27 நவ., 2018

மக்களின் குமுறல்-3:

திரு சாலமன் பாப்பையா அவர்களின் பதிவு...

20 வயது தொட்ட பிறகும்கூட காதலைப் பற்றிய தெளிவு இல்லாமல் காமச் சகதியில் வழுக்கி விழுந்துகொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கு, விழிப்புணர்வு தர யோக்கியதை இல்லை. ஆனால்,
வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் யாரோடும் பாலுறவில் ஈடுபடலாம் என்று தீர்ப்பளிக்க முடிகிறது. இந்தத்
தீர்ப்பு அவர்கள் ஒழுக்கம் கெட்டு அலையவும் தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்ளவுமே பயன்படப் போகிறது. அதைத் தாண்டி ஒரு பயனும் இல்லை.

வயதுக்கு வந்தோர் யாரும் யாரோடும் உறவு கொள்ளலாம் அது அவர்கள் உரிமை என்பது சட்டமானால், பிள்ளையைப் பெற்றவர்களுக்கு அவர்களைக் கேள்வி கேட்க என்ன அதிகாரம் இருக்கிறது?
தன் மகளோ மகனோ எவனோடும் எவளோடும் சுற்றிவிட்டு வந்தாலும் தாய்தகப்பன் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்கிறதா நீதி மன்றம்?
இதைப் பெற்றவர்கள் ஏற்கப் போகிறீர்களா?

படிக்கும் வயதில் சாட்டிங் டேட்டிங் என்று ஊர்மேய்ந்து கொண்டு சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில், உங்களுக்குத் தேவைப்பட்டால், விருப்பம் இருந்தால் உடலுறவே கொள்ளலாம் என்பது தலைமுறைகளை நல்வழிப்படுத்தவா படுகுழியில் தள்ளவா?

கல்யாணம் ஆன ஆணும் பெண்ணும் விருப்பப்பட்டவரோடு உறவு கொள்வதற்கு ஏன் கல்யாணம் செய்ய வேண்டும். அப்படியே பிடித்தவர்களோடு போகலாமே. தினம் தனக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று கணவன் போவான். மனைவி கேட்பதற்கில்லை.

தினம் ஒருவனைப் பிடித்திருக்கிறதென்று மனைவி விபசாரமும் செய்யலாம். கணவனும் கேட்பதற்கில்லை. என்றால் அதென்ன வீடா, குடும்பமா?. அல்லது விபசார விடுதியா?

வீடுகளை விபசார விடுதிகளாக்கிப், பெண்களை விபசாரிகளாக்கி, ஆண்களை மேலும் ஒழுக்கம் கெட்டலைய வைப்பதுதான் நீதித் துறையின் நோக்கமா?

கணவன் இருக்க, அடுத்தவனைப்
பிடித்திருக்கிறதென்று எத்தனைப் பேரோடும் உறவு கொள்ளும் பெண்ணுக்குத் தனது கணவன் தன் கண்முன்னால் செத்தாலும் இழவுக்குக் கண்ணீர் வருமா? பெற்ற பிள்ளைகளிடம் இனிப் பாசம் வருமா? அன்பே அங்கு அற்றுப் போய்விடில் குடும்ப வாழ்க்கை இனிக்குமா? இருக்குமா?

இந்தத் தீர்ப்பையும் ஏதோ புதுமை என்றும், எதுவும் தப்பாகச் சொல்லவில்லை நுணுக்கமாகப் பார்க்கவேண்டும் என்றும் ஆதரவளிப்பவர்கள், அவர்கள் மனைவிகளையும் சகோதரிகளையும் அடுத்தவரோடு படுக்க அனுப்பிவிட்டு விவாதம் நடத்தட்டும்.

மனைவி மீது உரிமையில்லை. பிள்ளைகள் மீது உரிமை இல்லை. சகோதரிகள்மீது உரிமை இல்லை என்றால், எதன் மீதுதான், எவர் மீதுதான், எவருக்குத்தான் இங்கு உரிமை இருக்கிறது?

விருப்பப்பட்டால் வயதுக்கு வந்தவர்கள் யாரோடும் உறவு கொள்ளலாம் என்று அங்கீகரிக்கப் பட்டுவிட்ட நாட்டில், பெண்கள் இனி எப்படிப் பார்க்கப் படுவார்கள்? எப்படி நம்பப் படுவார்கள்?

இது தப்பென்று தட்டிக் கேட்க கணவன், மனைவி, பெற்றோர்கள் உண்டு என்ற நிலையிலேயே ஆயிரம் அவலங்கள் நடந்த நாட்டில் இனி தப்பில்லை அதைக் கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றாகிவிட்டால், யார் யாருக்குக் கட்டுப்பட்டு ஒழுங்கு வாழ்க்கை வாழப் போகிறார்கள்? கேட்க உரிமை இருந்த போதே நல்ல மனைவிகளும் சந்தேகத்திற்கு உள்ளாகி எத்தனையோ குடும்பங்கள் சிதைந்திருக்க, இனி அது அவரவர் சுதந்திரம் என்ற பிறகு எத்தனை உத்தமமான பெண்கள் வாழ்க்கையை இழக்கப் போகிறார்களோ!

காதல், கணவன், குழந்தை குடும்பம் என்ற அழகான வாழ்க்கை வேண்டும் என்று உண்மையாய் விரும்புகிறவர்களுக்கும் இனி அந்த வாழ்க்கை கிடைக்குமா அல்லது கிடைத்தாலும் நிலைக்குமா?

பொது வெளியில், இதிலென்ன இருக்கிறது அதுவும் ஓர் உணர்ச்சிதானே விருப்பம்தானே என்று யாரும் பேசலாம். அப்படிப் பேசும் யாரும் தம் மனைவிக்குப் பக்கத்து வீட்டுக்காரனைப் பிடித்திருக்கிறது என்றால்

அவனோடு படுத்துச் சுகம் அனுபவித்துவிட்டுவா என்று கூறும் அல்லது, அவனை தன் வீட்டுக்கே அழைத்து மனைவியின் உடம்புப் பசியை ஆசையை தீர்த்து வைக்கச் சொல்லி கட்டிலுக்கு அவனை அனுப்பி அழகு பார்க்கும் மனோதிடம் உள்ளதா?

குடும்ப வாழ்க்கை என்றான பிறகு, தனி மனித உரிமை எங்கே இருக்கிறது? கணவன் தவறாகப் போனால், மனைவி குழந்தைகள் வாழ்க்கைச் சீரழியாதா? மனைவி தவறாகப் போனால் கணவன் பிள்ளைகள் வாழ்க்கை கெடாதா? தன்னுடைய எந்தச் செயலின் எதிர் விளைவுகள் அடுத்தவரைப் பாதிக்காதோ அதுவே தனி மனிதச் சுதந்திரம். மற்றதெல்லாம் வரம்புக்கு உட்பட்டது என்பது நீதித் துறை அறியாதா?

பெண்ணின் ஒழுக்கக் கேட்டை விமர்சித்து ஓரெழுத்தெழுதினால் கொந்தளிக்கும் பத்தினிகள் என்னிடம் கோபிப்பதில் நியாயமில்லை. ஏதோ ஒட்டுமொத்த பெண்களும் விபசாரிகள்போல் எண்ணி யாரும் யாரோடும்
படுத்துக் கொள்ளுங்கள் என்று தீர்ப்பளித்துள்ள நீதித் துறைமுன் கோபப்படுங்கள் அத்தனைக் கற்புக்ககரசிகளாக நீங்கள் இருந்தால்!

வயதுக்கு வந்த யாரும் யாரோடும் விரும்பினால் படுக்கலாம் என்பது இந்து மக்களுக்கான சட்டமா இல்லை இந்தியாவில் இருக்கும் அனைத்து மதங்களுக்கும் பொருந்துமா? இதை இஸ்லாத்தும் கிறித்துவமும் இந்து மதமும் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறதா?

பாலியல் சுதந்திரம் எல்லோர்க்கும் உண்டு யாரும் யாரோடும் புணரலாம் எனில், இது இரத்த சம்பந்தமுள்ள உறவுகளுக்கும் பொருந்துமா? ஏனெனில், மேல் நாட்டுக் கலாசாரம் மற்றும் ஆபாசப் படங்களைப் பார்த்தும், குடும்ப உறவுகளுக்குள்ளேயே பாலுறவு கொள்ளும் வேட்கை பெருகி(incest sex) வெறியாகி மகளையே தகப்பனும், மருமகளையே மாமனாரும், சகோதரியையே சகோதரர்களும், சகோதரி கணவன், சகோதரன் மனைவியோடே புணர்ச்சியிலும் கற்பழிப்பிலும் ஈடுபடுவது எப்போதோ தொடங்கிவிட்ட நிலையில், இந்தத் தீர்ப்பு, இப்படியும் உறவு முறை பாராமல் உறவாட உரிமை அளிக்கிறதா?

தீர்ப்பு திரும்பப் பெற்றே ஆக வேண்டும். இல்லையேல் நீதி மன்றங்கள் செங்கல் செங்கல்லாகப் பிரிக்கப் படவேண்டும் அதுவே முடிவு.

தன் குடும்பம், பிள்ளைகள், மனைவி, கணவன், சகோதர சகோதரிகள் ஒழுக்க வாழ்வு வாழ்ந்து உயரவேண்டும் என்று விரும்புகிறவர்களும்,

காலம் காலமாக தன் இனம் தன் மதம் கட்டிக்காத்த அழகான நெறி மிக்க வாழ்க்கை முறை சிதைந்து போக அனுமதிக்க முடியாது என்று நினைப்பவர்களும் மற்றும்
ஒவ்வொரு இந்திய குடிமக்களும் இந்தத் தீர்ப்புக் எதிராகப் போராடுவார்கள். இல்லையேல், நாடும் வீடும் மக்களும் எதிர்காலச் சந்ததிகளும், நாம் காத்த பண்பாடும், மத ஆன்மிக தெய்வக் கோட்பாடுகள் சகலமும் நம் கண்முன்பே சரிந்து விழுவதைப் பார்க்க வேண்டியவர்கள் ஆவோம்!

கருத்துகள் இல்லை: