30 அக்., 2018

இன்று ஒரு தகவல்-111: சென்னையில் 15 ரூபாய்க்கு மதிய மூலிகைச் சாப்பாடு

♥சென்னையில் 15 ரூபாய்க்கு மதிய மூலிகைச் சாப்பாடு....

♥ஒரு டீ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிற இந்தக் காலத்தில், 15 ரூபாய்க்கு மதிய சாப்பாடு கிடைக்கிறது, அதுவும் சென்னையில் கிடைக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
நம்பவில்லை என்றால் சென்னை சென்ட்ரல் அருகேயுள்ள ரிப்பன் பில்டிங்கிற்கு செல்லுங்கள்.

♥அங்கிருக்கும் மூலிகை உணவகத்தில் தான் 15 ரூபாய்க்கு மதிய சாப்பாடு தருகிறார்கள். ஒரு கப் புழுங்கலரிசி சாதம், சாம்பார், காரக்குழம்பு, ரசம், இஞ்சி, கறிவேப்பிலை போட்டு தாளித்த மோர், ஏதேனும் ஒரு காய்கறி அல்லது கீரைக்கூட்டு எல்லாம் சேர்த்து 15 ரூபாய்தான். அதுவும் வாழை இலையில் சுடச்சுட சாப்பிடக் கிடைக்கிறது.

♥முக்கியமான விஷயம், இங்கு வழங்கப்படும் உணவுகள் எல்லாமே மருத்துவக்குணம் நிரம்பியவை. ஆவாரம்பூ சாம்பார், முருங்கைக்கீரை சாம்பார், முடக்கற்றான் சாம்பார், சுண்டவற்றல் காரக்குழம்பு, காராமணி காரக்குழம்பு, பூண்டு குழம்பு, வேப்பம்பூ ரசம், மணத்தக்காளி ரசம், கொள்ளு ரசம் என தினம்தினம் ரெஸிப்பிக்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

♥சாப்பாடு மட்டுமின்றி, கீரை சாதம், கறிவேப்பிலை சாதம், புதினா சாதம், மல்லி சாதம், முடக்கற்றான் சாதம், தூதுவளை சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் என வெரைட்டியான சாத வகைகளும் இங்கு கிடைக்கின்றன.
காலையில் கம்பு, திணை, சாமை, துளசி, ஆவாரம்பூ, கறிவேப்பிலை, முடக்கற்றான், தூதுவளை ஆகியவற்றில் இட்லி, தோசை வகைகளும் கிடைக்கின்றன.

♥மேலும், மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் சூப், ஜூஸ், திணை உருண்டை, சுய்யம், வாழையிலை கொழுக்கட்டை, சிறுபருப்பு பாயசம், சோள பணியாரம், உளுந்தங்களி, கொள்ளு சுண்டல் என சிற்றுண்டி வகைகளும் இங்கு கிடைக்கின்றன.

♥15 ரூபாய்க்கு எப்படி மதிய உணவு தர முடிகிறது? இந்த உணவகத்தை நடத்திவரும் சித்த மருத்துவர் வீரபாபுவிடம் கேட்டேன்.
“கடந்த 8 வருடங்களாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறேன். ஆரம்பத்தில் நடத்துவது சிரமமாகத்தான் இருந்தது. 15 ரூபாயில் 1 ரூபாய் வாழை இலைக்கே சரியாகிவிடும். ஆனால், சிற்றுண்டிகள் விற்பனை செய்யத் தொடங்கியபிறகு. அதில் கிடைக்கும் லாபத்தை, மதிய உணவில் பகிர்ந்து கொள்கிறேன்” என்கிறார் வீரபாபு.

♥குறைந்த விலையில் உணவு வழங்குவதால், மாநகராட்சி இவரிடம் இடத்துக்கான வாடகையோ, கரண்ட் பில்லோ வாங்குவதில்லை. அது இவருக்கு உதவியாக இருக்க, மக்களுக்குப் பசியாற்றுவதில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி வருகிறார் வீரபாபு.

♥மாநகராட்சி அலுவலகத்துக்குள் இந்த உணவகம் இயங்கி வருவதால், அரசு விடுமுறை நாட்களில் இந்த உணவகம் இருக்காது. மற்ற நாட்களில் காலை முதல் மாலை வரை திறந்திருக்கும் இந்த உணவகத்தில், யார் வேண்டுமானாலும் வந்து சாப்பிட்டுச் செல்லலாம்.
“விலையும் குறைவா இருக்கு, சாப்பிடறதுக்கும் ருசியா இருக்கு, ஒடம்புக்கும் நல்லதுனால நாம் இங்க அடிக்கடி வந்து சாப்பிடுவேன்.

♥என்னை மாதிரி ஏழைங்களுக்கு இந்த சாப்பாடு வரப்பிரசாதம்” என்கிறார் துப்புரவுத் தொழிலாளியான முத்து.

♥கண்ட கண்ட ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளைச் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொண்டு, பர்ஸுக்கும் வேட்டு வைக்கிற உணவகங்களுக்கு மத்தியில், மூலிகை உணவகத்தின் மகத்தாண பணி போற்றத்தக்கது.

♥நீங்களும் ஒரு முறை சென்று சாப்பிட்டு கூறுங்கள்.......
--------------
நல்லநேரம்♥
உலகத்தமிழ் மங்கையர் மலர்♥

கருத்துகள் இல்லை: