எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து
எழுத்தின் மொழி
சாகித்ய அகாதமி 2007ம் ஆண்டு முதல் பிரேம்சந்த் ஃபெலோஷிப்பை வழங்கி வருகிறது. சார்க் நாடுகளில் வாழும் ஒரு எழுத்தாளரைத் தேர்வு செய்து இந்த நல்கை அளிக்கிறார்கள்.
2018ம் ஆண்டிற்கான பிரேம்சந்த் ஃபெலோஷிப் ஈழத்தின் முக்கியப் படைப்பாளியான ஐயாத்துரை சாந்தன் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.
அந்த ஆண்டு நான் சாகித்ய அகாதமி விருது பெற டெல்லி சென்றிருந்த போது சாந்தனைச் சந்தித்து உரையாடினேன். சென்னைக்கு அவர் வந்திருந்த போதும் எனது இல்லத்திற்கு வந்திருந்தார்.
சாந்தன் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர். 50 ஆண்டுகளாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகிறார். ரஷ்ய இலக்கியங்களின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். ருஷ்ய மொழி அறிந்தவர். உலக இலக்கியங்களில் சிறந்தவற்றை மொழிபெயர்ப்புகளும் செய்திருக்கிறார்.
சாந்தனோடு பேசிக் கொண்டிருப்பது இனிமையான அனுபவம். தேடித்தேடி படிக்கக் கூடியவர் என்பதால் நிறையப் புதிய விஷயங்களை அவரிடமிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. சமகாலத் தமிழ் படைப்புகள் அத்தனையும் வாசித்திருக்கிறார். எளிமையானவர். மிகக்சிறந்த நண்பர்.
அவர் சாகித்ய அகாதமியின் விருந்தினராக இந்தியாவிற்கு வருகை தந்து ஒன்றரை மாதகாலம் மும்பை, சென்னை கல்கத்தா, பெங்களூர், என இந்திய எழுத்தாளர்கள் பலரையும் சந்தித்து உரையாடிய அனுபவத்தை எழுத்தின் மொழி என்ற நூலாக எழுதியிருக்கிறார். சுவாரஸ்யமான நூல்.
சாகித்ய அகாதமி பரிசு வழங்கும் விழாவில் அவரது சிறப்புரை நடைபெற்றது. அழகான ஆங்கில உரையது. இந்திய இலக்கியங்கள் மீதான அவரது ஈடுபாட்டினையும் ஈழ இலக்கியங்களின் வரலாற்றுத் தொடர்பினையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
டெல்லிக் குளிரில் பயணம் செய்தது. தமிழ் சங்கத்தில் உரை நிகழ்த்தியது. காந்தி குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டது. பத்திரிக்கை நேர்காணல், மற்றும் பல்வேறு நண்பர்களின் சந்திப்பு. பெங்களுர் சென்றது. அங்கே நடைபெற்ற சாகித்ய அகாதமி கூட்டம்.
கொல்கத்தா புத்தகச் சந்தைக்குப் போனது. தாகூர் நினைவில்லத்தைப் பார்வையிட்டது தக்ஷிணேஷ்வர், பேலூர் மடம். எனக் கல்கத்தா அனுபவங்களை அவர் விவரித்துள்ளது நாமும் அவருடன் இணைந்து பயணிப்பது போன்ற அனுபவத்தைத் தருகிறது.
‘மனித உணர்வுகள் எந்த இனத்தவர்க்கும், எல்லா மொழியினர்க்கும், எல்லா நாட்டினர்க்கும், எக்காலத்தும் மாறுபாடில்லாதவை. எனவே, அவற்றைக் கூறுகிற இலக்கியங்களும் ஒன்றே,
தேச மொழி எல்லைகள் மட்டுமன்றிக் கால எல்லைகளையும் தாண்டியவை இலக்கியங்கள். ஈழப்போர்க்கால வாழ்வின் போது அந்த வாழ்வை ஏற்கெனவே அநுபவித்த ஒன்றாய் என்னை உணரச் செய்தவை ஹெமிங்வே, ஷொலோகோவ் ஆகியோரின் நாவல்களைப் படித்த அநுபவங்கள்.
‘எழுதப்படுகிற மொழிகள், பொருளைக் காவுகிற பணியை மட்டுமே செய்கின்றன. அவற்றை வாசகன் மனதில் தொற்ற வைத்ததும் குறித்த அந்த மொழிகளின் பணி முடிந்துவிடிகிறது. எஞ்சி நிற்பது அந்தப் படைப்புத் தந்த பரவசம் அல்லது தரிசனம். அதுதான் இலக்கியம் என நான் நம்புகிறேன். என அவர் தனது உரையில் குறிப்பிட்டது முக்கியமானது.
பிரேம்சந்த் பெயரால் வழங்கப்படும் இந்த நல்கை அவரைப் போலவே எளிய மக்களின் துயர் துடைக்க எழுதும் கொண்ட சாந்தனுக்கு வழங்கப்பட்டிருப்பது மிகப் பொருத்தமானது. அவர் இன்னும் பல உயரிய விருதுகள் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக