5 ஜன., 2020

குட்டிக்கதை

அலெக்சாண்டர் இந்தியாவிற்கு புறப்பட்டபோது, டயோஜனீசைக் காணச் சென்றான்.அந்த காலத்தில் அவர் மகா ஞானியாகத் திகழ்ந்தவர்.அவர் "அலெக்சாண்டரிம் எங்கே போகிறாய்? எதற்காகபோய்கிறாய்?" என்று கேட்டார்.

அதற்கு அலெக்சாண்டர், "ஆசியா முழுவதும் வெல்லப் போகிறேன் " என்றான்.

"அதை வென்றபின் என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டார்.

"இந்தியாவை வெல்வேன்" என்றான் அலெக்சாண்டர்.

"அப்புறம் "

"உலகத்தையே வெல்வேன் " என்றான்.

அப்போது டயோஜனிஸ், ஆற்றங்கரை மணலில் நிர்வாணமாக வெயில் காய்ந்து கொண்டிருந்தார்.

"உலகம் முழுவதும் வென்றபின் என்ன செய்ய போகிறாய்?" என்று மீண்டும் கேட்டார்.

"நான் அதற்கு பிறகு நிம்மதியாக ஓய்வெடுப்பேன்" என்றான் அலெக்சாண்டர்.

அந்தப் பதிலைக் கேட்ட ஞானி சத்தமாக சிரித்தார். சற்று தூரத்தில் படுத்திருந்த தனது நாயை கூப்பிட்டார்.அது அவர் அருகில் வந்து நின்றது.

டயோஜனிஸ் அந்த நாயைப் பார்த்து, "கேட்டாயா இவர் சொல்வதை? உலகத்தையெல்லாம் வெற்றி கொண்ட பிறகு,இந்த மனிதன் ஓய்வெடுக்க போகிறாராம்!.இங்கே நாம் ஒரு சிறு இடத்தைக் கூட வெல்லாமல் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறோம்!" என்றார்.

இப்படி தன் நாயிடம் சொல்லி விட்டு, அலெக்சாண்டரிடம்,"ஓய்வு தான் உன்னுடைய கடைசி இலட்சியம் என்றால் ,இந்த அழகான ஆற்றங்கையில் என்னுடனும், என் நாயுடனும் நீ இப்போதே சேர்ந்து கொள்ளலாமே? இங்கே நம் எல்லோருக்கும் தேவையான இடம் இருக்கிறது.நான் இங்கே ஓய்வெடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.கடைசியில் ஓய்வெடுப்பதற்காக வேண்டி, ஏன் உலகம் முழுவதிலும் துன்ப துயரங்களை உண்டாக்க வேண்டும்? இப்போதே இங்கேயே ஓய்வெடுக்கலாமே?!" என்று கூறினார்.

அலெக்சாண்டருக்கு என்னவோ போலாகிவிட்டது." நீங்கள் சொல்வது அறிவுபூர்வமாகத் தான் இருக்கிறது. ஆனால் நான் இப்போது ஓய்வெடுக்க முடியாது.உலகத்தை முதலில் வென்றுவிடுகிறேன்" என்றான்.

அதை கேட்ட ஞானி, " உலகத்தை வெல்வதற்கும் ஓய்வெடுப்பதற்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. உலகத்தை வெல்லாமல் நான் இங்கே ஓய்வெடுக்கவில்லையா? என்று கேட்டார்.

"நீங்கள் சொல்வது நியாயம் தான். ஆனால் நான் புறப்பட்டாகிவிட்டது. இனி பின்வாங்க வழியில்லை" என்றான் அலெக்சாண்டர்.

அப்போது ஞானி சொன்ன தீர்க்கதரிசனம் தான் பலித்தது.அவர் சொன்னார், " நீ பாதி வழியில் திரும்பி விடத்தான் போகிறாய்.பயணம் முடிந்த பிறகு யார்தான் இதுவரை திரும்பி வந்திருக்கிறார்கள்?"

இந்தியாவை வென்றபிறகு நாடு திரும்புகையில் பாதி வழியிலேயே அலெக்சாண்டர் இறந்து விட்டான்.கிரீசை அவன் அடையவேயில்லை.

எல்லா அலெக்சாண்டர்களும் செத்து தான் போகிறார்கள் பாதி வழியிலேயே!.

அவர்கள் செல்வங்களை சேர்க்கிறார்கள். ஆனால் அவற்றை அனுபவிக்க அவர்களுக்கு நேரம் அமைவதில்லை. அவர்கள் எல்லா இசைக்கருவிகளையும் திரட்டி விடுகிறார்கள்.சரியான தருணத்தில் வாசிக்கும் சக்தியை அவர்கள் இழந்து விடுகிறார்கள். அவர்கள் வெறுங்கையுடன் ஒன்றும் செய்யமுடியாமல் அழ ஆரம்பித்து விடுகிறார்கள்.

அலெக்சாண்டர் இறக்கும் தருவாயில் நான் இறந்தபிறகு கல்லரைக்கு வெளியே என் கைகள்  தெரியும் படி விட்டு விடுங்கள். இந்த உலகத்தையே
வெல்ல நினைத்தவன் கடைசியில் வெறுங்கையுடன் தான் இந்த உலகத்தை விட்டு் சென்றான் என்று இந்த
உலகம் தெரிந்து கொள்ளட்டும்.

நன்றி: திரு. பி. எஸ். அரவிந்தன்,  முகநூல் 

கருத்துகள் இல்லை: