29 செப்., 2020

விவாத மேடை : இந்திமொழிக்கார்கள் ஆளும்நிலை?

இந்திமொழிக்கார்கள் ஆளும்நிலை?

  இந்திமட்டும் அல்ல
உலகின் எந்த மொழியும் கற்றுக்கொள்வதில் தவறில்லை !

இந்தியாவில் இந்தி தேசிய மொழியும் அல்ல. அதிகப்படியான மக்கள் பேசும் மொழியும் இல்ல. இந்தியாவில் 22 பிரதான மொழிகள் கொண்ட முப்பது மாநிலங்கள் இருக்கிறது. இதில் இந்தியும் ஒரு மொழி அவ்வளவே.

இந்தியுடன் ஒத்துப்போகும் ஒரு சில மொழிகளையும் சேர்த்து கொண்டு இந்தி அதிகப்படியான மக்களால் பேசப்படும் மொழியாக சித்தரிக்கப்படுகிறது.

சரி.. இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் என்ன?
என்ன குறைந்துவிட போகிறது ?
இது தானே உங்கள் கேள்வி..!

சொல்றேன்.
முதலில் பலதரப்பட்ட வரிகள் இருந்தது. அதை மாற்றி ஒரே தேசம், ஒரே வரி என்று GST கொண்டு வந்தார்கள். அப்போது அவர்கள் சொன்னது. இனி விலைவாசி குறையும் 
மாநிலங்களின் வருமானம் அதிரிக்கும். அதன் மூலம் மாநிலங்கள் வளர்ச்சி பெறும் என்று தானே.

ஆனால் நடந்தது என்ன?

தமிழகத்துக்கு வழங்கவேண்டிய மாநில GST பணமான 12 ஆயிரம் கோடியை இன்று வரை மத்திய அரசு வழங்கவில்லை. அதுவும் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில்.

இதனால் என்ன நடக்கும் என்றால். நிதி பற்றாக்குறையால் மாநிலங்களில் ஏற்படுத்த வேண்டிய வளர்ச்சி பணிகள் தடைபடும். அப்படி வளர்ச்சி பணிகள் தடைபட்டால் மெல்ல மெல்ல தமிழகம் பின் தங்கிய மாநிலமாக மாறிவிடும்.

இது தான் ஒரே நாடு ஒரே வரியில் இருக்கும் சூழ்ச்சி.

சரி இதுக்கும் இந்தி எரிப்புக்கும் என்ன 
சம்பந்தம்னு கேக்குறீங்களா.?

இப்போது நாம் தமிழ்,  ஆங்கிலம் என்று இரண்டு மொழி படிக்கிறோம். இரண்டு மொழி படிக்கும்போதே நமக்கு ஆங்கிலம் சரியாக வருவதில்லை. உங்களில் எத்தன பேருக்கு ஆங்கிலம் சரளமாக பேச வரும்?

இப்படி இரண்டாவது மொழிக்கே தடுமாறும் நிலையில் இருக்கும்போது, கூட ஒரு மொழியை கூடுதலாக கொண்டுவந்தால் அந்த முன்றாவது மொழியில் நமது கற்றல் எந்த அளவிற்கு இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

மூன்றாவது மொழி தானே. அதை அரைகுறையாகவோ
ஓரளவுக்கிற்கோ கற்றுக்கொள்வதில்
தவறில்லையே. அதானே உங்கள் எண்ணம்.

இப்போதே மத்திய அரசு சம்பந்தப்பட்ட அனைத்திலும் இந்தி கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு சம்பந்தமான அனைத்து தேர்வுகளும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது.

இது எவ்வளவு பெரிய அவலம் என்று புரிகிறதா. நான் மேல சொன்னது போல இந்தியா இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் சொந்தமானது இல்லை.
இது பல மொழி பேசும் மக்கள் உள்ள கூட்டாச்சி நாடு. அப்படி இருக்க தேர்வுகளை ஒரு குறிப்பிட்ட மொழியில் மட்டும் நடத்துவது மற்ற மொழியினருக்கு செய்யும் அநீதி இல்லையா ?

இந்தி அல்லது ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவதில் என்ன சிக்கல் இருக்கிறது? அதான் ஆங்கிலம் இருக்கிறது தானே.
இது தானே உங்கள் கேள்வி..?

பெரும் சிக்கல் இருக்கிறது. ஆங்கிலம் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இரண்டாவது மொழி தான். அதில் மட்டும் தேர்வு வைத்தால் போட்டி சமமாக இருக்கும். கூடவே இந்தி என்று ஒரு ஆப்ஷன் வரும்போது தான் சிக்கல்.

என்ன சிக்கல் ?

ஆங்கிலம் நமக்கு இரண்டாவது மொழி,
இந்தி நமக்கு மூன்றாவது மொழி. ஆனால் இந்தி வட இந்தியர்களுக்கு தாய்
மொழி.

நான் சொல்ல வருவது புரியுதா..!

நாம் இரண்டாவது மொழியில் தேர்வு எழுதுவதே சிரமம். அப்படி நாம் சிரமப்பட்டு தேர்வு எழுதும் அதே தேர்வை அங்க பலர் அவர்களுடைய தாய்மொழியான இந்தியில் தேர்வு எழுதுவார்கள்.

யோசித்து பாருங்கள்.
அவன் அவனுடைய தாய்மொழியில் தேர்வு எழுதுவான். அவனிடம் நாம் அவன் மொழியிலயே போட்டியிட வேண்டும். அப்படி போட்டியிட்டால் நம்மில் எத்தனை பேர் வெற்றிபெறுவார்கள் ?

இது தான் சூழ்ச்சி. நிச்சயமாக நம்மால் தாய் மொழியில் தேர்வு
எழுதுபவர்களை வெற்றிக்கொள்ளவே முடியாது. அப்போது தானாகவே அவர்களுக்கு தான் வேலை வாய்ப்பு.

இதை நான் ஏதோ யூகித்து சொல்லவில்லை. இப்போதே இது நடந்துகொண்டு தான் இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு துறைகளில் பெரும்பாலும் இந்திக்காரர்கள் ஆக்கிரம்பித்திருக்கிறார்கள். ரயில்வே, தபால், வங்கி என்ன அனைத்திலும் அவர்கள் தான் அதிகப்படியாக இருக்கிறார்கள்.

இன்னும் புரியும்படி சொல்லவேண்டும் என்றால் கிராமப்புறங்களில் உள்ள வங்கி கிளையின் மானேஜர் இந்தி பேசுபவராக
இருக்கிறார். ஒரு வாடிக்கையாளர் கூட இந்தி பேசுபவர் இல்லாத வங்கி கிளையில் எதன் அடிப்படையில் தமிழே தெரியாத ஒருவரை அதிகாரியாக அமர்த்துகிறார்கள். இதை நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா..?
தமிழர்கள் மட்டும் உள்ள கிளையில் தமிழனை அமர்த்தினால் தானே 
மக்களுக்கு அவரை அனுக எளிதாக இருக்கும் ?

ஒரு மாநிலத்தில் எந்த மொழி பேசுபவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ
அந்த மொழி நன்றாக தெரிந்தவருக்கு தானே வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும்? ஆனால் இப்போது அப்படியா நடக்கிறது ??

இந்தியை கடுமையாக எதிர்க்கும்போதே
அவர்களின் ஆக்கிரமிப்பும் ஊடுருவலும்
இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்றால்
நாம் இந்தியை ஏற்றுக்கொண்டால் 
நிலமை என்னவாகும் என்று யோசித்து பாருங்கள் ?

கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்பு 
என்று அனைத்திலும் நாம் பின் தங்கிவிடுவோம்..

இதை செய்ய தான் இந்தியை திணிக்க
இவ்வளவு பாடுபடுகிறார்கள்..

ஒரே நாடு ஒரே வரி என்று சொல்லி நமது பொருளாதாரத்தில் கைவைத்து மாநில வளர்ச்சியை சீர்குலைத்து விட்டார்கள்.

இப்போது ஒரே நாடு ஒரே கல்வி என்று
சொல்லி நமது சந்ததியினரின் அறிவையும் வேலை வாய்ப்பையும் சீர்குலைக்க
திட்டமிடுகிறார்கள்.

அவ்வளவு தான்..
மறுபடியும் சொல்றேன்.

இந்தியை தாய்மொழியாக கொண்டவன் எழுதும் அதே தேர்வை உங்கள் பிள்ளைகள் இரண்டாவது மொழியிலோ அல்லது மூன்றாவது மொழியிலோ எழுதவேண்டும்.

இதை நீங்க ஏற்கிறீர்களா ?
ஏற்றால் மட்டும் இந்தி திணிப்பை
ஆதரியுங்கள்.

நன்றி..!(திரு.  T S Natarajan அவர்களின் அக்கறைமிக்க பதிவு நன்றியுடன் பகிரப்பெறுகிறது)

நன்றி :
திரு டி எஸ் நடராஜன்
மற்றும் 

கருத்துகள் இல்லை: