17 ஜூன், 2018

ஆன்மீக சிந்தனை-76: கடவுள் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்ன செய்து கொண்டு இருக்கிறார்?


கடவுள் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்?  என்ன செய்து கொண்டு இருக்கிறார்?

கிருஷ்ண தேவராயர் கேட்ட கேள்விக்கு யாராலேயும் பதில் சொல்ல முடியவில்லை. அப்போ தெனாலி ராமன் முன் வந்து, அரசே இதுக்கு நான் விடையளிக்கிறேன் என்று சொல்லிட்டு, ஒரு மெழுகு வர்த்தியை ஏத்தி, அரசே இந்த மெழுகுவர்த்தியின் தீபம் எந்த திசையைக் காட்டுகிறது என்று கேட்டான்..? அவர் அது மேல் நோக்கி காட்டுகிறது. எந்த திசையையும் குறிப்பிட்டுக் காட்டவில்லை என்று சொன்னார். சரின்னு சொல்லிட்டு மெழுகு வர்த்தியை திருப்பி திருப்பி மேலும் கீழும், குறுக்கும் நெடுக்குமாக வைத்தான். அப்போதும் தீபம் மேல் நோக்கியே நின்றது.
அரசே நாம் தீபத்தை சாட்சியாக ஏற்றுக் கொண்டு, கடவுள் நமக்கு மேலே இருக்கிறார் என்பதை அறிவோமாக. அவர் வேறு எந்த திசையிலும் இல்லை.

அடுத்து நீங்கள் கேட்ட கேள்வி... கடவுள் எப்படி இருக்கிறார்?
இதுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் பால் வேணும் என்று கேட்டு வாங்கி வந்து அரசே இந்தக் கிண்ணத்திலுள்ள பாலில் கொஞ்சம் தயிர் சேர்த்தால் என்னவாகும்? அது தயிராகும் என அரசர் பதிலளித்தார். ஆமாம் அந்தத் தயிரைக் கடைந்தால் வெண்ணெய் ஆகும். அந்த வெண்ணெய்யை உருக்கினால் அது நெய் ஆகும். சரி தானே என்று அவன் கேட்க அரசர் ஆமோதித்தார். அப்படியானால் இந்தக் கிண்ணத்திலுள்ள பாலுக்குள் தயிர், மோர், வெண்ணெய், நெய் எல்லாம் இருக்கு என்று ஒத்துக் கொள்கிறீர்களா என கேட்டதும் அரசர் ஆமாம் ஒத்துக்கறேன்னு சொன்னார். சரி அரசே.. இந்தப் பாலில் எந்த பாகத்தில் தயிரும், எந்த பாகத்தில் மோரும், எந்த பாகத்தில் வெண்ணெயும், எந்த பாகத்தில் நெய்யும் இருக்கு என்று பிரிச்சுக் காட்ட முடியுமா?என்று கேட்க அரசர் அது எப்படி முடியும்.. எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று அடக்கம் என்றார்.

அது போல் தால் கடவுள் நம் எல்லோருக்குள்ளும் அடக்கமாக இருக்கிறார். அவர் எங்கும் நீக்கமற எல்லாமாயும் வியாபித்திருக்கிறார். அவர் இல்லாத பொருள் உலகில் எதுவும் இல்லை என்றான் தெனாலி ராமன். சரி இரண்டு கேள்விகளுக்கு சரியான விடையளித்தாய். என் மூன்றாவது கேள்விக்கு பதில்

கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

அரசே நான் உங்கள் இரண்டு கேள்விக்கு சரியாக விடை அளித்து விட்டதால், நான் உங்களுக்கு குருவாகிறேன். நீங்கள் சிஷ்யன் ஆகிறீர்கள். எனவே குரு கீழேயும் சிஷ்யன் மேலேயும் இருப்பது சரியல்ல.
நீங்கள் சிம்மாசனத்தை விட்டு இறங்கி வந்து கீழே நில்லுங்கள். நான் அங்கே அமர்ந்து உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன் என்று தெனாலி ராமன் சொன்னதும், அரசர் அவனை அரியணையில் உட்கார வைத்து விட்டு கீழே இறங்கி நின்றார்.

உடனே தெனாலி ராமன், ”யாரங்கே இந்த மதிகெட்ட மன்னனை சிறையில் அடைத்து சித்திரவதை செய்யுங்கள்என்னு கட்டளையிட்டான். அரசனும் அவையோரும் திகைத்துப் போய் நிற்கவேதெனாலி சிரித்துக் கொண்டே, “அரசே பயப்பட வேண்டாம். நான் அரசனாக நடித்தேன். அவ்வளவு தான். சற்று முன்னர் தாங்கள் அமர்ந்திருந்த அரியணையில் இப்போது இறைவன் என்னை அமர வைத்து உங்களை என் ஆணைக்கு அடி பணிய வைக்கும் சாதாரண மனிதனாக மாற்றி விட்டார். இதைத் தான் இறைவன் இப்போது செய்தார்.. ஆண்டியை அரசனாக்கவும், அரசனை ஆண்டியாக்கவும் ஆண்டவன் ஒருவனாலேயே முடியும்.

கிருஷ்ணதேவராயர் உண்மையை உணர்ந்து இறைவனுக்கும் தெனாலி ராமனுக்கும் நன்றி கூறினார்...

எல்லாம் இறைவன் செயல்.



கருத்துகள் இல்லை: