என்றபடி ஓடுகிறாள். நாளையும் நேற்றையையும் சர்வ சாதாரணமாக இடம் மாற்றிப் போட்டு பொம்மைகளைப் போல விளையாடும் அவளைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. என்னதான் செய்ய முடியும்... ஒருக்காலும் நேற்றைக்குள் நுழையவே முடியாத நம்மால்!

அடுத்து, மருத்துவர் கு.சிவராமனின், “ஆறாம் திணை”. இந்தத் தொடரை முதலில் சரியாகக் கவனிக்கவில்லை. கவனித்தபிறகுதான் தெரிந்தது எவ்வளவு அற்புதமான, அனைவரும் படிக்க வேண்டிய ஒரு தொடர் என்று. உடல் நலத்தையும், உணவையும் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல நல்ல விஷயங்களை படிக்கலாம். அதிலிருந்து:

...ஒரு தாவரத்தின் ஒட்டுமொத்த உழைப்பின் சாரம் கனிகளில்தான் பெரும்பாலும் தேக்கி வைக்கப்படும். தனது அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாக் விருத்திசெய்ய தாவரம், தான் உருவாக்கும் விதைக்கு அளிக்கும் ஊட்டத்தத்தான் பழங்களின் வாயிலாக நாமும் பகிர்ந்து கொள்கிறோம்.

...

நீங்கள் எந்த மண்ணில் வாழ்கிறீர்களோ, அந்த மண்ணில் விளையும் காய், கனிகளே உங்கள் உடலுக்கு மிகச் சிறந்த பலங்களைத் தருபவை என்பது..

...

எய்ட்ஸ் நோயாளிகளுக்கே ஊட்டம் கொடுக்க நோயை எதிர்த்து அவர்கள் போராடச் சிறந்த பழமாக எதைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் தெரியுமா? நெல்லிக்காய்.

...

...புற்றைத் தடுக்கும் ஆற்றலும் ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் ஆற்றலும் மாதுளைக்கு உண்டு....

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்கள், சுவையான நடையில் இக்கட்டுரையில். படித்து மகிழலாம், பயன் பெறலாம்.

அடுத்து, பாரதி தம்பியின் மற்றொரு கட்டுரையான, “ஜல சத்தியாக்கிரகம்!”. கழுத்தளவு நீரில் நின்று 17 நாட்கள் போராடிய ஓங்கராஸ்வரர் அணைப் பகுதியிலிருந்த அப்பாவி கிராம மக்களின் போராட்டத்தையும், அவர்களின் துயரத்தையும் மனதில் தைக்கும் வண்ணம் சிறப்பாக எழுதியிருக்கிறார். நம் நாட்டில் அரசாங்கங்கள் ஏன் இப்படி எப்போதுமே மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன என்ற என் வேதனையை இங்கே பதிவுசெய்யாமல் என்னால் இருக்கமுடியவில்லை.

அடுத்து, சமஸின், “பாடம் படிப்போம்!” அதிலிருந்து:

...

...சிவகாசிக்கு வெளியே இருப்பவர்களுகுத் தீ விபத்துகள் பெரிய விஷயமாகத் தெரியலாம். ஆனால், மாதம் நாலைந்து விபத்துகள் அங்கு நடக்கின்றன; அவற்றில் பல யாருக்கும் தெரியாமல் மூடி மறைக்கப்படுகின்றன. உண்மையில், சிவகாசி விபத்துகளின் மூலகாரணம் தீ அல்ல; அலட்சியம். அரசிடம் அலட்சியம் ஊழலால் உருவாகிறது; மக்களிடம் அலட்சியம் விழிப்பு உணர்வு இன்மையால் உருவாகிறது.

சிவகாசியில் இயங்கும் பட்டாசுத் தொழிற்சாலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை அனுமதி பெறாதவை. பட்டாசுத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 2.5 லட்சம் பேரில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் குழந்தத் தொழிலாளிகள். எல்லா விதிமீறல்களும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறைக்குத் தெரியும். லஞ்சம் அதன் கண்களைக் கட்டி இருக்கிறது...

சிறுவயதிலிருந்தே நான் விகடன் படித்து வருகிறேன். தற்போது எனக்கு வயது 63. விகடன் என்னை என்றும் ஏமாற்றியதில்லை. புத்தகத்தை மூடிவைக்கும் போது எப்போதும் ஒரு மன நிறைவு இருக்கும். கூடவே அதில் படித்த கனமான விஷயங்கள் நெஞ்சில் அழுத்தும், சிந்திக்க வைக்கும்.

நன்றிகளும்,. பாராட்டுகளும் விகடனுக்கு.

கருத்துகள் இல்லை: