29 ஜூன், 2020

இன்றைய தத்துவம் : அழகியல் (AESTHETICS)

[6/28, 14:09] Neyam-Satya: இன்றைய தத்துவம் 👇🏽

Aesthetics என்று அழைக்கப்படும்
அழகியல் கோட்பாடு
[6/28, 14:29] Neyam-Satya: அழகியல் 

Aesthetics அல்லது æstheticsஅல்லது esthetics என்பது அழகின்தன்மையை ஆராய்வதும், கலைப்படைப்புகளில் அழகை இனம் கண்டு இரசிப்பதும், சுவையுடன் படைப்புகளைப் படைப்பதும் பற்றிய இயலாகும். அறிவியல் வழியே உணர்வுகளையும் உணர்வுகளுடன் இணைந்த உணர்ச்சிகளையும் ஆராயும், மதிப்பு, உள்ளுணர்வுகள் மற்றும் இரசனை இவற்றை அளவிடும் கல்வியாகவும் வரையறுக்கலாம்.சற்றே விரிவான நோக்கில், கலை, பண்பாடு மற்றும் இயற்கையைபிரதிபலிக்கும் துறையாகவும் அறிஞர்கள் வரையறுக்கின்றனர்."அழகியல் உலகை புதிய கோணங்களில் காணவும் புரிந்து கொள்ளவும் முயல்கிறது.


இந்திய மரபில் அழகியல் இன்பத்தை ‘ரசம்’ எனும் பதத்தினால் குறித்தனர். இப் பதம் இருக்கு வேதத்திலிருந்து தோன்றியிருப்பதைக் காண முடிகின்றது. இருக்கு வேதத்தில் சோமாவதை எனும் தாவரத்திலிருந்து பெறப்பட்ட பாணத்தைக் குறிக்க ரசம் பயன்பட்டது (சோமரசம்). அவ்வாறே கலை வெளிப்பாடுகளில் பல்வேறு சுவைகளை உள்ளடக்கிய பண்பு, ரசம் எனும் எண்ணக்கருவை தருகின்றது. ரசக் கோட்பாட்டின் விரிவான வளர்ச்சியை பரதரின் நாட்டிய சாஸ்திரத்தில் காணமுடிகின்றது. நாட்டிய சாஸ்திரம் மிகத் தொன்மையான நூலாகும். அதில் நாடகங்களின் மனவெழுச்சி விளைவுகளைத் துல்லியமாக இனங்காட்டக் கூடியவாறு ரசக் கோட்பாட்டினை பரத முனிவர் வைத்துள்ளார். அதில்,

சிருங்காரம் – காதல்

ஹாஸ்யம் – நகைச்சுவை

கருணை – இரக்கம்

ருத்திரம் – கோபம்

வீரம் – திண்டிறல்

பயானகம் – அச்சம்

பீபஸ்தம் – வெறுப்பு

அற்புதம் – வியப்பு

பரதர் முன்வைத்த எட்டு ரசங்களோடு அபிநவகுப்தர் முன்வைத்த சாந்தம்எனும் ரசம் சேர்ந்து ‘நவரசங்கள்’ எனப்படுகின்றன. ரசங்கள் பொதுவாக உடலால், உரையால், உடையால் துலக்கம் பெற்றிருந்தன.
[6/28, 14:44] Neyam-Satya: அழகியல் : ஒரு மெய்யியல் பகுப்பாய்வு

அறிவுப்பூர்வமான பரந்த முறையியல் அணுகுமுறை கொண்ட ஒரு நுண்ஆய்வே மெய்யியல் (Philosophy) ஆகும். அதாவது, யதார்த்தத்தைப் பற்றிய விரிவான முறையியல் நுணுக்கப் பார்வையைச் செலுத்துவதே மெய்யியல் எனப்படுகின்றது. எனவே தான் மெய்யியலானது அழகியல் உட்பட விஞ்ஞானங்கள் அனைத்துக்குமான பொதுவான முறையியல் அடிப்படைகளைத் தருகின்றது. முறையியல் என்பது விஞ்ஞானப் பூர்வமான அறிவைப் பெறுவதற்குரிய கருவியாகும். புராதன காலம் முதலே அழகியலும் மெய்யியலின் ஒரு பிரிவாகவே வளர்ந்து வந்துள்ளது.

அழகியல் ஆங்கிலத்தில் Aesthetics எனப்படுகின்றது. Aesthetics என்னும் சொல் Aisthetickos என்கின்ற கிரேக்க சொல்லை வேர் சொல்லாகக் கொண்டு உருவானது. கிரேக்க சொல் உணர்திறன், புலனுணர் திறன் (Sense Perception) என்று பொருள்படும். Aesthetics என்னும் சொல்லை முதன்முதலாக பிரடரிக் ஊல்ஃப் என்னும் பிரஞ்சு மெய்யியலாளரின் மாணவரும், ஜெர்மன் தேசத்து கலைக்கொள்கையாளருமான அலக்சாண்டர் பாம்கார்ட்டன் (Alexander Baumgarten; 1714-1762) என்பவரினால் பயன்படுத்தப்பட்டது. அவர் aisthetica என்னும் நூலை எழுதினார். அதன் முதற்பாகம் 1750ல் வெளியிடப்பட்டது. அதிலிருந்து இந்தச் சொல் விஞ்ஞான அறிவின் ஒரு துறையைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படலாயிற்று. இவரது காலப்பகுதியிலிருந்தே எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் அழகியல் என்பது Aesthetics என்ற பெயரினால் வழங்கப்பட்டது. ஆனால், இதை வைத்துக் கொண்டு, விஞ்ஞான ரீதியான அழகியல் பாம்கார்ட்டன் காலத்திலிருந்துதான் தொடங்கியது என்று எந்த விதத்திலும் பொருள் கொண்டுவிடக் கூடாது. அதன் தொடக்கம் நம்மைத் தொன்மை காலத்துக்கே அழைத்துச் செல்கின்றது.

அழகியல் குறித்த விசாரணைகள் புராதன கிரேக்க காலத்திலிருந்தே பரீட்சயமானவை. ‘அழகு என்றால் என்ன என்று சொல்வாயா?’ என்றார் சோக்ரட்டீஸ் (469-399 BC). இந்த வினாவுக்கான தேடல் இன்றும் தொடர்கின்றது.

உலகில் காணப்படும் காட்சிகளின் அழகினை உய்த்துணர்தலே, அழகியலுக்கு அடிப்படை என்று பிளேட்டோ (428-347 BC) கருதினார். அழகினை எடுத்துக் காட்டும் பொருட்கள் எல்லாவற்றிலும் ஒரு பொதுவான நல்லியல்பு உள்ளது. மனிதன் அழகுடைய பொருட்களில் ஈடுபட்ட பின் அழகிய அமைப்புகளில் ஈடுபடுகிறான். இந்த நிலைக்குப்பின் மனிதன் அழகு என்னும் கருத்தையே துய்க்கும் நிலையை அடைகிறான். ஒழுங்கும் அமைப்பும் அழகுக்கு அடிப்படையானவை. இக்கருத்துக்களை பிளேட்டோவின் ‘சிம்போசியம்’ என்னும் நூலிற் காணலாம்.

கிரேக்க இலக்கியத்திற் காணப்படும் மெய்யியல் கோட்பாடுகள் அழகியலுக்கு அடிப்படையாக அமைந்தன. மகிழ்ச்சியை ஒரு பொருளில், எழுத்தில் அல்லது ஒலியில் சித்தரிப்பது கலைஞனின் குறிக்கோள் ஆகும். பொருள், மனிதன், நிகழ்ச்சிகள் போன்றவற்றை நுட்பமாக மெய்போல் படைப்பதே கலை ஆகும். இதில் பார்த்துச் செய்தலின் கூறுகள் இருந்த போதிலும் ஒரு பொதுவான முழுத்தத்துவம் இருத்தல் வேண்டும். இக்கருத்தையே அரிஸ்டோட்டில் (384-322 BC) வற்புறுத்தினார்.

காண்ட் (1724-1804) போன்ற மெய்யியலாளர்கள் பொருள்களால், எழுத்துப் படைப்பால், காட்சியால் மக்கள் உள்ளத்தில் எழுவதே அழகு என்றும், அறிவுக்கும் கற்பனைக்கும் பொருந்திய நிலையில் இருக்கும் பொருள்களே அழகுடையனவாகக் கருதப்படல் வேண்டும் என்றும் கூறினார்கள் (வாழ்வியற் களஞ்சியம் ; தொகுதி ஒன்று ; 1991 : 894).

ஹெகல் (1770-1831) முதன்முதலில் ‘அழகியல்’ என்ற சொல்லை அதற்குப் பயன்படுத்தப்படும் பொருளில் அறிமுகப்படுத்தினார். இவருக்கு முன்னர், காண்ட் கூட ‘அழகியல்’ என்ற சொல்லை ‘புலன் அறிவு’ என்ற வகையிலேயே பயன்படுத்தினார். ஹெகல் அதனை அழகியல் கோட்பாட்டுத் தொடர்புடைய ஆழமான கருத்தில் பயன்படுத்தினார்.

காண்ட் மெய்யியல் பற்றிக் கூறிய பல கருத்துக்கள் அழகியல் வரலாற்றிலும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. அவர் தன்னுடைய ‘தீர்ப்புக்கள் பற்றிய விமர்சனம்’ என்ற நூலில் கூறும் பல கருத்துக்களை மேலும் தெளிவாக ஆழமான கருத்தோடு ஹெகல் முன்வைக்கின்றார். குறிப்பாக உயர்ந்த ரசனைப் பற்றிய கருத்தில் பகுப்பாய்வு, சார்பற்ற அழகு, அகநிலை சார்ந்த பொதுமை, கடந்த நிலைப்பகுப்பாய்வு போன்ற காண்ட் உடைய எண்ணக் கருக்களுக்கூடாக ஹெகலும் தனது கருத்தை எடுத்துக் கொண்டார். காண்ட் உடைய அழகியல் பற்றிய கருத்து அகநிலை சார்ந்த அனுபவத்தின் பொதுமையாக வெளிப்படுகின்ற போதிலும், அவற்றுக்கான அறிவியல் சார்ந்த அல்லது புலச்சார்பற்ற கூறுகளை வெளிப்படுத்துவதிலும் அவர் ஈடுபட்டிருந்தார். ஹெகல் அதனை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட இயங்கியல் வாத அடிப்படையில் அறிவியலுக்கூடாக வெளிப்படுத்தினார். காண்டின் அகநிலைசார்ந்த உய்த்தறிமுறை ஹெகல் உடைய இயங்கியல் வாத மெய்யியல் அமைப்புக்குள் புறநிலை சார்ந்த கருத்துவாதமாக வெளிப்படுகிறது. அதனுடைய மெய்யியல் அமைப்பின் உள்ளார்ந்த பகுதியாகவே அழகியல் அமைகின்றது.

மார்க்சிய அழகியலின் தோற்றமானது, அழகியல் வரலாற்றிலும், கலை விமர்சனத்திலும் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திற்று. மனிதனின் உலகு பற்றிய அழகியல் உணர்திறனைக் கட்டுப்படுத்தும் விதிகளைத் தொகுத்தளிக்க மார்க்சிய அழகியல் உதவுகிறது. இந்த விதிகள் பூரணமாகவும், முழுக்க விரிவாகவும் கலைகளில் தான் வெளிப்படுகின்றன என்று எடுத்துச் சொல்லும் போது, முதன்மையாக அழகியல் என்பது கலையின் சாராம்சம். கலையின் அடிப்படை விதிகள், கலைப்படைப்பாக்கத்தின் இயல்பு ஆகியவை பற்றிய விஞ்ஞானமாக அமைகின்றது. இவ்வாறு அழகியலைப் புரிந்துகொள்ளுதலின் பல்வகைப்பட்ட வெளிப்பாடுகளின் அனுபவங்களை விஞ்ஞான பூர்வமாகத் தெளிவு படுத்துகிறது. இருத்தலுக்கான போராட்டத்தில் மார்க்சிய அழகியல் தற்போது ஓரு முக்கிய களமாகும்.

மார்க்சிய மூலவர்கள் அழகியல் பற்றிய கோட்பாடுகளைத் தனியாக வகுத்துக் கொடுக்கவில்லை. மார்க்சியத்தின் அடிப்படையான இயக்கவியல், வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டும், மார்க்சிய மூலவர்கள் அழகியல் பற்றி அவ்வப்போது உதிரியாகக் கூறியுள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டுமே மார்க்சிய அழகியல் உருவாக்கப்பட்டுள்ளது.

மனித இருப்புக்கு ஓர் அழகியல் பரிமாணம் உண்டு என்றும் இது வரலாற்றுரிதியாக வளர்ச்சி பெறுவது என்றும், மனிதப் புலன்கள் விலங்குகளின் புலன்களிலிருந்து வேறுபட்டு மனிதத்துவம் அடைவது. வான்கோவின் மஞ்சளையும் ஆரஞ்சுப் பழத்தின் மஞ்சளையும் வேறுபடுத்திக் காண்கிற கண், கல்யாணி ராகத்தில் ஓர் அபசுரம் தட்டினால் புரிந்துக் கொள்கிற காது, சுவைப்பதன் மூலமாக ஒவ்வொருவகைத் தேனீரையும், மதுவையும் வேறுபடுத்திக் கொள்கிற நாக்கு, குழந்தையின் மிருதுத் தன்மையையும், பூவின் மென்மையையும், பட்டின் மென்மையையும் தொட்டு உணரும் சருமம், குழப்பமான வாசனைகளிலிருந்து பெட்ரோலின் நெடியை, எரியும் ரப்பரின் நாற்றத்தை, அத்தரின் மணத்தை வெவ்வேறாகச் சொல்லும் மூக்கு. இவை உருவாவது மனிதவயப்படுத்தப் பட்ட இயற்கை மூலமாகவே என்றும் மார்க்ஸ் கண்டடைகிறார். முதலாளித்துவ சமூகத்தின் வரலாற்று, பொருளாதாரச் சுழலில் சிதிலமடைந்த மனிதனை மீண்டும் ஒருமுறை முழுமையானவனாகக் காணும் முயற்சியில் தான், மனித இருப்பில் அழகியல் துறையின் மையமான பங்கை அவர் புரிந்து கொண்டார். மனிதன் ஒரு படைப்பாளி என்பதனாலேயே உலகத்தை அழகுமயமாக்காமல் இருக்க அவனால் முடியாது.

‘புலன்கள் தமது செயல்பாடுகளில் நேரடியான தத்துவஞானிகளாக மாறிவிடுகின்றன. மனிதனின் சுயக் கண்ணோட்டத்திலிருந்து அழகியல் உணர்வு உண்டாகின்றது’ என்று “1844 – பாரீஸ் கையெழுத்துப் படிகள்” நூலில் மார்க்ஸ் குறிப்பிடுகின்றார் (சச்சிதானந்தன் ; மார்க்ஸிய அழகியல் : ஒரு முன்னுரை ; 1985 : 18,22).

அழகியல் துறைப்பிரச்சினைகள் பற்றி மலையளவு நூல்கள் எழுதப்பட்டுள்ளன; எழுதப்படுகின்றன. ஜர்மனிய அழகியல் வாதிகள் (Aestheticians) தங்களுக்கே உரியவாறு வித்தியாசமான கோணங்களில் அழகியலை ஆராய்ந்துள்ளனர். ஆங்கிலய, பிரான்சிய அழகியல்வாதிகள் தங்களுக்கே உரிய நூறு வித்தியாசமான வழிகளில் இப்பிரச்சினையை அணுகியுள்ளனர். காண்ட், ஷெலிங், ஹெகல், ஷோபனவர், றேபட், ஸ்பென்சர் முதலான முன்னணி மெய்யியலாளர்கள் தமக்குரியதனிப்பட்ட சித்தாந்தங்களை இத்துறையில் தந்திருக்கின்றனர் (பார்க்க, எம்.எஸ்.எம்.அனஸ் ; ‘அழகியல் பற்றி அல்-கஸ்ஸாலி’ ; அல்-அக்ஸா வெள்ளி விழா மலர் ; 1980).

வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு அவதானிக்கின்ற பொழுது, அழகியல் என்பது கலைத்துறையுடன் சம்பந்தப்பட்ட ஒரு கலைச்சொல்லாகவே (Technical Term) பயன்படுத்தப் பட்டிருக்கின்றது. கலை- இலக்கிய அனுபவங்களின் கோட்பாடு ரீதியான பொதுமைப்பாடே அழகியலாகும். கலை – இலக்கியங்களை விமர்சன ரீதியில் ஆராய்வதற்குரிய சாதனமாக அழகியல் உள்ளது என்று பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா ‘விமர்சன மெய்யியல்’ (1989:23) நூலில் குறிப்பிடுகின்றார்.

தமிழில் அழகியல் என்பது அழகை ஆய்வுப்பொருளாகக் கொண்ட ஓர் கற்கை நெறியாகவே கொள்ளப்படுகின்றது. 

‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ (1992:52) அழகியல் என்பதை “(கலைகளில்) அழகைப் பற்றிய கொள்கை” என்றே சொல்கின்றது. அழகியல் என்பது அழகு பற்றிய கருத்துக்களும் உணர்வுகளும் ஆகும் என்ற கருத்தே பொதுவாக முன்வைக்கப் படுகின்றது.

அழகு பற்றிய கருத்துக்களும் உணர்வுகளும்தான் அழகியல் என்று கூறுவது பொருத்தமானது அல்ல. அழகுணர்வையும், அழகியலையும் நாம் பிரித்துப்பார்க்க வேண்டும். ஆங்கிலத்தில் Aesthetic, Aesthetics உள என்னும் இரண்டு சொற்கள் உள்ளன. முதலாவது பெயரடை. இரண்டாவது பெயர். இவை இரண்டுக்கும் நிகரான சொல்லாகவே அழகியல் என்ற சொல் தமிழில் பயன்படுத்தப் படுகின்றது. இது பெயரடையாகவும் பெயராகவும் வழங்குகின்றது.

ஆங்கிலத்தில் Aesthetics என்பது பொதுவாக கலை பற்றிய மெய்யியல் (Philosophy of Art ) என்று வரையறுக்கப்படுகின்றது. இது ஒரு தனி ஆய்வுத்துறை ஆகும். கலைபற்றிய எல்லா பிரச்சினைகளையும் இது உள்ளடக்குகின்றது. கலை என்றால் என்ன, கலை எவ்வாறு தோன்றுகின்றது, கலையின் பயன்பாடு என்ன, கலையின் பண்புக்கூறுகள் யாவை போன்ற கலையின் பல்வேறு விடயங்களை இது ஆராய்கின்றது. இவ்வகையில் கலைக்கோட்பாடு (Theory of Art) என்பதும் அழகியல் என்பதும் ஒன்றுதான்.

Aesthetic என்பது கலை அம்சம் அல்லது கலைத்துவம் (Artistic), அழகுணர்வு ( sense of beauty) என்ற பொருளில் வழங்குகின்றது. கலைத்துவமும் அழகுணர்வும் ஒன்றல்ல. அழகுணர்வு என்பது பொதுவானது. நமது அழகு பற்றிய உணர்வினை அது குறிக்கும். கலைத்துவம் என்பது குறிப்பானது. அது கலையோடு சம்பந்தப்பட்டது. கலையின் படைப்பாக்கம் அல்லது செய்நேர்த்தி பற்றியது. கலை இலக்கிய விமர்சனத்தில் இந்த இரண்டாவது பொருளிலேயே அழகியல் என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது (விரிவான விளக்கத்துக்காக பார்க்க, எம்.ஏ.நுஃமான் ; ‘மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்’ ; 1987 : 74 – 83).

அழகியல் என்பது கலை ஏற்படுத்தும் பாதிப்பும் அப்பாதிப்பை ஏற்படுத்துவதற்குக் கலைஞன் கையாளும் வழிமுறைகளும் அவை சம்பந்தமான கொள்கைகளும் ஆகும். எனவேதான் அழகியல் கலைக்குரிய ரசனையின் இயல்பைப்பற்றி ஆராய்கின்றது.

நன்றி: -- எழுத்தாளர்.ஆனந்த் மற்றும் திரு நேயம் சத்யா 



கருத்துகள் இல்லை: