28 ஏப்., 2020

குட்டிக்கதை : மூன்று கிளிகள்

எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து
குறுங்கதை 51 மூன்று கிளிகள்

பறவைகளை யாராவது சகோதரிகள் என்று நினைப்பார்களா ?. வள்ளி ஆச்சி அப்படி நினைத்தாள். அன்றாடம் தன்னுடைய வீட்டின் பின் சுவரில் வந்தமரும் மூன்று கிளிகளை அவள் அக்கா தங்கைகள் என்றே கருதினாள். அக்கிளிகளும் சகோதரிகளைப் போலவே ஒன்றாக வாலசைத்தன.

மூன்று கிளிகளைப் போலத் தான் ஆச்சியும் மூன்று பெண்களில் ஒருத்தியாகப் பிறந்தாள். ஆனால் அவளது மூத்த சகோதரிகள் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்கள். ஆச்சிக்கும் வயது எழுபதைக் கடந்தாகிவிட்டது. அரண்மனை போலப் பெரிய வீடு. வீட்டின் ஜன்னல்களை எண்ணத் துவங்கினாலே ஒரு நாள் போய்விடும்.

ஆச்சி ஒருத்தியாக இருந்தாள். ஒரேயொரு பணியாள். ஆச்சி சில நேரம் கிளிகளைத் தன் வீட்டிற்குள் அழைப்பாள். தான் ஒரு கெடுதலும் செய்யமாட்டேன் என்று வாக்குறுதிகள் தருவாள். ஆனால் கிளிகளுக்குச் சுவரே போதுமானதாக இருந்தது.

பெரிய வீடாக இருந்தாலும் பறவைகள் சுவரில் தான் அமருகின்றன. மனிதனைத் தவிர வேறு எந்த ஜீவராசியும் இருப்பிடம் பெரியதாக இருக்க வேண்டும் என்று நினைப்பதேயில்லை.

சிறிய கூடு. சிறிய குகை. சிறிய மரக்கிளை போதுமானதாகயிருக்கிறது. ஆனால் மனிதர்களுக்கு எல்லாமே பெரிதாகத் தேவைப்படுகிறது.

மூன்று கிளிகளில் ஒன்று எப்போதுமே விலகியே அமர்ந்திருக்கும். அது தான் ஆச்சிக்கு விருப்பமான கிளி. அவள் அப்படித்தானிருந்தாள். குடும்பத்தோடு சேர்ந்திருந்தாலும் தனித்திருப்பதே அவள் பழக்கம்

கிளிக்குப் பழம் வைப்பதற்கென ஆச்சி தனியே ஒரு பீங்கான் தட்டு வைத்திருந்தாள். அதுவும் பர்மாவில் வாங்கியது தான்.

மூன்று கிளிகளும் ஒன்றாகப் பழம் தின்றதேயில்லை. ஏதாவது ஒரு கிளி மட்டும் தான் பழத்தைக் கொத்தும். ஆச்சியின் மூத்த சகோதரி அப்படித்தானிருந்தாள். அவளுக்குத் தூங்கி எழுந்தவுடன் சாப்பிட வேண்டும். அதுவும் வயிறு நிறையச் சாப்பிட வேண்டும். காபி என்றாலும் இரண்டு டம்ளர்கள் வேண்டும். இரவில் விழித்துக் கொள்ளும் போது கூட எதையாவது தின்று விட்டுத் தான் தூங்குவாள். அவள் தான் முதலில் இறந்து போனாள். இறந்த அன்று ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வாயில் செல்லவில்லை. வெறும் வயிற்றோடு செத்துப் போனாளே என்று தான் ஆச்சி அழுதாள். கிளிகள் பட்டினி கிடப்பதுண்டா. கிளிகளுக்குக் கடந்த கால நினைவுகள் உண்டா.

மூன்று கிளிகளுக்கு ஒன்று போல வாழ்க்கை இருக்காது தானே.

ஒன்றாக அமர்ந்திருக்கையில் ஏன் கிளிகள் குரலற்று ஒன்றையொன்று பார்த்தபடியே இருக்கின்றன. ஏன் ஒரே திசையைப் பார்க்கின்றன

கிளிகள் சுவரை விட்டுப் பறக்க எத்தனிக்கும் போது ஆச்சி தன்னை அறியாமல் கண்கலங்குவாள். பறவைகள் போனபிறகு வெற்றுச்சுவரைப் பார்த்தபடியே இருப்பாள். பின்பு நீண்ட பெருமூச்சுடன் பின் வாசற்கதவை மூடிவிட்டு தன் அறைக்குத் திரும்பி வருவாள்.

பெரிய வீடுகள் தனிமையை அதிகப்படுத்திவிடுகின்றன. பெருங்கடலின் முன் நிற்கும் சிறு நண்டைப் போல உணரச் செய்கின்றன. ஆச்சி தன் கட்டிலுக்குப் போய்ப் படுத்துக் கொள்வாள். ஆமையின் ஒடு போல அந்த வீடு தன் முதுகோடு சேர்ந்து கொண்டது போலத் தோன்றும்.

கடந்த காலத்தை நினைக்க நினைக்க மனது தண்ணீரில் விழுந்த காகிதம் போலத் துயரமாகிவிடும். அதை மறைத்துக் கொள்வதற்காகவே அவள் கந்தசஷ்டி கவசம் பாடுவாள்.

பின்பு கண்ணாடி டம்ளரிலுள்ள தண்ணீரைப் போல உறைந்து மௌனமாகி விடுவாள்.

அவ்வளவு தான் அவளால் செய்ய முடிந்தது.

••
நன்றி : திருமதி சந்திரபிரபா ராமகிருஷ்ணன்,  முகநூல்.

கருத்துகள் இல்லை: