இந்திய நாடாளுமன்ற மேலவையில் முதல் தமிழ்க் குரல்
1969 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 24ஆம் தேதி. இந்திய நாடாளுமன்ற மேலவையில் ஒரு தமிழ்க் குரல் ஒலிக்கிறது. மேலவை உறுப்பினர்கள் பலரும் அந்தக் குரலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். தமிழில் பேசினால் அதை ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ மொழிபெயர்க்கும் வசதி அப்போது மேலவையில் செய்து தரப்படவில்லை. ஆனாலும் அந்த உறுப்பினர் தமிழிலேயே தன்னுடைய உரையை முழுவதுமாக நிகழ்த்தினார். தனது உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு உடனடியாக அவையில் தாக்கல் செய்யப்படும் என்று கூறிவிட்டுத் தன்னுடைய உரையை அவர் தொடர்ந்து நிகழ்த்தினார். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் தான் கவிஞர் புதுவைச் சிவம் என்று அழைக்கப்படும் பாவலர் ச. சிவப்பிரகாசம் அவர்கள். அவர் தமிழும், பிரெஞ்சும் பயின்றவர். அதனால் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஆறு ஆண்டுக் காலத்திலும் முழுக்க முழுக்கத் தமிழிலேயே பேசினார். இந்தியா முழுமையும் பகுத்தறிவுப் புரட்சி தேவை என்பதுதான் அவரது முதல் பேச்சின் பொருளாக இருந்தது. மேலும், ரயில்வே மானியக் கோரிக்கையில் புதுச்சேரி - சென்னை தனி ரயில் பாதை, தனிப்பட்ட அரசியல் பத்திரிகைகளுக்கு மத்திய அரசின் நிதி உதவி, புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி, புதுச்சேரியில் புதிய தொழிற்பேட்டை, பிரெஞ்சு ஆட்சிக்காலத்தின் அரசு ஊழியர்களுக்குச் சம்பளச் சலுகை, புதுச்சேரிக்குச் சுற்றுலா வருவோர்க்கான வசதி வாய்ப்புகள், பாரதிதாசன் அஞ்சல்தலை, புதுச்சேரியின் வரவு செலவுத் திட்ட அறிக்கை விவாதம் இப்படிப் பல்வேறு மசோதாக்கள் மீதும், கேள்வி - பதில் நிகழ்விலும் அவர் தமிழிலேயே பேசினார். அந்தக் காலகட்டத்தில் அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களும் அவரை மிகவும் பாராட்டினார்கள். பெருந்தலைவர் காமராசரும் அப்பொழுது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவரும் புதுவைச் சிவத்தை அவ்வப்போது ஊக்கப்படுத்திப் பேசுவார். வேறு வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இருவருக்கும் இடையில் நெருங்கிய தோழமை நிலவியது.
கவிஞர் புதுவைச் சிவம் அவர்களின் நினைவு நாள் இன்று 31. 8. 2020.
நன்றி : முனைவர் சிவ இளங்கோ புதுச்சேரி மற்றும் முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக