29 ஜன., 2019

குட்டிக்கதை-76:

ஒருமுறை, புத்தர் தன் ஆசிரமத்தைச் சுற்றி நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது ஒரு சீடர் தனக்கு ஒரு புதுச் சால்வை வேண்டுமென்று அவரைக் கேட்டார்.

"பழைய சால்வை என்ன ஆயிற்று?" என்று புத்தர் வினவினார்.

சீடர் சொன்னார், "அது மிகவும் பழையதாகி விட்டதால் அதைப் படுக்கை விரிப்பாகப் பயன்படுத்துகிறேன்" என்று.

"அப்படியானால், பழைய படுக்கை விரிப்பு என்ன ஆயிற்று?" என்று கேட்டார் புத்தர்.

"அது பல இடங்களில் கிழிந்து விட்டதால், பிரித்துத் தைத்துத் தலையணை உறைகளாகப் பயன்படுத்துகிறேன்" என்றார் சீடர்.

"அது சரி, முன்பாகவே தலையணை உறைகள் இருந்திருக்குமே, அவை எல்லாம் என்ன ஆயின?"

"அவை மிகவும் தேய்ந்து விட்டன. ஆகவே இப்போது அவற்றை மிதியடியாகப் பயன்படுத்துகிறேன்."

"ஏற்கெனவே இருந்த மிதியடி என்னவாயிற்று?" என்றார் புத்தர் விடாமல்.

"அது மிகவும் தேய்ந்து, அதிலுள்ள நூல்கள் சிறு சிறு இழைகளாகவே வந்து விட்டன. அவற்றை விளக்குகளுக்குத் திரியாகப் பயன்படுத்துகிறேன் குருதேவா!" என்றார் சீடர் சலிப்படையாமல்.

புத்தர் புன்னகை புரிந்தார்.

நன்றி: Ps அரவிந்தன், முகனூல்

கருத்துகள் இல்லை: