3 அக்., 2020

குட்டிக்கதை : தரிசிக்க வேண்டிய பைத்தியங்கள்

தரிசிக்க வேண்டிய பைத்தியங்கள்
#சிறுகதை 

பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின்னர் இதுவரை செல்லாத கோவில்களுக்கு போவதை வழக்கமாக்கிக்கொண்டேன். சென்னையில் இருப்பதால், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், பார்த்தசாரதி கோவில், வடபழனி முருகன் கோவில் என்று வாரத்திற்கு ஒரு கோவில் என்று செல்வதால், பல மனிதர்களை பார்த்த திருப்தியும் வருகிறது; மனதிற்கும் ஒரு நிறைவும் கிட்டுகிறது.
வேலை என்று வரும்போது, என்ன தான் பணி என்பது சிரமமாக தோன்றினாலும், நாம் ஒவ்வொரு கால கட்டங்களிலும் சந்திக்கிற மனிதர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுகிற பாடங்களுக்கு ஈடு இணை கிடையவே கிடையாது. காலை பதினோரு மணிக்கு நமது மேசை அருகில் வந்து "சார், காபி" என்று சொல்லுகின்ற கடை பையனிடம் இருந்து கூட சில சமயங்களில் நல்ல தகவல் கிடைப்பது உண்டு. அது வாய் மொழியாகவும் இருக்கலாம்; மௌன மொழியாகவும் இருக்கலாம்.
மனதிற்கு ஒரு நிறைவு வேண்டும் என்பதாக தோன்றியது. “வழக்கம் போல சென்னையில் உள்ள கோவில்கள் செல்வதை தவிர்த்து புதியதாக ஒரு கோவிலுக்கு செல்லவேண்டும்”. இந்த சிந்தனை மீண்டும் மீண்டும் மனதிற்குள் வலம் வரத்தொடங்கியது.
இதை பற்றிய விபரங்களை மற்ற நண்பர்களிடம் இருந்து தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றவும், மாலை நேர சந்திப்பில் பேசியபோது ஒரு நண்பர் சொன்னார் - "விருதுநகர் அருகில் ஆலடிபட்டி என்ற ஊரின் அருகில் உள்ள கருப்பண்ணசாமி கோவில் சென்று வாருங்கள். சென்று வந்தால், நல்ல விஷயங்கள் நடக்கும் என்று சொல்லுவார்கள்."
"எனக்கு அவ்வளவு தூரம் செல்ல முடியாது”, என்று நான் சொன்னேன். சென்னையில் இருந்து ரயிலில் ஏறி அங்கு சென்று விட்டு வருவது என்பது சிறிது சிரமமாக தோன்றியது.
அப்பொழுது வேறு ஒரு நண்பர் சொன்னார், "அப்படியானால், சென்னையில் இருந்து தாம்பரம் செல்லும் வழியில் மஹேந்திரா  சிட்டியின் எதிர்புறம் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் செட்டிபுண்ணியம் கோவில் சென்று வரலாம்" .
சென்னை வேளச்சேரியிலிருந்து நேரடியாக அங்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் கிடையாது. அப்படியானால் ஒரே வழி - காரில் சென்று வருவது தான். ஓலா ஏற்பாடு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது. நண்பர்கள் நான்கு பேர் ஒன்று சேர்ந்து ஒரு வெள்ளிக்கிழமை. விடியற்காலை ஆறு மணிக்கு பயணத்தை தொடங்கி விட்டோம். நண்பர்கள் அனைவரும், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தான். காலை நேரம் என்பதால் பிரதான சாலை வெறிச்சோடி இருந்தது. நாற்பது நிமிடங்களில் கோவிலை அடைந்து விட்டோம்.
தாம்பரம் சாலையில் இருந்து உள்ளே சிறிது தூரம் செல்லவேண்டியிருந்தது. புத்தம் புதிய அபார்ட்மெண்டுகள் இங்கும் அங்கும் நிறைந்து கிடந்தன. நகரத்தின் நெரிசல்களில் இருந்து விடுதலை வேண்டுபவர்கள் இங்கு வந்து வீடுகள் வாங்கிக்கொண்டோ அல்லது வாடகைக்கு வீடுகள் அமர்த்திக்கொண்டோ தங்குகிறார்கள். தெரு முனைகளில் வழி பலகைகள் இருப்பதால் எந்தவிதமான சிரமமும் இல்லை. கோவில் ஒரு சிறிய கிராமத்தின் உள்ளே இருக்கிறது. கிட்டத்தட்ட பத்து சிறிய தெருக்கள் இருக்கலாம். கோவில் சிறிய கோவில் தான். காரில் இருந்து இறங்கி கோவில் முன்பு உள்ள தெருவில் நடக்க ஆரம்பித்தோம். தெருவின் இரண்டு பக்கங்களிலும் சிறிய சிறிய கடைகள். கோவிலுக்கு தேவையான பொருட்களை தவிர மாணவர்கள் பயன்படுத்தும், நோட்டு புத்தகங்கள், பேனாக்கள், பென்சில்கள் போன்றவையும் விற்றுக்கொண்டு இருந்தார்கள். சாமிக்கு அர்ச்சனை செய்யும்போது இவற்றையும் கொடுக்கிறார்கள். குழந்தைகள் நன்றாக படிக்கவேண்டும் என்ற வேண்டுதலை இதன் மூலம் முடித்துக்கொள்ளுகிறார்கள். சிறிய கோவில் என்றாலும், ஓரளவு கூட்டம் இருக்கத்தான் செய்தது.
கோவில் ஒரு கிராமத்து கோவில் போல இருந்தது. கோவில் வாசலின் முன்பாக இருந்த வயதான பெண்மணியிடம் ஒரு மாலை வாங்கினோம். எங்களுடைய காலணிகளை விட்டு விட்டு கோவிலின் உள்புறம் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு அரை மணி நேரத்தில் திரும்பி விட்டோம்.
என்னுடன் வந்த மூன்று நபர்களும் தேநீர் அருந்தி விட்டு வருவதாகச் சொல்லி விட்டு சென்றார்கள். நான் வெள்ளிக்கிழமைகளில் காலையில் உணவு சாப்பிடுவதில்லை. அப்படியே சிறிது தூரம் நடந்து சென்று விட்டு வரலாம் என்று காலணியை மாட்டிக்கொண்டு, நடக்க ஆரம்பித்தேன்.
காரில் வரும்போதே கவனித்திருந்தேன். வரும் வழியில் ஆல மரங்களும் அத்தி மரங்களும் பரவிக்கிடந்தன. கோவிலில் இருந்து சிறிது தூரம் நடக்கவேண்டியிருந்தது. கடந்த கால நினைவுகள் வந்து போயின. சொந்த கிராமத்தில் கண்மாய் கரையில் உள்ள ஆலமரத்தின் கீழே சக நண்பர்களுடன் நேரம் காலம் தெரியாமல் கோலி ஆடி விட்டு களைப்பில் பல நாட்கள் உறங்கியது நினைவுக்கு வந்து போனது. திரும்பி சென்று வாழ முடியாத ஒரு பயணம் அது. அந்த சிறு வயது அனுபவங்களை நினைத்து பார்த்து திருப்தி படுவதை தவிர வேறு வழிகள் கிடையாது. எவருக்குமே  கிடையாது.
நான்கு மரங்கள் தாண்டியவுடன் தான் நான் கவனித்தேன். ஒரு மரத்தடியில் காலை நீட்டிக்கொண்டு, பைத்தியம் போல தோன்றிய ஒரு இளைஞன் எதையோ வெறித்து நோக்கிக் கொண்டிருந்தான். நான் அவனருகில் வந்தது கூட தெரியாமல் அவனது பார்வை நிலை குத்தி இருந்தது. தன்னை நோக்கி வந்திருப்பவர் யார் என்ற ஆர்வம் துளியளவு கூட இல்லாமல் அவன் இருந்தது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அவனது பார்வை சென்ற இடத்தில் குப்பை மேடுகள் மண்டிக்கிடந்தன. சிறிது தூரம் தள்ளி குரங்கு கூட்டம் ஒன்று விளையாடிக்கொண்டிருந்தது
குப்பை மேட்டின் அருகில் ஒரு நாய் தனக்கான காலை உணவை வேண்டி இங்கும் அங்கும் தேடிக் கொண்டிருந்தது. அந்த நாயின் ஒட்டிய வயிற்றை பார்க்கும்போது, அது வெகு நேரமாக உணவுக்காக ஏங்கிக்கொண்டிருப்பது தெள்ள தெளிவாக தெரிந்தது. நாக்கை தொங்க போட்டுக்கொண்டு இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தது. கோவிலுக்கு வந்து செல்லுபவர்கள், சில சமயங்களில் கோவில் பிரசாதங்களை இங்கு விட்டு விட்டு செல்வார்கள் என்பது தெரிந்தது. அதை உண்டே தனது வாழ்நாளை நிறைவு செய்த காரணத்தால், வேறு வழி தெரியாது அந்த நாய் அலைந்தது எனது மனதை என்னவோ செய்தது.
"முன்னாலேயே தெரிந்திருந்தால் உணவுப்பொட்டலங்கள் கொண்டு வந்திருக்கலாமே; ஒரு ஜீவனுக்கு உணவு கொடுத்த புண்ணியத்தை கட்டிக்கொண்டு சென்று இருக்கலாமே" என்று மனதில் தோன்றியது.
இளைஞனுக்கும் அந்த வாயில்லாத ஜீவனுக்கும் சம்பந்தம் எதுவும் இருக்குமா என்று எனக்கு சரியாக தெரியவில்லை.
“மன நிலை சரியில்லாதவன் போல தோன்றும் இவன் படித்தவன் போல தோன்றுகிறானே? ஒரு வேளை வேலை கிடைக்காததால் சோர்ந்து போய் விட்டானா அல்லது கிடைத்த வேலையை தவற விட்டு விட்டு மனம் நொந்து போய் இருக்கிறானா?”
பின்புறம் சலசலப்பு தோன்றவே ஆர்வத்தின் கோளாறில் நான் திரும்பி பார்க்க, பன்னிரண்டு வயது நிரம்பிய மூன்று சிறுவர்கள் அங்கு ஓடி வந்து கொண்டிருந்தனர் . அவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று நான் சிந்திக்கத் தொடங்கும் முன்பாகவே, அவர்கள் அந்த நாயை சுற்றி வளைத்துக்கொண்டு தங்கள் கால் சட்டை பைகளில் நிரப்பி வைத்திருந்த சிறு சிறு கற்களை எடுத்து வீசத்தொடங்கினர். எந்த பக்கமும் செல்ல முடியாமல் அந்த ஜீவன் தனது வாலை சுருட்டி வைத்துக்கொண்டு ஓலமிடத்தொடங்கியது.
அந்த ஜீவனுக்கு ஒரு புறம் பசி கொடுமை தாங்காது நாக்கிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. அதைத்தவிர, தன் மேல் படுகின்ற கற்களின் தாக்குதல்களில் இருந்து தன்னை காத்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தமும் வந்து சேர்ந்தது.
"நிறுத்துங்கள்", என்று நான் சொல்லவும், "ஐயா உங்களுக்கு ஒன்னும் தெரியாது. இது ஒரு பைத்தியம் பிடித்த நாய். அவனை மாதிரி இதுவும் ஒரு பைத்தியம் தான்,." என்றனர் அவர்கள்.
"எப்படிடா அந்த நாயை பைத்தியம் என்று சொல்லுகிறீர்கள்? பாருங்கடா - சோத்துக்காக அந்த நாய் அலைந்து கொண்டிருக்கிறது. அந்த நாய் நாக்கிலிருந்து நீர் வடிகிறதை பார்த்துமா உங்களுக்கு புரியல. அதை விட்டுடுங்கடா; முடிஞ்சா உங்க வீட்டிலே இருந்து சோறு கொண்டாந்து போடுங்க; இல்லேன்னா அது போக்கிலே விடுங்க; அது பாத்துக்கும்".
"நீங்க சும்மா இருங்க சார்; நீங்க வெளியூர்காரங்க; உங்களுக்கு ஒன்னும் புரியாது. நாங்க இந்த ஊர் காரங்க. இந்த நாயை இப்படியே உயிரோடு விட்டால், பைத்தியம் பிடிச்சு போய், எங்களை கடிச்சிபோட்டுடும்".
தங்கள் கால் சராயில் வைத்திருந்த கற்கள் தீரும் வரை அந்த நாயை அடித்து துன்புறுத்தாமல் செல்லமாட்டார்கள் என்று தோன்றியது.
இவர்களை திருத்தமுடியாது என்று எனக்கு தோன்றிய நேரத்தில் தான் அது நடந்தது. உட்கார்ந்திருந்தவன் தனது கையில் ஒரு நீண்ட கம்பை எடுத்துக்கொண்டு அந்த சிறுவர்களை நோக்கி ஓட ஆரம்பித்தான். அடுத்த சில நொடிகளில் அந்த சிறுவர்கள் ஓடிச்சென்று விட்டனர்.
மீண்டும் அவன் உட்கார்ந்திருந்த இருப்பிடத்திற்கு வந்தான். ஒரு பொட்டணத்தை கையில் எடுத்துக்கொண்டு அந்த நாயின் அருகில் சென்றான். கூனி குறுகி, பயந்து நடுங்கிக்கொண்டிருந்த அந்த சிறிய நாய், முதலில் இவனை பார்த்து பயந்தது. அவன் முகத்தை பார்த்ததும் தெரிந்தது - இவன் நம்பிக்கையானவன் என்று. மெதுவாக மெதுவாக தனது வாலை ஆட்டிக்கொண்டு இவன் அருகில் வர ஆரம்பித்தது. வாலை ஆட்டுவதன் மூலம் தனது நம்பிக்கையை தெரியப்படுத்தும் கலையை அந்த நாய்க்கு யார் கற்றுக்கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.
பைத்தியம் என்று சொல்லப்பட்ட அந்த இளைஞன் அந்த நாயின் அருகில் சென்று அமர்ந்து பொட்டணத்தை விரித்து வைக்க, அதிலிருந்த உணவு பொருட்களை அந்த ஜீவன் வேக வேகமாக உண்ண ஆரம்பித்தது.
அந்த நாய் உண்ணும் வேகமே அந்த சிறிய உயிர் எவ்வளவு நேரம் தனது உணவை தேடிக்கொண்டிருந்தது என்பதை காட்டிக்கொடுத்தது. இடையிடையே, அவனை நிமிர்ந்து பார்த்து தனது நன்றியை கண்களின் மூலம் தெரியப்படுத்தியது.
அந்த நாயின் அருகில் அமர்ந்து அது உணவை உண்ணும் அழகை பாரத்து ரசித்துக்கொண்டு இருந்தான் அவன். அந்த பொட்டணத்தில் உள்ள உணவு முழுவதும் அந்த நாய் உண்டு முடிக்கும் வரை பொறுமையாக அமர்ந்து இருந்தான்.
“ஒருவேளை அந்த சிறுவர்கள் மீண்டும் வந்து துன்புறுத்துவார்கள் என்ற எச்சரிக்கை உணர்வினாலா?”
அவன் கண்களில் தெரிந்த திருப்தி - ஒரு தாய் தனது குழந்தை உண்பதை பார்த்து ஆனந்திப்பது போல இருந்தது.
"எப்படியும் அவன் தன்னுடைய உணவுக்கு அலையவேண்டியது வரும்." இந்த எண்ணம் எனது மனதில் தோன்றாமல் இல்லை.
எனக்கு என்னமோ அவன் ஒரு பைத்தியமாக தெரியவில்லை.
அப்பொழுது  எனது உள்ளுணர்வின் மொழி புரிய ஆரம்பித்தது - "இவன் ஒரு ஜீவன் உள்ளவன். ஜீவன் உள்ள ஒருவனால் தான் மற்றொரு ஜீவனின் வலியை உணர முடியும்".
பாடங்களை கற்றுகொள்ளுவதற்கு பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் தான் வேண்டும் என்பதில்லை. பாடங்கள் நிமிடங்கள் தோறும், பயணங்கள் தோறும் கிடைத்துக்கொண்டு தான் இருக்கும். அந்த வித்தியாச பயணம் விலை நிர்ணயிக்க முடியாதது என்பது எனக்கு  புரிந்தது.
“தரிசனங்கள் கோவில்களின் உள்ளே மட்டும் கிடைப்பதில்லை. வெளியேயும் கிடைக்கத்தான் செய்கின்றன”.
---::: :::---

நன்றி :

கருத்துகள் இல்லை: