27 நவ., 2018

குட்டிக்கதை-35: சிட்டுக்குருவியின் காதல்

சிட்டுக்குருவி ஒரு மலையை காதலித்து வந்தது.
தினந்தோறும் அது மலையிடம் வரும். தன் சின்ன அலகால் மலையை கொத்திக்கொத்தி தன் காதலைச் சொல்லும்.

மலை மவுனமாகவே இருந்தது. சிட்டுக்குருவி மனம் தளரவே இல்லை.

முன்பெல்லாம் தினம் ஒருமுறை தான் மலையிடம் வரும். இப்போது காலை,மாலை, இரவு என்று சிட்டுக்குருவி மலையிடம் வர ஆரம்பித்தது.

இரை தேடப்போகாமல் மலையே கதி என்று இருந்ததால் சிட்டுக்குருவி இளைக்க ஆரம்பித்தது.

சாப்பாடும் இல்லாமல் பசியும் தாளமுடியாமல் சிட்டுக்குறுவி பறக்கவே முடியாமல் உணர்விழந்து தவழ்ந்தது.

அப்போதும் மலை மவுனமாகவே இருந்தது.

சிட்டுக்குருவி மெல்லமெல்ல தவழ்ந்து மலை உச்சிக்கு வந்தது. அங்கே ஒரு தீபம் எரிந்து கொண்டு இருந்தது். சிட்டுக்குருவி தீபத்திடம் பேச ஆரம்பித்தது.

"வணக்கம் தீபமே. நான் பலகாலமாக மலையை காதலித்துக் கொண்டிருக்கிறேன். மலை பதிலே சொல்லவில்லை. நீயாவது மலையிடம் போய் என்னை காதலிக்க சொல்லமாட்டாயா?," என்றது.

தீபம் சிட்டுக்குருவியிடம் மெல்ல பேச ஆரம்பித்தது. "நான்தான் மலை. மலைதான் நான்."

சிட்டுக்குருவி ஆச்சரியத்துடன் தீபத்தை உற்றுநோக்கியது. தீபத்தின் சுடரில் மலை தெரிந்தது.

"சிட்டுக்குருவியே நீ என்னை காதலிப்பது போல்  நிறைய பேர் என்னை காதலிக்கிறார்கள். அத்தனை பேரையும் மலை ஒன்றாய் இருந்து நான் காதலிக்க முடியுமா. அதனால் தான் தீபமாய் இருக்கிறேன். என் சுடரை எடுத்து போய் உன் வீட்டில் தீபமாய் ஏற்று. நான் உன்னுடனே இருப்பேன்", என்றது.

சிட்டுக்குருவிக்கு உடல் சிலிர்த்தது. புது சக்தி வந்தார்ப்போல் இருந்தது. அது தீபத்தின் சுடரை ஒரு சுள்ளியில் ஏந்தி தன் வீடு நோக்கிப் பறந்தது.

அன்பு செய்யும் யாவருக்கும்
அருட்பெரும்ஜோதியாய்
அகக்கடவுள்.

நன்றி: திரு Ps Aravindan

கருத்துகள் இல்லை: