ஸ்டேஜ் மற்றும் தி.ஜானகிராமன் அவர்களை பற்றிய நினைவுகள் - கோமல் சுவாமிநாதனின் 'பறந்து போன பக்கங்கள்' - சுய அனுபவ கட்டுரைகளிலிருந்து
1957 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சேவாஸ்டேஜ் நாடகக் கல்வி நிலையப் பள்ளி துவக்கப்பட்டது. அன்று ஆகஸ்ட் 15-ம் தேதி. பத்தாவது சுதந்திர நாளை எஸ்.வி.சகஸ்ரநாமம் வீட்டு மாடியில் கொண்டாடத் திட்டமிட்டிருந்தோம். அதில் இன்னொரு விசேஷம் . அன்று முதல் சுதந்திரப் போராட்ட நூற்றாண்டு விழாவாகவும் கொண்டாடப்பட்டது. கொண்டாடியவர்கள் சேவாஸ்டேஜ் நாடகக் கல்வி நிலைய மாணவர்கள் 26 பேர்.
ஆரம்ப விழாவை துவக்கி வைத்தவர், அன்றைக்கு கல்வி மந்திரியாக இருந்த சி.சுப்பிரமணியம். துவக்க விழா அன்று தி.ஜானகிராமன் எழுதிய “ஊரும் தேரும்” என்ற நாடகமும் அரங்கேற்றம். இருபத்தாறு மாணவர்களுக்கும் அந்த நாடகத்தைப் பற்றி விமரிசனம் செய்ய வேண்டுமென்று பயிற்சி வைக்கப்பட்டது. நாடக பாத்திரங்களையும், நடிப்புத் திறனையும் பற்றி நான் பாரபட்ச மற்ற முறையில் விமரிசனம் செய்தேன். என் விமரிசனம் எஸ்.வி.சகஸ்ரநாமத்திற்கும், தி.ஜானகிராமனுக்கும் ரொம்ப பிடித்திருந்தது.
எங்கள் ஆசிரியர் பி.எஸ். ராமையா உற்சாகத்தின் சிகரம். பி.எஸ்.ராமையா பெரிய சிறுகதை ஆசிரியர் என்பதை விட அவர் மெஹ்பூபின் “ஆன்” படத்திற்கு தமிழ் வசனம் எழுதியவர் என்று நன்றாக அறிந்திருந்தேன்.
இன்னொரு ஆசிரியர் என்.வி. ராஜாமணி. இவரும் நாடக ஆசிரியர். புதுடில்லி தேசிய நாடகப்பள்ளியின் தாயான ஏஷியன் தியேட்டர் இன்ஸ்டிடியூட்டில் படித்து பின்னர் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் நாடகத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். எஸ்.வி. சஹஸ்ரநாமத்தின் மருமகன்.
மூன்றாவது ஆசிரியர் சிற்பி கலாசாகரம் ராஜகோபால்... கலாக்ஷேத்ராவில் பயின்று நடனக்கலையில் தேர்ச்சி பெற்ற பின்னர் சிற்பி ஆனவர். தஞ்சாவூர்காரர். நானும் தஞ்சாவூர்காரன் என்றவுடன் என் கூட ரொம்ப அபிமானமாகப் பழகினார்.
இவர்களைத் தவிர ஏறத்தாழ தினம் அங்கு வந்து போகிறவர் தி.ஜானகிராமன். அப்பொழுது அவர் மயிலாப்பூர் ராக்கியப்ப முதலி தெருவில் இருந்தார். சகஸ்ரநாமம் குழுவிற்கு ‘நாலு வேலி நிலம்’ நாடகம் எழுதிக் கொண்டிருந்தார். முன்னரே போட்ட ‘ஊரும் தேரும்’ நாடகத்துடன் இன்னொரு கதையையும் இணைத்து பெரிய நாடகமாக எழுதும் முயற்சி அது. ஜானகிராமனுடைய ‘மோகமுள்’ நாவலை சி.சு. செல்லப்பா மிகப் புகழ்ந்து பேசுவார். ஆனால் அதன் வர்ணனைகள் கொஞ்சம் பச்சையாக ஆபாசமாக இருப்பதாக பி. எஸ். ராமையாவின் எண்ணம். இது பற்றி ஒரு நாள் சேவாஸ்டேஜ் மாடியில் சர்ச்சை வந்தது. ஜானகிராமன் சொன்னார் “இருக்கட்டுமேய்யா. ஒரு வீடு கட்டுறோம், வீடு முழுக்க பூஜை ரூமா இருக்க முடியுமா? படுக்கை அறையும் வேணும்... மனுஷன் ரிலாக்ஸ் செய்துக்க லாவட்டரியும் வேணும். பூஜை ரூம் இல்லாம வீட்டுல குடியிருக்கலாம், லாவட்டரி இல்லாமல் குடியிருக்க முடியுமா சொல்லுங்கோ. அதுனால அந்த ஆபாசம்னு நீங்க சொல்றதெல்லாம் லாவட்டரி மாதிரின்னு வச்சுக்கோங்கோ” என்பார். ராமையா விட மாட்டார். “லாவட்டரி வேண்டியது தான். ஆனா அது வீட்டு ஒதுக்குப்புறமா இருக்கணும், நடுக் கூடத்துல இருக்கப்படாது. நடுக்கூடம் மாதிரி இருக்கிற ஒரு இடத்துல வந்து இந்த “பச்சை”யை டபக்குன்னு உள்ள விட்டு விடுகிறீரே” என்பார்.
ராமையாவின் ‘மல்லியம் மங்களம்’ நாடகத்தைப் பார்த்து விட்டு தி.ஜானகிராமன் அவரிடம் கூறுவார் “உம்மை மாதிரி பார்க்கிறவங்களைக் கதற அடிச்சு பிழியப் பிழிய அழவெச்சு வெளிய அனுப்ப என்னால் முடியாதுய்யா” என்பார். ஆனால் இருவருக்கும் உள்ள அன்பும் மரியாதையும் துளியளவும் குறையாது என்பதை கண்ட போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அந்தக் காலத்து எழுத்தாளர்களிடம் விமரிசனம் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியாக இல்லாதிருந்ததை நான் கண்டேன்.
சுதந்திர தினம் என்று ஆரம்பித்தேனல்லவா? அன்றைய சுதந்திர தினம் தி.ஜானகிராமன் தலைமையில் கொண்டாடப்பட்டது. “எந்த கலைகளிலும் கலைக்கலை, வியாபாரக்கலை” என்று இரண்டு கலைகள் வேரூன்றி விட்டன. வியாபாரக்கலையைப் பற்றி பேசுபவர்கள் மனிதடைய ரசனைக்குத் தக்கவாறு கலை இருக்க வேண்டுமென்று கூறுகிறார்கள். மக்கள் விரும்புகிறார்கள் எனவே அதை தருகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் கலைக்கலை ஒன்று தான். அது தான் மக்களை மேம்படுத்தும் கலை” என்றார் தி. ஜா.
கே.எஸ். கோபாலகிருஷ்ணனுடன் இருந்து சினிமா கற்றுக்கொண்டிருந்தேன் நான். அப்போது ஆல் இந்தியா ரேடியோவில் என் குரல் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லியில் செய்தி வாசிப்பவராக ரூ.300 சம்பளத்தில் ஆர்டர் வந்தது. எனக்கு ஒரே குழப்பம். “செய்திகள் வாசிப்பது பூர்ணம் விஸ்வதாதன்” என்பதுபோல, “செய்திகள் வாசிப்பது கோமல் சுவாமிநாதன்” என்று என் குரலும் பெயரும் தமிழ்கூறு நல்லுலகம் முழுவதும் ஒலிக்குமே என்ற ஆசை. ஆனால் சினிமா என்ற கவர்ச்சிக் கன்னியை விடவும் மனமில்லை. டைட்டில் கார்டு போடும்போது என் பெயர் வராதா என்று எத்தனை நாள் ஏங்கி இருக்கிறேன்.
ரேடியோவா... சினிமாவா.. யார் எனக்கு வழிகாட்டுவார்கள்!
ஒரு நபர் எனக்குத் தென்பட்டார். அவர் தான் சரியான யோசனை சொல்வார். மயிலாப்பூரிலிருந்த அவர் வீட்டை நோக்கிப் போனேன், "கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுடன் நான் சேர்ந்திருக்கிறேன். சினிமா கற்றுக்கொள்கிறேன். இப்போது ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக வேலை கிடைத்திருக்கிறது, இதற்கு டில்லி செல்ல வேண்டும், நான் எதைத் தேர்ந்தெடுக்கட்டும்?” என்று கேட்டேன். அவர் நிதானமாக யோசனை செய்துவிட்டுச் சொன்னார், ரேடியோவில் போய்ச் சேர்ந்தாயானால் ஒழுங்காக மாசச் சம்பளம் வரும், பதவி உயரும், சாப்பாட்டுக்குக் கஷ்டமில்லாமல் காலந்தள்ளலாம். ஆனால் நீ ஏதோ எழுத்தாளனாக வேண்டும், நாடகாசிரியனாக வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறாயே. அதை எல்லாம் மறந்துவிடு. ரேடியோவிற்குள் போனால் நீ சாதாரண சிப்பந்தியாகி உன் மூளை மரத்துவிடும். உன் கற்பனை வறண்டுவிடும் ஒரு சிலர் தான் அதிலிருந்து தப்ப முடியும்.”
"நீங்கள் ரேடியோவில் தானே வேலை செய்கிறீர்கள்?"
“ஆமாம். உண்மை தான். மாச வருமானத்தைப் பற்றிக் கவலைப் படாமல் இருக்கிறேன். ஆனால் ராமையாவைப் பார், அவர் மாதிரி நான் இருந்தால் இன்னும் எத்தனையோ சாதிப்பேன், சுவர்மெண்ட் ஆபீசுகளில் மூளை வேலை செய்யாது என்பது தான் உண்மை.”
"அப்போது என்ன சொல்கிறீர்கள்?"
"நீ தான் தீர்மானிக்க வேண்டும். மாசச் சம்பளத்தில் போய் கவர்மெண்ட் ஆபிசில் மாட்டிக்கொள்வதைவிட சுதந்திரமாக நீ நினைத்ததைச் செய்ய இப்போது வாய்ப்பு உண்டு. ஆனால் வாழ்க்கை என்பது அன்னாடங்காச்சியாகத் தான் இருக்கும். பல சமயம் உஞ்சவிருத்தி வாங்க வேண்டியிருக்கும். ஆனால் சுதந்திரமாய் இருக்க முடியும்”
அன்றே ஆல் இந்தியா ரேடியோவிற்கு நான் வேலைக்குச் சேரவில்லை என்று எழுதிப்போட்டு விட்டேன். இந்த யோசனையை எனக்குக் கூறியவர் வேறு யாருமில்லை, தி.ஜானகிராமன்.
தி.ஜானகிராமன் பேச்சைக் கேட்டுக்கொண்டு என் வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டுவிட்டேனோ என்று ஒரு விநாடிகூட வருத்தியதில்லை. பலமுறை அவருக்கு நன்றி சொன்ன நினைவுகள் தான் அதிகம்.
வி.எச்.எஸ். ஆஸ்பத்திரியில் சாதாரணமாக அட்மிட் ஆகி, சிக்கல் அதிகமாகி, உயிர் பிரிந்து, திருவான்மியூரில் அவர் வீட்டில் கிடத்தப்பட்ட அவர் உருவத்தைக் கண்டு கடைசி முறையாகவும் நன்றி சொன்னேன்.
(கீழே புகைப்படம் - இடமிருந்து வலம் - சிற்பி கலாசாகரம் ராஜகோபால், கோமல் சுவாமிநாதன், தி.ஜானகிராமன், சுதேசமித்ரன் எடிட்டர் C. ஶ்ரீனிவாசன்). புகைப்படத்தை எனக்கு அனுப்பிய தி.ஜாவின் மகள் உமா சங்கரி அவர்களுக்கு நன்றி.
நன்றி : Ms தாரிணி கோமல் மற்றும் முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக