From s.raa's website
துறவியோடு நடப்பது.
வியட்நாமைச் சேர்ந்த பௌத்த துறவி திக் நியட் ஹான் (Thich Nhat Hanh) ஒரு ஜென் மாஸ்டர். வியட்நாமிலிருந்து நாடு கடத்தப்பட்ட அவர் தெற்கு பிரான்சின் போர்டியாக்ஸுக்கு அருகில் Plum Village என்ற மடாலயம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். மனசாந்தி வேண்டும் எவரும் அங்கே வந்து தங்கலாம். தியானம் பயிலலாம். பிக்குகள் மற்றும் பிக்குணிகளுக்கான பயிற்சிக்கூடமாகவும் இது செயல்படுகிறது.
திக் நியட் ஹானின் வழிகாட்டுதலைப் பற்றிய ஆவணப்படமே Walk with Me. இப்படம் பிளம் கிராமத்திற்கு வரும் பயணிகளைப் பற்றியும் அங்கு நடைபெறும் துறவு வாழ்க்கை பற்றியும் விரிவாக விளக்குகிறது.
படத்தின் துவக்கக் காட்சியில் அதிகாலையில் துறவி திக் நியட் ஹான் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார். அவருடன் இணைந்து இளந்துறவிகள் நடக்கிறார்கள். காற்றில் நாணல் அசைவது போல அத்தனை அழகாகச் செல்கிறார்கள்.
அந்த நடையில் வேகமில்லை. ஒவ்வொரு அடியும் கவனத்துடன் நிதானத்துடன் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் முன்வைக்கப்படுகின்றன. நடத்தலே தியானம் தான் என்கிறார் திக் நியட் ஹான். அதாவது நடக்கையில் உடலும் மனமும் ஒன்று குவிய வேண்டும். எதை எதையோ மனதில் நினைத்தபடி, குழப்பத்துடன், கவலையுடன் நடக்கக் கூடாது.
நடப்பது என்பது வானில் மேகங்கள் செல்வதைப் போன்றது. நாம் இயற்கையோடு ஒன்று கலந்துவிட வேண்டும் என்கிறார்.
துறவி திக் நியட் ஹான்னுடன் நடப்பவர்களில் பெரும்பான்மை இளைஞர்கள். அவர்கள் முகத்தில் தான் எத்தனை மலர்ச்சி. மலர்களின் மீது நடந்து போவது போல மண்ணில் நடக்கிறார்கள். குனிந்தபடியே நடக்காமல் சில அடிகளுக்கு ஒரு முறை தலையை உயர்த்தி வெளிச்சத்தை எதிர்கொள்கிறார் திக் நியட் ஹான்.
The Miracle Of Mindfulness என்ற அவரது நூல் லட்சக்கணக்கில் விற்பனையாகியுள்ளது. அதில் புத்தனே அருகிலிருந்து சொன்னாலும் நீ தான் எதையும் உணர வேண்டும். நீ தான் மனதைப் பயிற்சி செய்ய வேண்டும். ஆகவே நீ உன்னை அறிந்து கொள்வது முக்கியம்.
வியட்நாமில் கர்ப்பப்பையைக் குழந்தையின் அரண்மனை என்றே சொல்வோம். உண்மையில் கர்ப்பத்தில் ஒருவன் அரச வாழ்க்கையை மேற்கொள்கிறான்
ஒரு காலத்தில் நாம் தாயின் கர்ப்பத்திலிருந்தோம். தாயே நமக்கான உணவை உண்டாள். தாயே நமக்கான காற்றைச் சுவாசித்தாள். தாயே நம்மைப் பாதுகாத்தாள். பிறந்து இந்த உலகிற்கு வந்த நாள் முதல் அந்தப் பாதுகாப்பு உணர்வு இல்லாமல் போய்விட்ட பயம் அடிமனதில் இருக்கிறது. இதுவே ஆதிபயம். அந்தப் பயம் தான் கிளைவிட்டு வேறு பயங்களாக உருமாறியிருக்கிறது. நீங்கள் உங்களுக்குள் இருக்கும் குழந்தையிடம் தாயைப் போல உன்னைப் பாதுகாப்பேன் என்று உரையாடுங்கள். நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.
புத்தரும் நம்மைப் போலவே பயத்தைச் சந்தித்தார். ஆனால் அவர் பயத்திற்கு அடிபணியவில்லை. மாறாக அதை வென்றார். பயத்தின் ஆணிவேரை அடையாளம் கண்டதுடன் அதை அகற்றவும் செய்தார்..
தாயுடன் தொப்புள் கொடி உறவு கொண்டிருப்பதைப் போலவே சூரியனுடன் சந்திரனுடன் நீருடன் நாம் உறவு கொண்டிருக்கிறோம். அந்தத் தொப்புள் கொடியை நாம் அறிவதில்லை.
நீங்கள் எதையும் ஆழ்ந்து அறியத் துவங்கினால் விழிப்புணர்வு உருவாக ஆரம்பிக்கும். ஆரஞ்சு பழத்தினுள் சூரியன் ஒளிர்வதை நீங்கள் உணரும் போது தான் அதை முழுமையாகக் காணுகிறீர்கள்.
கடந்தகாலத்தைத் தூக்கிச் சுமப்பதை விடவும் நிகழ்காலத்தில் வாழ்வது முக்கியம். துயருற்ற மனிதனின் மனதிற்குள் மகிழ்ச்சியை விதைப்பது முக்கியம். அதுவே வாழ்வின் மீதான நம்பிக்கையை உருவாக்கும் என்கிறார் திக் நியட் ஹான்.
இந்தத் திரைப்படத்தில் இளந்துறவிகள் எப்படித் துறவு வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்பது அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. படம் முழுவதும் திக் நியட் ஹான் புன்னகை தவழும் முகத்துடன் சாந்தமாக உரையாடுகிறார். நடக்கிறார். வழிகாட்டுகிறார்.
பிளம் கிராமத்தின் வேறு வேறு பருவ காலங்களும் அதன் தனித்துவமிக்க அழகும் மிகச்சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது
பிளம் உறைவிடத்தில் ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் ஒரு மணி ஒலிக்கிறது. அதைத் துறவிகள் கவனமாகக் கேட்கிறார்கள். அது விழிப்புணர்விற்கான தூண்டுதல். அந்தத் தருணத்தின் அடையாளம். அந்த மணியோசை வாழ்வின் மகிழ்ச்சியை அடையாளப்படுத்துவதாகச் சொல்கிறார்கள்.
துறவி திக் நியட் ஹானோடு நடக்கும் தியான அனுபவத்தைப் பார்வையாளனுக்கும் வழங்குவதே இந்த ஆவணப்படத்தின் சிறப்பு.
நன்றி: திருமதி சந்திரபிரபா ராமகிருஷ்ணன், முகநூல் பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக