25 பிப்., 2020

குட்டிக்கதை : எஸ்ராவின், "உடைவாளின் பாடல்"

From s.raa's website
குறுங்கதை 15 : உடைவாளின் பாடல்

யுத்தம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போர்வீரனுக்குத் தனது உடைவாள் ஏதோ முணுமுணுப்பது போன்ற சப்தம் கேட்டது.
சொல்வதற்கு உடைவாளிற்கு என்ன இருக்கப்போகிறது என அவன் கண்டுகொள்ளவில்லை.
ஆற்றைக் கடப்பதற்காக அவன் படகிற்குக் காத்திருந்த போது அவனது உடைவாள் பாடத்துவங்கியது. மெல்லிய குரலில் வென்ற நிலத்தை,கொன்ற மனிதர்களைப் பற்றிய பெருமைகளைப் பாட ஆரம்பித்தது .
உடைவாள் கூடப் பெருமை பேசுகிறதே என வியந்தபடியே அந்தப்பாடலை ரசித்தான் போர்வீரன். ஆற்றினைக் கடந்து மறுகரைக்குப் போன போது உடைவாள் சப்தமாக எதிரியின் குருதி சிந்தப்பட்ட போது தான் அடைந்த மகிழ்ச்சியைப் பாடியது. போர்வீரன் அது தனது வீரத்தின் அடையாளம் எனச் சொன்னான்.

கிழக்கு நோக்கி அவன் பயணிக்கும் போது உடைவாள் இன்னும் உரத்த குரலில்“ போரில் இறந்தவர்களின் உடல்கள் ஒன்று போலிருக்கின்றன. சிந்திய குருதி ஒன்று போலிருக்கிறது. போர் என்பது தந்திரம்“ எனப் பாட ஆரம்பித்தது. “இவ்வளவு உரத்து ஏன் பாடுகிறாய்“ எனப் போர்வீரன் உடைவாளைக் கோவித்துக் கொண்டான்.

போர்வீரன் தனது சொந்த ஊரை நெருங்க நெருங்க உடைவாள் “போரில் கால்கள் துண்டிக்கப்பட்ட குதிரையின் வலியை, உடலெங்கும் அம்புகள் பாய்ந்த யானையின் வேதனையைப் பாட ஆரம்பித்தது“. படைவீரன் எரிச்சலுடன் “போதும் உன் பாடல் வாயை மூடு“ என்றான். உடைவாள் அதைப் பொருட்படுத்தவில்லை.
சொந்த கிராமத்தின் நுழைவாயிலுக்குப் போர்வீரன் வந்த போது உடைவாள் பெருங்குரலெடுத்துப் பாடியது

“போர்க் களத்தில் நீயொரு மிருகம். போர்க் களத்தில் நீயொரு கொலையாளி. யார் பொருட்டு யுத்தம் நடக்கிறது. யுத்தத்தால் யார் பலனடைகிறார்கள்“.
போர்வீரனுக்குத் தனது உடைவாளைக் கழட்டி எறிந்துவிடலாமா என்பது போலக் கோபம் பீறிட்டது. ஆனால் உடைவாள் தானே தனது வீரத்தின் அடையாளம் என்றவனாக அவன் சொன்னான்.

“உன் பாடலை சகிக்க முடியவில்லை. வெற்றியைப் பாடு அல்லது வாயை மூடு“.
தொலைவில் போர்வீரனின் வீடு தென்பட ஆரம்பித்தது. வாசலில் ஆட்டுக்குட்டியைத் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தாள் செல்லமகள். வேப்பமரத்தில் கட்டிய ஊஞ்சல் காற்றில் தனியே ஆடிக் கொண்டிருந்தது. உடைவாள் மிகவும் சப்தமாகப் பாட ஆரம்பித்தது.

“எல்லா யுத்தத்திலும் உண்மை தான் முதலில் கொல்லப்படுகிறது போரின் துயரை உன்னை விட வீட்டுப்பெண்களும் குழந்தைகளும் அதிகம் அறிவார்கள். உன் கரங்களில் வீசும் குருதியின் மணத்தைக் குழந்தைகள் கண்டுபிடித்து விடுவார்கள். உன் காயங்களில் உறைந்துள்ள அதிகார வேட்கையை மனைவி அறிவார். போர்வீரனாக வீட்டிற்குள் நுழையாதே.“

போர்வீரன் உடைவாளிடம் பாடலை உணர்ந்தவனாக மன்றாடும் குரலில் சொன்னான்
“போதும் பாடாதே. உடைவாள் மௌனமாக இருக்கும் வரை தான் போர்வீரனின் தலை நிமிர்ந்திருக்கும். நீ பாடத்துவங்கினால் மனசாட்சி விழித்துக் கொள்கிறது, குற்றவுணர்வில் சிரம் தாழ்கிறது. போரில் நான் ஒரு ஆயுதம். போரை நான் உருவாக்கவில்லை. போர் எளிய மனிதர்களின் தீர்வில்லை. என் காயங்களைப் போல நீயும் மௌனமாகயிரு.“

அதன்பிறகு போர்வீரனும் பேசவில்லை. உடைவாளும் பாடவில்லை.

நன்றி: திரு & திருமதி எஸ்ரா, முகநூல்

கருத்துகள் இல்லை: