நன்றி: அறிவுஜீவி சுஜாதாவின் வாசகர்கள் குழு
கற்றதும் பெற்றதும் - சுஜாதா (20-டிசம்பர்-2006)
வி ஜய் டி.வி-யில் ‘யார் மனசுல யாரு?’ என்கிற மலையாளத் தமிழ் நிகழ்ச்சியை (உயிரோட இருக்கா?) அவ்வப்போது பார்க்கிறேன்.
அதை நடத்தும் ப்ரதீப் போல நல்ல ஞாபக சக்தி உள்ளவர்களை சாவன்ட் (savant) என்று வகைப்படுத்துவார்கள்.
‘சாவன்ட்’ என்பது அறிஞர் என்ற பொருள்கொண்ட ஒரு பிரெஞ்ச் வார்த்தையின் மறூஉ.
1887-ல் ஜே.லாங்டன் டவுன் (J. Langdon Down) என்பவர் முதன்முதலாக இந்த ‘சாவன்ட் சின்ட்ரோம்’ என்னும் பிரமிப்பூட்டும் அசாதாரண ஞாபகசக்தியைத் தன் பேஷன்ட் ஒருவரிடம் கண்டு வர்ணித்தார். அந்த ஆசாமி, எட்வர்ட் கிப்பன் எழுதிய The Decline and Fall of the Roman Empire என்னும் தலயணை சைஸ் நூலை வரிவிடாமல் ஒப்பிப்பாராம்.
அதிலிருந்து ‘சாவன்ட்’ என்ற பெயர் சங்கீதம், கலை, கணிதம் போன்ற ஒரு துறை சார்ந்த அபார ஞாபக சக்தி உள்ளவர்களைப் பாகுபடுத்தப் பயன்பட்டது.
சகுந்தலா தேவி உங்களுக்கு ஞாபகம் வரலாம்.54 வயது கிம் பீக் (Kim peek) என்பவரது ஞாபக சக்திஎல்லாத் துறைகளையும் கடந் தது. நண்பர்கள் இவரை ‘கிம்ப்யூட்டர்’ என்று அழைக்கிறார்கள். இன்டர்நெட்டில் தேடி யந்திரத்தைவிட (Search Engine) வேகமாக அவர் தன் நினைவறைகளிலிருந்துதக வலைத் தேடி எடுத்துத் தருகிறாராம்.
படித்துக் காட்டப்படும் புத்தகங்களை உடனே மனப்பாடம் செய்துவிடும் திறமை, அவருக்கு ஒன்றரை வயதிலிருந்தே இருந்ததாம். இதுவரை 9,000 புத்தகங்களை மனப்பாடமாக ஒப்பிப்பாராம்! எட்டிலிருந்து பத்து செகண்டுக்கு ஒரு பக்கம் என்று படித்து முடித்துவிட்டு, அலமாரியில் அந்தப் புத்தகத்தைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்துவிடுவாராம்.
பீக்கின் ஞாபகம் உலக சரித்திரம், விளையாட்டு, திரைப்படங்கள், புவியியல், விண்வெளி, நடிக - நடிகையர் பெயர்கள்,பைபிள் எனப் பலவாறாகப் பரந்து விரிந்துள்ளதாம். குறிப்பாக, அவரது மேற்கத்திய சங்கீத ஞாபகம் அதிநுட்பமானது. சிறு வயதில் ஒருமுறை முணுமுணுத்த இடமெல்லாம் நினைவிருக்கிறதாம். இத்தனைக்கும் அவர் மற்ற விஷயங்களில் மந்தம்! நடை சரியில்லை; சரியாக பட்டன் போடக்கூடத் தெரியாது; எல்லா விஷயங்களிலும் ரொம்ப நிதானம்!
டஸ்டின் ஹாப்மன்’ (Dustin Hoffman) நடித்த ‘மழைமனிதன்’ (Rain man) என்னும் திரைப்படம் இவரைப் பார்த்து எடுத்தது என்பார்கள்.
இவரது மூளையை ஆராய்ச்சியாளர்கள் விட்டு வைப்பார்களா? சி.டி. ஸ்கேன், பெட்ஸ்கேன் மூலம் அலசிப் பார்த்ததில், நமக்கும் அவருக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான் தெரிந்ததாம்.
மூளையின் இடப்பக்க, வலப்பக்க சுளைகளை இணைக்கும் ‘கார்ப்பஸ் கலோஸம்’ (Corpus Callosum) என்பது இவருக்கு இல்லையாம். இதுதான் ஞாபக சக்தி அதிகமாக இருப்பதன் காரணமா அல்லது விளைவா என்று இன்னும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை.
வயசாக வயசாக இவரது நினைவாற்றல் அதிகரித்துக்கொண்டே வருகிறதாம். கடன் வாங்கியது, மனைவியிடம் பொய் சொன்னது, இந்தியா கிரிக்கெட்டில் சொல்லிச் சொல்லி உதை வாங்கியது எதையுமே மறக்க முடியவில்லை என்றால்... கொடுமைதான்!
*****************************************
வி ஞ்ஞானக் குறுங்கதைப் போட்டியில் 15 வயதிலிருந்து (மு.மாணிக்கத்தாய்) 70 வயது வரை (ஆர்.வசந்தா) பலர் உற்சாகமாகக் கலந்துகொண்டார்கள். அனைத்தையும் படித்துப் பார்த்தோம். அவற்றை நான்கு வகைகளில் பிரிக்க முடிந்தது.
1. மனிதனை மிஞ்சிக் காரியம் செய்யும் ரோபோக்கள்;
2. வேற்றுக்கிரகவாசிகள் தொடர்புகொள்வது; அல்லது, மனிதன் வேற்றுக்கிரகம் செல்வது;
3. கால யந்திரக் குழப்பங்கள்;
4. எதிர்காலத்தில் விபரீத மாறுதல்கள்; அல்லது, மாறாத விஷயங்கள் (மெகா சீரியல்கள், நடிகைகளின் தொப்புள் போல);இவற்றில் பின்வரும் 11 குறுங்கதைகளை தட்டிக்கொட்டி ஒப்பேற்ற முடிந்தது.
1) கடவுளோடு பேச்சுவார்த்தை!
பட்டனைத் தட்டினார் கடவுள். ‘இறைவா! யாருக்கு அருள வேண்டும்? யாரை சம்ஹாரம் செய்ய வேண்டும்?’ - கேட்டது கம்ப்யூட்டர்.-
ஆர்.கந்தசாமி, தேவகோட்டை.
2) விளையாட்டு!
அவனுக்கு அந்த ரோபோவுடன் விளையாடுவது ரொம்பப் பிடித்திருந்தது.
விரும்பும் மனிதராக அவனை அது மாற்றிவிடும். ஒரே ஒரு நிபந்தனை... அந்த நபர் இறந்திருக்க வேண்டும்.சிவாஜி, நேரு, சர்ச்சில், ஐன்ஸ்டைன், அன்னை தெரசா... எல்லாம் பார்த்த பின், கடைசியில் அலுத்து, ‘போதும்! என்னைப் பழையபடி மாற்றிவிடு!’ என்றான்.
சிறிது நேரத்தில் அந்த இரண்டு ரோபோக்களும் அங்கிருந்து சென்றன.
- விஸ்வநாத் சங்கர், ஃப்ளாரிடா, அமெரிக்கா.
3) இது கொஞ்சம் ஓவர்!
'அருமைக் கணவனே! எனக்குப் பதிலாக ரோபோ உன் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றுகிறது; சரிதான்.
ஆனால்,இரவு படுக்கவும் பயன்படுத்துவது வேதனையாக இருக்கிறது!’
-ஆர்.வசந்தா (வயது 70), சென்னை -28. - (70 வயதில் இப்படி ஒரு கற்பனை !!)
4) முடிவா, ஆரம்பமா?
பென்ட்டகனில் (PENTAGON) ராணுவத் தலைமை அதிகாரி பொத்தானை அழுத்த, மூன்றாம் உலகப் போர் முடிவானது!
- ஆ.தேவராஜன், ஊட்டி.
5) டெர்மினேட்டர்!
‘‘அப்பா! செடி, கொடியெல்லாம் விதையிலிருந்தா வருது? மிஸ் சொன்னாங்களே..?’’
‘‘வந்துதும்மா ஒரு காலத்துல..!’
’‘டெர்மினேட்டர் ஜீன்கள் செய்த நாசத்தை இவளுக்கு எப்படி விளக்குவேன்’ என்று யோசித்தார் அப்பா.-
டி.சபேசன், மயிலாடுதுறை.
6) பிணவறையில் ஓர் உரையாடல்!
‘‘இறந்தவர் யாருப்பா?’’ என்றார் மருத்துவர்.
‘‘நான்தாங்க!’’ என்றார் வந்தவர்.- மு.மாணிக்கத்தாய் (வயது 15), சென்னை- 61.
7) க்ளோனிங் கோளாறு!
மூட்டையைப் பிரித்து, கவர்ச்சி நடிகையை வெளியே எடுத்தார்கள்.
‘‘பிரச்னை பண்ணாம வந்தாளா?’’
‘‘இல்லை பாஸ், படு சாது!’’
‘‘டேய்... என்னடா இது, அவளை மாதிரியே இருக்கிற ஒரு ரோபோவைக் கடத்திட்டு வந்திருக்கீங்களேடா!’’
‘‘எ... எப்படி பாஸ் சொல்றீங்க?’’
‘‘தொப்புளே இல்லையேடா!’’
- எம்.ஆர்.மூர்த்தி, மும்பை-82.
😎 கடைசி நாள்!
மாலை அணிவித்து வழியனுப்பினர்.
வெளியே, ‘முதியோர் வாழ்வு முடிக்கும் வாகனம்’ காத்திருந்தது.
- ஆர்.சேதுராமன், சென்னை-21.
9) முடியவில்லை!
‘‘என்ன, கதையைப் பாதியில நிறுத்திட்டே?’’
‘‘பேட்டரி வீக்’’ என்றது ரோபோ.
- சி.ஆர்.நாகராஜன், பொள்ளாச்சி.
10) ஆராய்ச்சி முடிவு!
‘‘அடடே! இங்கே பார்த்தாயா... இவனுக்குக் கண், காது, மூக்கு, வாய், கை, கால் எல்லாமே இடம் மாறியிருக்கின்றன. இவன் பூமியைச் சேர்ந்தவன்!’’
- நரேஷ், சென்னை-15.
11) வாரிசுகள்!
‘‘அந்தக் கிரகத்தில்தான் ஒரு காலத்தில் நம்ம தாத்தா, பாட்டிங்கள்லாம் இருந்தாங்களாம்!’’ என விண்ணில் சுட்டிக் காட்டினான் அந்தச் சிறுவன்.
‘‘பேரு?’’
‘‘பூமியோ என்னவோ சொல்றாங்க!’’
-பி.ராஜி,சென்னை-80.
************************************
எ.பி.க!
பத்து வருஷமாச்சு
வயித்துல இன்னும்
ஒரு புழு பூச்சிக்கு
வழி இல்லைன்னு
மருமகளை வெளித்தள்ளும்
அம்மாவே -
என் மேல்
எவ்வளவு நம்பிக்கை உனக்கு!- ப.சுப்பிரமணி
‘முகம் தேடும் முகங்கள்’
(தொகுப்பு: வலம்புரி லேனா)
அனைவருக்கும் நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக