அவர் இந்தியாவின் எடிசன் இல்லை... உலகின் ஒரே ஜி.டி.நாயுடு!
உலகின் பல முக்கிய கண்டுபிடிப்புகளை இந்திய விஞ்ஞானிகள் கொடுத்திருக்கிறார்கள். அதில், கோவையைச் சேர்ந்த ஜி.டி. நாயுடுவுக்கு அதிக பங்குள்ளது.
ஒரு மனிதர், ஒரு துறையில் கில்லியாக இருக்கலாம். ஆனால், ஜி.டி.நாயுடு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ், விவசாயம் என்று பல துறைகளில் கில்லியாக இருந்தார்.
ஜி.டி.நாயுடு
உலக அளவில் மிக முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரராக இருந்தாலும், இதற்கான அங்கீகாரம் ஜி.டி.நாயுடுவுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி, தவிர்க்க முடியாத சக்தியாக வந்தார்
ஜி.டி.நாயுடு.
ஜி.டி.நாயுடுவின் பல கண்டுபிடிப்புகளில், முக்கியமானவற்றை இங்கே பார்க்கலாம்.
ஷேவிங் ரேசர்
இரண்டாம் உலகப் போர் சமயத்தில், ஜி.டி.நாயுடு ஐரோப்பா செல்கிறார். அங்கு பிளேடுகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. ஷேவிங்குக்கு ஒரே பிளேடைத்தான் பயன்படுத்த வேண்டிய நிலை. ஒரு பேக்கரிக்குச் செல்கிறார்.
அங்கு ரொட்டித்துண்டுகளை வித்தியாசமாக வெட்டுவதை பார்க்கிறார் ஜி.டி.நாயுடு. உடனடியாக ஒரு பொம்மை காரை வாங்கி, அதன் மோட்டாரை மட்டும் கழட்டி, பிளேடில் பயன்படுத்திப் பார்க்கிறார்.
சக்சஸ் ஆகிறது. நண்பர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு. ஐரோப்பாவில் காப்புரிமை கிடைக்கிறது. லண்டனில் விற்பனைக்கு வருகிறது. முதல் மாதத்திலேயே 7,500 ரேசர்கள் விற்பனையானது.
ஜுசர்
ஜி.டி.நாயுடு ஒருமுறை சிக்காகோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறார். அங்கு, ஆரஞ்ச் ஜுஸில் இருக்கும் வைட்டமின்கள் குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்த ஒரு பேராசிரியரை சந்தித்தார்.
ஆராய்ச்சிக்காக, அந்தப் பேராசிரியர் ஒரு ஜுசரும் தயாரித்துள்ளார். ஆனால், அதில் ஜுஸ் தயாரிக்கும் போது, ஆரஞ்சின் விதைகள் வீணாவதுடன், சுவையும் மாறுவதாகக் கூறியுள்ளார். சிறிது நேரம் அதுகுறித்து ஆராய்ச்சி செய்த ஜி.டி.நாயுடு, சிம்பிள் காய்ன் ஸ்ப்ரிங் என்ற ஐடியாவை கொடுக்கிறார்.
அதில் ஸ்ப்ரிங் பொருத்தியவுடன், பிரச்னையும் சரியாகிவிட்டது. ஜுசரும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.
உருளைக்கிழங்கு தோல் எடுக்கும் கருவி
உருளைக் கிழங்கு தோல் எடுப்பதற்கு அதிக நேரம் எடுக்கும். ஜி.டி நாயுடு கண்டுபிடித்துள்ள இந்தக் கருவி, உருளைக் கிழங்கில் இருக்கும் தோலை மட்டும் தனியாக எடுத்துவிடும். இதை 1940-களிலேயே அவர் கண்டுபிடித்துவிட்டார்.
கீ வால் கிளாக் (Key Wall Clock)
அந்தக் காலத்தில் இருக்கும் வால் கிளாக்குகளுக்கு, தினமும் கீ கொடுக்க வேண்டும். ஆனால், 1950-ம் ஆண்டு வாரத்தில் இரண்டு முறை கீ கொடுத்தால் இயங்கும் வால் கிளாக்கைக் கண்டுபிடித்தார் ஜி.டி.நாயுடு.
ரேடியோகிராம்
ஜி.டி.நாயுடுவின் யூ.எம்.எஸ் ஃபேக்டரியில் ரேடியோகிராம் தயாரிக்கப்பட்டது. 6 Valves, 4 Band, 4 ஸ்பீக்கர் வசதிகள் இதில் உள்ளன. மேலும்,10 ரெக்காடர்களை மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி கொண்ட ரேடியோகிராமை இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்தியது ஜி.டி.நாயுடுதான்.
பலவகையான ரேடியோகிராம்களை, அவர் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
தமிழ் டயல் ரேடியோ (Tamil dail radio)
தமிழ் டயல் வைத்த ரேடியோவை முதன்முதலாக அறிமுகப்படுத்தியதும் ஜி.டி.நாயுடுதான்.
கட்டட கலவை
கட்டடங்கள் வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக 1950-ம் ஆண்டு, அரிசி உமி மற்றும் சிமென்ட்டை கலந்து ஒரு கலவையை உருவாக்கினார் ஜி.டி.நாயுடு. கட்டடங்களுக்கு அதிக வலுவை கொடுக்கும் அந்தக் கலவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
எலக்ட்ரிக் மோட்டார்
1937-ம் ஆண்டு இந்தியாவில் முதல்முதலாக எலக்ட்ரிக் மோட்டாரை தயாரித்து அறிமுகப்படுத்தினார் ஜி.டி.நாயுடு. விவசாயம் மற்றும் தொழில்துறையினருக்கு இது மிகவும் உதவியாக இருந்தது.
ஏழைகளுக்கு வீடுகள்
அனைத்து ஏழை மக்களுக்கும் ஓர் சொந்த வீடு என்பது ஜி.டி.நாயுடுவின் கனவுத்திட்டம்.
இதற்காக 1950-ம் ஆண்டு ஒரு டிஸைனை உருவாக்கினார். சிங்கிள் பெட் ரூம் ரூ.750, டபுள் பெட் ரூம் ரூ.1,100 வீடுகள் கட்டுவதற்கான, திட்ட வரைவை அரசுக்கு அனுப்பினார். இந்த வீடுகளை ஒரே நாளில் கட்டி முடிப்பதற்கான திட்டத்தையும் அவர் வகுத்திருந்தார்.
இவை மட்டுமல்ல, கால்குலேட்டர், பிளேடு, ஆட்டோமெடிக் டிக்கெட் மெஷின் என்று ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆட்டோமெடிக் டிக்கெட் மெஷின்
ஜி.டி.நாயுடு அறக்கட்டளை பொதுமேலாளர் சுரேஷ் நாயுடு, "ஒரு நபருக்குள் இத்தனை விஷயங்கள் எப்படி இருக்கு முடியும்? என்று நான் அவரை நினைத்து ஆச்சர்யப்படாத நாளே இல்லை. ஜி.டி.நாயுடு 4-ம் வகுப்பு வரைதான் படித்தார்.
தமிழ் மீடியம்தான். அப்படியிருந்தும், வெளிநாடுகளில் ஆங்கிலத்தில் இருந்த தொழில்நுட்பங்களை, நமது ஊருக்குத் தகுந்ததுபோல மாற்றி அறிமுகப்படுத்தினார்.
ஜி.டி.நாயுடுவுக்கு 18 வயது இருக்கும்போது, ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவர் பைக்கில் செல்வதைப் பார்க்கிறார். அதைப் பார்த்தவுடன், இந்த வண்டியைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஜி.டி.நாயுடுவுக்கு வருகிறது. ஹோட்டலில் பணிக்குச் சேர்கிறார்.
அந்த வருமானத்தில் பணத்தைச் சேமிக்கிறார். அதே ஐரோப்பா நபரிடம் சென்று பைக்கை வாங்குகிறார். பைக் வாங்கியவுடன் அவர் செய்த முதல் வேலை, அந்த பைக்கை அக்கு வேறு, ஆணி வேராகப் பிரிக்கிறார். அங்குதான் ஆட்டோ மொபைல்ஸ் பற்றிய ஆர்வம் தொடங்கியது.
அதன் பிறகு, ஸ்பின்னிங் மில், போக்குவரத்து என்று பலதுறைகளில் இறங்கினார். ஜி.டி.நாயுடு தொடங்கிய டிரான்ஸ்போர்டின் முதல் பேருந்தில், நடத்துனர், ஓட்டுநர் எல்லாமே அவர்தான். பிறகு அது, 600 பேருந்துகளுடன், யுனைட்டட் மோட்டர் சர்வீஸாக வளர்ந்தது. ஒருகட்டத்தில், ஜி.டி.நாயுடுவுக்குக் கீழ் 62 நிறுவனங்கள் இயங்கின. ஜி.டி.நாயுடு சித்த மருத்துவராகவும் இருந்தார்.
பல மருந்துகளை ஆவணப்படுத்தியது, தயாரித்தது என்று சித்தாவில் ஜி.டி.நாயுடுவின் பணிகள் மிக முக்கியமானவை.
கோவை மிகப்பெரிய தொழில் நகரமாக இருக்க ஜி.டி.நாயுடு முக்கிய காரணம். அவரின் உழைப்பின் மூலம் பல விஷயங்கள் நமக்கு வரமாகக் கிடைத்துள்ளன" என்றார்.
கோவை, அவினாசி சாலையில் அவர் நினைவாக, ஜி.டி.நாயுடு மியூசியம் இருக்கிறது.
தினசரி பள்ளி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என்று பலர் வந்து செல்லும் மியூசியத்தில், ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாமல், பல விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.
ஜி.டி.நாயுடு மியூசியம்
தற்போதுதான், அங்கு ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளுக்கு என்று ஓர் தனி கேலரி உருவாகி வருகிறது. அந்த கேலரியில் ஜி.டி.நாயுடுவின் அனைத்துப் படைப்புகளையும் காணலாம்.
ஜி.டி.நாயுடுவை இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் என்றழைப்பதுண்டு. ஆனால், அவர் உலகின் ஒரே ஒரு ஜி.டி.நாயுடு. பிரச்னைகளைக் கண்டறிந்து, அதற்குத் தீர்வு காண்பது ஜி.டி.நாயுடுவுக்கு மிகவும் பிடிக்குமாம்.
ஜி.டி.நாயுடு கண்டுபிடித்த பிளேடு
அவர் ஒரு Problem solver.. உலகில் உள்ள பல மில்லியன் டெக்கீஸ்க்கு, டெக் குரு, பாஸ் எல்லாமே ஜி.டி.நாயுடுதான்.💖🙏💖
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக