31 அக்., 2020

தி. ஜா. நினைவுகள்

தி. ஜா. நூற்றாண்டு - என் கட்டுரை!

தி ஜானகிராமன் - ‘காவேரியின் காதலன்’ (கலைமகள் செப்டம்பர் 2020 இதழ்)

தி.ஜானகிராமன் என்னும் அற்புத எழுத்தாளுமையின் நூற்றாண்டு அமைதியாகக் கடந்துகொண்டிருக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றை, தி.ஜா என்னும் மகோன்னத கலைஞனின் படைப்புகளின்றி எழுதிவிட முடியாது. நாவல்கள், சிறுகதைகள், பயணக் கட்டுரைகள் என அனைத்திலும் மிளிரும் ‘அழகியல்’ தி.ஜா வுக்கே உரித்தான எழுத்து நடை.  

தி.ஜா. வின் படைப்புகளை வாசிப்பதில் ஏற்படும் ஆனந்தமே அலாதிதான். கரைபுரண்டோடும் அந்தக்கால காவிரியில் குளிக்கும் சுகமும், குதூகலமும் வாசகனின் கூடவே வரும்! வாசிப்பவனைப் பாத்திரங்களுடன் உணர்வுபூர்வமாகக் கரைத்து, சம்பவங்களினூடே உலவ விடுவதில் அவரது எழுத்துக்குக் தனித் திறமை உண்டு’ அதுவே அவரது சிறப்பும் கூட!  படைப்புகளில், கும்பகோணம், தஞ்சாவூர் கிராமங்களின் நவரசங்களும், பாசாங்கற்ற தனித்தன்மையுடன், கலைவடிவம் பெற்று நம்மை மகிழ்விக்கும் யுக்தியைக் கையாள்வதே தி.ஜா. பாணி எனலாம் - 

“சமுதாயத்திற்குச் சவுக்கடி, தத்துவ போதனை, உத்தி வேடிக்கைகள், மேல்நாட்டு இலக்கிய போலி போன்ற வர்த்தக சாதனங்களைப் பற்றி ஜானகிராமனுக்குத் தெரியாது. தான் அநுபவித்த நிலைகளை, தான் கண்ட காட்சிகளை அதே உணர்வுடன் மறுபடைப்பு செய்யும்போது, தம்முடைய திறமையை மட்டும் துணை கொண்டு எழுதுவார்”  என்கிறார் எழுத்தாளர் சிட்டி!.

தன் எழுத்துக்களைப் பற்றியும், கலை உணர்வுடன் எழுதுவது பற்றியும் ஒரு தீர்க்கமான சிந்தனை உடையவர் தி.ஜா. தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம் சார்ந்த காவிரிக் கரை கிராமங்களின் ஆசாபாசங்கள், பேச்சு வழக்குகள், விருப்பு வெறுப்புகள், நியாய அநியாயங்கள் எல்லாவற்றையும் தன் சிறுகதை, நாவல்களில் சொற்சித்திரங்களாக வடித்திருப்பார். 

‘மோகமுள்’ நாவல் படித்துக் கும்பகோணத்தில் பாபுவையும், யமுனாவையும், அந்த  இடங்களையும் தேடி அலைந்தவர்கள் உண்டு. படித்து முடித்து ஒரு வாரத்திற்கு, பாபு, யமுனா, ரங்கண்ணா, மாட்டு வண்டி, சாண வாடை, காதல், கர்நாடக சங்கீதம் என மனம் ஆர்பரித்து அலைபாய்ந்த வண்ணம் இருந்தது. 

“ எனக்கு நகர வாழ்க்கையில் ஈடுபாடு கிடையாது. மனசு முழுக்க கிராமங்களில்தான் இருக்கு. ஏன்னு சொல்ல முடியலை. அது சிறு வயசுனுடைய இதுவா இருக்கலாம். இல்லே நம்ம கிராமத்து மக்கள் கிட்ட இருக்கிற தனிதன்மை………. அங்கதான் அதிகமாகக் கிடைக்கிறது” என்று தி.ஜா சொல்வதை அவரது ஒவ்வொரு புனைவிலும் உணரமுடியும்!

மன்னார்குடியை அடுத்த, தேவங்குடியில் 1921 ல் பிறந்த தி.ஜா., சமஸ்கிருதமும், ஆரம்ப இசையும் தன் தந்தையிடம் கற்றார்! அவருடைய இசை ஞானம், கலைநயமிக்க அவரது எழுத்துக்களுக்கு ஆதார சுருதியாக இருந்தது என்றால் அது மிகையாகாது - ‘இந்தப் பிரபஞ்சமே இசை வடிவானது’ என்கிறார் ஒரு பேட்டியில்.சமையல் தெரியும், இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் எனக் கலைகளில் ஈடுபாடு கொண்டவர். 
இசையின் அத்தனை நுணுக்கங்களோடும், தன் படைப்புகளை அவரால் அவதானிக்க முடிவதில் வியப்பொன்றுமில்லை! 

கும்பகோணம், சென்னை, தஞ்சை ஐயம்பேட்டை, குத்தாலம் போன்ற இடங்களில் ஆசிரியர் வேலை பார்த்த அனுபவம், அவரது படைப்புகளின் களங்களுக்கும், பாத்திரங்களுக்கும் உயிர் கொடுக்கும் வித்தையைச் செய்தது! பின்னர், சென்னை, டெல்லி வானொலியில் கல்வி அமைப்பாளராகப் பணி செய்து, 1981ல் ஓய்வு பெறுகிறார். 1982 ல் மறைந்தும் விடுகிறார்.

“ஏன் எழுதுகிறேன்?” என்ற கேள்விக்கு அவர் சொல்லும் பதில் சுவாரஸ்யமானது:

“ எனக்கே எனக்காக எழுத வேண்டும் போலிருக்கிறது. எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதில் இருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை - எல்லாம் அதில் இருக்கின்றன.”

“ என்னுடைய இன்பங்களை, நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவே நான் விரும்புகிறேன். சுற்றிலும் உலகம் சிறியதும் பெரியதுமாக சாதாரண அசைவுகளில் கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது. அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஆனந்தம்தான், அதைத்தான் நான் பகிர்ந்து கொள்கிறேன் - எழுத்து மூலம் “

“ கலை வடிவம் என்னுடையது. என் தவத்தின் பெருமையைப் பொறுத்தது. மூளியும் அதன் பெருமை. சட்டம் போட்டு என்னை பயமுறுத்தாதீர்கள். நான் உங்களுக்காக எழுதுகிறதைப் பற்றி நீங்கள் அந்த தீர்ப்பெல்லாம் சொல்லலாம். நான் கவலைப்படவில்லை. வாலைப் போட்டுவிட்டு, பல்லியைப்போல் தப்பிவிடுவேன்.    
- தி.ஜானகிராமன்

தி,ஜானகிராமன் என்னும் தனிமனிதர் மிகவும் மிருதுவானவர். மென்மையாகப் பேசுவார். சிவப்பாக இருப்பார், தலையெல்லாம் அழகாகச் சீவியிருப்பார், நன்றாக டிரஸ் செய்துகொண்டுதான் வெளியில் வருவார் - இது அவருடன் பழகியவர்கள் சொல்வது! 

நல்ல குடும்பத் தலைவர். ’என்ன வேணுமானாலும் நான் பேசலாம். நான் கேலி பண்ணினாலும் சிரிச்சுக்கிட்டு இருப்பார். திரும்பக் கேலி பண்ணுவார். எங்க போகணும்னாலும், என்கிட்டேயும், குழந்தைங்ககிட்டேயும் சொல்லிக்கிட்டுப் போவார். அவர்கிட்ட பணம் இருக்கோ இல்லையோ, குழந்தைங்க ஆசைப்பட்டு ஒண்ணு கேட்டால், அதை வாங்கிக் கொடுக்காமல் இருந்தது கிடையாது. அதே மாதிரி நான் ஒண்ணு கேட்டேன்னா, அதையும் வாங்கித் தராமல் இருந்தது கிடையாது. நாங்க எல்லோரும் சேர்ந்து எங்கேயாவது போகணும்ன்னு ஆசைப் பட்டால், அப்படிப் போகாமல் இருந்ததும் கிடையாது’. - தி ஜா வின் மனைவி.

அம்மா வந்தாள், மோகமுள், மரப்பசு, உயிர்த்தேன், செம்பருத்தி, நளபாகம் போன்ற நாவல்களையும், அடி, வீடு, தோடு, அவலும் உமியும், நாலாவது சார், சிவஞானம், கமலம் போன்ற குறுநாவல்களையும், உதயசூரியன், நடந்தாய் வாழி காவேரி, கருங்கடலும் கலைக்கடலும் போன்ற பயண நூல்களும் எழுதியுள்ளார். ஆனாலும், அவரது ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்புக்குத்தான் சாகித்ய அகாதமி விருது (1979) கிடைத்தது.

அதிகம் பேசப்பட்ட, விமர்சிக்கப் பட்ட நாவல்களை விட, இவரது சிறுகதைகள் அனைவராலும் விரும்பிப் படிக்கப் பட்டன.  நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகள் தி.ஜா. என்னும் இலக்கிய ஆளுமையை அடையாளம் காட்டும் படைப்புகளாகும்.  சூழ்நிலைகளே மனித மனக்குரங்குகளை ஆட்டிப் படைக்கின்றன - பண்பு மீறல்களைக் கூட, அனுதாபத்துடன் பார்க்கும்படி எழுதியிருப்பார் - அவரது சமூகப் பார்வை பாசாங்கற்றது, பாத்திரங்கள் உயிரோட்டமானவை. டம்பம், பொய்மை, உயர்ந்த மனிதர்கள், மனிதநேயம், காவிரிக் கரையின் எல்லா மட்டக் குடிகளின் கலாச்சாரம் என மிக நுட்பமான மனித உணர்வுகளைப் பேசும் அவரது சிறுகதைகள் - அவை வெளிப்படுத்தும் வெகுஜன ஈர்ப்பும், வசீகரமும் பொய்க் கலப்பில்லாதவை! முதல் கதை ‘பசி ஆறிற்று’ முதல், கடைசி கதை ‘சுளிப்பு’ வரை அற்புதமான படைப்புகள்!

“எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி” - தி.ஜா.

அழகு, நடை, விவரணை, எளிய சின்னச் சின்ன சம்பாஷணைகள், மனம் நோகடிக்காத கேலி, பரிகாசம், பண்பு மீறல்களுக்குப் பின்னால் உள்ள மனிதநேயம் அனைத்தையும் தன் சிறுகதைகளில் கலைநயத்தோடு சொல்லியிருப்பார்!

ரயில், ஸ்டேஷன், ரயிலடி:

அவரது கதைகளில் ரயில், ரயில் நிலையம் எல்லாம், அவற்றின் இயல்புகளோடு ஒன்றிப் போய்விடும். ‘அக்பர் சாஸ்திரி’ - மதுரை வக்கீல் கோவிந்த சாஸ்திரி - தனக்குத் தெரிந்த கைவைத்தியமெல்லாம் சொல்லி, எதிரே இருக்கும் ‘சூப்ரண்டி’ன் குடும்பத்துக்கு ஏராளமாக அறிவுரை சொல்லுவார். மாயவரம் ஜங்க்‌ஷனில் பூரி உருளைக்கிழங்கு சாப்பிட்டு, வண்டியிலிருந்து கீழே போய் கைஆலம்பிக்கொண்டுவருவார். குத்தாலத்தில் நிற்கும் வண்டி. ஒரு அணாவுக்கு வேர்க்கடலையை வாங்கி மென்றவாறு யோசனையில் ஆழ்ந்திருப்பார். திருவிடைமருதூர் ஸ்டேஷன் வந்தது. “மகிழமாலை விற்குமே இங்கே” என்பார்!.  கும்பகோணம் வரும் முன் இறந்து விடுவார் - நாமும், மாயவரத்திலிருந்து, கும்பகோணம் வரை அவர்களுடன் ரயிலில் உரையாடலைக் கேட்டுக்கொண்டே வருவோம்! அவர் எழுதாவிட்டாலும், நம்மால் அந்த ரயில் பயணத்தை அனுபவித்த உணர்வைப் பெற முடியும் - அது தி.ஜா. வின் எழுத்து செய்யும் சித்து வேலை!!

“வாசலோடு ரயிலடியிலிருந்து வாடிக்கையில்லாமல் திரும்பிய ஒற்றை மாட்டு வண்டி மெதுவாக ஊர்ந்து நடந்து கடந்தது” என ஒரு வாக்கியத்தில் கதையில் வரும் ஆளரவமற்ற ரயில் வண்டி நிலையம், மனதில் தோன்றிவிடும்! 

‘சிலிர்ப்பு’ கதையும் அப்படித்தான் - “திருச்சிராப்பள்ளியிலிருந்தே புறப்படும் வண்டி அது. மாயவரத்தோடு நின்றுவிடும். பத்தரை மணிக்குத் தொடங்கி மூன்று மணியோடு அதன் வாழ்வு முடிந்து விடும்” - ரயிலும் உயிருள்ள பாத்திரம் போல! “ மதுரை, மானாமதுரை, ஈரோடு என்று எல்லா வண்டிகளையும் அனுப்பி விட்டுத் திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் புயல் புகுந்து விளையாடின தோப்பைப் போல, ஒரே வெளிச்சமாக ஹோவென்று வெறிச்சிட்டுக் கிடந்தது. வாழைத்தொலி, ஆரஞ்சுத்தொலி, எச்சில், பொட்டணம், தூங்குமூஞ்சிகள் - இவற்றைத் தவிர ஒன்றையும் காணவில்லை. வண்டி புறப்பட இன்னும் அரை மணிதான் இருக்கிறது. எஞ்சின், கார்டு, ஒன்றும் வரவில்லை. வண்டிக்கு வண்டி ஒரு பரட்டை, அழுக்கு இப்படி ஏதாவது  தூங்கிக் கொண்டிருந்தது. பங்களூர் எக்ஸ்பிரஸில் இறங்கி வந்த குடும்பம் ஒன்று, இரண்டாம் வகுப்பில் சாமான்களைப் போட்டுக் காவல் வைத்து எங்கோ போய்விட்டது.  எக்ஸ்பிரஸ் வண்டி சென்றால் என்ன கூட்டம், வரும்போது என்ன வரவேற்பு, என்ன உபசாரம்! போகும்போது எவ்வளவு கோலாகலம்! இது நாதியில்லாமல் அழுது வழிந்தது. ஷட்டிலிலும் கேடு கெட்ட ஷட்டில். ரயில் ஜாதியில் கூட ஏழை, பணக்காரன் உண்டு போல் இருக்கிறது” - தான் சொல்லப்போகும் கதை மாந்தர்கள் இந்த வண்டியில் வரும் மத்திய, கீழ் மட்ட வசதி படைத்தவர்கள் என்பதற்கான முன்னோட்டம் இது!  

திரும்பத் திரும்ப வரும் அலுக்காத விவரனைகள்:

தொடர்ச்சியாக, ஒட்டுமொத்தமாக அவரது படைப்புகளை வாசிக்கும் போது,  சில விவரணைகள், சொற்பிரயோகங்கள் திரும்பத் திரும்ப வருவதைக் காண முடிகிறது. சூழலுக்கு ஏற்றவாறுதான் என்றாலும், தி.ஜா. பாணியில் அவை தவிர்க்கமுடியாதவை என்று தோன்றுகிறது. 

" குழைவு, சரிவு, கழுத்து, காது, திருத்தமான மூக்கு - அப்படி ஒரு அழகு, மஞ்சள் ஆரஞ்சுப் பழ நிறம், சொரக்காய் மாதிரி கால், வெள்ளரிப்பிஞ்சு மூக்கு, நெடு நெடு, பள பள, கிராம வயல், கரிச்சான், வயலின் குருவி, கிழட்டு வெயில், கொஞ்சம் நேரம் போனால் மஞ்சள் பூத்துவிடும் (மாலை வெயிலை எவ்வளவு அழகாகச் சொல்கிறார்!), ‘ஸில்’ வண்டுகளின் இரைச்சல் " -‘அரச மரத்து இலைகள் சிலு சிலுவென்று என்னமோ சொல்லிக்கொண்டிருந்தன’ ‘ கீரைத்தண்டு மாதிரி ஒரு குட்டி’, கீரைத்தண்டு, மூங்கில், முறுக்கி விட்ட கம்பி, இரண்டாகப் பிளந்த தென்னை மட்டை அடி -  எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காத விவரணைகள்!

சிலிர்ப்பு சிறுகதை உருவான விதம் ! தி.ஜா. வின் வார்த்தைகளில்:

ஒரு நாள் நான் ரயிலில் போய்க்கொண்டிருந்தபோது கச்சலும், கறுப்புமாக நாய் பிடுங்கினாற் போன்ற ஒரு பத்து வயதுப் பெண்குழந்தையுடன் யாரோ பணக்கார அம்மாள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள். பள்ளிக்கூட விடுமுறைக்கு மூத்த அக்காளின் ஊரில் தங்கிவிட்டு ஊர் திரும்புகிறது அந்தப் பெண். ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது அந்த அம்மாள் “இது படித்து என்ன பண்ணப் போகிறது? நான் கூட, கூடமாட ஒத்தாசையாயிருக்க இதையே சாப்பாடு போட்டு வீட்டில் வைத்துக்கொண்டு விடலாம் என்று பார்க்கிறேன்” என்றாள். என்னமோ, அந்த யோசனையும் அந்த அம்மாள் அதைச்சொன்ன தோரணையும் உள் மனத்தில் பாய்ந்து குத்திக்கொண்டுவிட்டன. அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டு வந்தேன். அந்தப் பெண் தன் பொறுமையினாலும், பொறுப்பினாலும் எதையும் சமாளிக்கும். எதையும் ஆளும் என்று தோன்றிற்று. ஓடி ஆடி, கத்திக் கூச்சலிட்டு, விளையாடிப் பிதற்ற வேண்டிய வயதில் அது உலகத்தின் சுமைகளையும், கவலைகளையும் தாங்கிக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றிற்று. எனக்குப் பயமாக இருந்தது. வயிற்றைக் கலக்கிற்று. அது ஒரு படம்.

இன்னொரு படம். என் மகன் ஆறு வயதில் ஒரு விடுமுறைக்கு அவன் தாத்தா வீட்டுக்குப் போயிருந்தான். நான் போய்த் திரும்பி அழைத்து வந்தேன். குணத்தில் எனக்குநேர் விரோதம் அவன். கூப்பிடாததற்கு முன் போய் யாரோடும் பேசிச் சிரித்து, நெடுநாள் சிநேகம் போல ஐக்கியமாகிவிடுகிற சுபாவம். பார்ப்பதற்கும் அப்போது கஷ்கு முஷ்கென்று உருட்டி விட்டாற்போல் இருப்பான். கூடப் பிரயாணம் செய்தவர்களோடு பேசிச் சிரித்துக் களைத்துப்போய் அவன் தூங்கத் தொடங்கினான். ஆரஞ்சுப் பழத்திற்காகக் கத்திவிட்டு, வாங்கிக் கொடுத்ததும் சாப்பிடாமல் தூங்கிவிட்டான். அது கையிலிருந்து உருண்டு ஒரு ஓரமாகக் கிடந்தது. அவ்வளவு கத்தினவன் ஏன் உடனே அதைத் தின்னவில்லை? எனக்கு அப்போது முன்பொருதடவை ரயில் பயணம் செய்தபோது பார்த்த அந்தப் பெண்ணின் ஞாபகம் வந்தது. இந்த இரண்டு படங்களும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருவதுண்டு. ஆனால் எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. சுமார் ஒரு வருடம் கழித்து கலைமகள் தீபாவளி மலருக்காக அழைப்பு வந்தபோது,இந்த இரண்டு படங்களும் இணைந்து கலந்து “சிலிர்ப்பு” என்ற கதையாக உருவாயின.

எழுதி முடிக்கிற வரையில் என்னால் துயரம் தாங்கமுடியவில்லை. ஒரு அபூர்வமான உணர்ச்சிலயம் அது. உடல், உள்ளமெல்லாம் நிரம்பி அன்று நான் கரைந்து கொண்டிருந்த ஞாபகம். 13 வருஷம் கழிந்தும் இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. கடைசி வரிகளை எழுதும்போது ஒரு குழந்தையின் நிர்மலமான அன்பில் திளைக்கும் சிலிர்ப்பும் கசிவும் என்னைக் கரைத்துக் கொண்டிருந்தன. எழுதி முடித்ததும் ஒரு அதிசயமான சுமையிறக்கமும் விடுதலையும் நெஞ்சு கொள்ளாத நிறைவும் என்னை வந்து அணைத்துக்கொண்ட நினைவு இன்னும் எனக்கு இருக்கிறது. “சிலிர்ப்பு’ என்றே பெயர்வைத்துக் கதையை அனுப்பினேன். (எழுதி முடித்த பிறகுதான் தலைப்புக் கொடுக்கிற பழக்கம் எனக்கு.)

என்ன மனிதர் இவர்?

“நான் சிறுகதை ஆசிரியனும் இல்லை. சிறுகதை வாத்தியாரும் இல்லை. (சிறுகதை எழுது என்று யாராவது என்னைக் கேட்டால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிடும்.!) நான் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கதைகளில் ஒன்றோ இரண்டோதான் சிறுகதை என்ற சொல்லுக்குச் சற்று அருகில் நிற்கின்றன. மற்றவைகளைச் சிறுகதை என்றால் சிறுகதை என்ற சொல்லுக்கே இழிவு செய்கிற மாதிரி. இப்படியானல் ஏன் இத்தனை நாழி கதைத்தாய் என்று கேட்காதீர்கள். தோல்வி பெற்றவர்கள்தான் உங்களுக்கு வழி சொல்லமுடியும்”. தி.ஜா. வின் இந்த வரிகளைப் படித்தபோது, அவரது, தன்னடக்கம் வியக்க வைத்தது.

மதுர மணி பற்றி … 

இசை ஞானமும், பாடும் திறமும் உடையவர் தி.ஜா. மதுரை மணி அய்யர் பாட்டு அவர் மனதுக்கு மிகவும் இசைந்த ஒன்று. ‘மதுர மணி’ என்றுதான் அவரை, இவர் குறிப்பிடுவார். அவரைப் பற்றி….

“மணி அய்யரின் தோடி, காம்போதி, சங்கராபரணம், மோகனம், ரஞ்சனி, ஆபோகி முதலியவற்றை யாரும் மறக்க முடியாது. அதேபோல காபிநாராயணி, சித்தரஞ்சனி, கன்னட கௌள முதலிய அபூர்வ ரகங்களில் உள்ள மிகச் சின்ன கீர்த்தனைகளைப் பெரும் காவியங்களாக அவர் பாடிக்காட்டும் தனித்திறமையும் பலர் உணர்ந்திருக்கிறார்கள். பாரதி பாட்டுகளை அவர் பாடும்போது அந்த மந்திரச் சொற்களுக்கு ஒரு புது வேகத்தையும் அர்த்தத்தையும் ஊட்டியிருக்கிறார். சங்கீதப் பெரிய மனிதர்கள் இதெல்லாம் துக்கடா நேரத்துக்காக ஆனவை என்று கீழ்நோக்குடன் புன்னகைக்கலாம். ஸாஹித்யம் பிரதானமில்லை என்ற விதண்டாவாத நிலையினால் பிறந்த துர்ப்பாக்கியம் இது. இதற்காக நாம் மண்டையை உடைத்துக்கொள்ளத் தேவையில்லை. விவேகம் சொல்லி வராது”.

பயணக் கட்டுரைகளில் தி.ஜா வின் பாணி வித்தியாசமானது - சென்ற இடங்களைக் கலை நயத்தோடும், அங்கு சந்தித்தவர்களுடன் உரையாடியதை ஓர் அழகிய கதை போலவும் எழுதியிருப்பார். காவேரிக் கரை கிராமங்களையும், தோப்புகளையும், மனிதர்களையும் சுவாரஸ்யமாக விவரித்திருப்பார். பெண்ணாகரத்தின் வாரச்சந்தை, இளங்கோவடிகள் மாதவி பாடுவதாக எழுதியுள்ள காவிரி (மருங்கு வண்டு சிறந்தார்ப்ப // மணிப்பூ ஆடை அதுபோர்த்துக் // கருங்கயற்கண் விழித் தொல்கி, // நடந்தாய்; வாழி, காவேரி!), ஆற்றில் பாதி மூழ்கிக் கடந்த கார், அமைதியும், பசுமையும் வனப்பும் ஆர்ந்த சுழ்நிலையில் காவேரியைப் பார்க்கக் கூடிய இடம் ‘ஈங்கோய்மலை’  என நிறைய செய்திகள்! உதயசூரியன் - ஜப்பான் பயணக் கட்டுரையில், அங்குள்ள சுறுசுறுப்பு, அமைதி, இனிமை, இயற்கை எழிலுடன் பியூஜி மலைச் சிகரம் என ஏராளமான விவரணைகள்! விமானப் பயணம் குறித்த பயம், குலுங்காமல் செல்லும் விமானம், ஹாங்காங்கில் இறங்கிய, உடன் பயணித்த அமெரிக்க ‘பயல்’ என சுவாரஸ்யம் - தவற விடக் கூடாத பயண அனுபவங்கள்!

 ‘ஒரு மனிதன் வாழ்நாள் முழுக்கப் புத்தகம் படிக்கிற பழக்கம் வெச்சிருந்தால்கூட அவ்வளவு புத்தகங்கள் படிக்கிறதுக்கு வாய்ப்பில்லை. அப்படிப் படிக்கணும் என்கிற அவசியமும் இல்லை. முக்கியமான புத்தகங்களை நல்லாப் படித்தால் போதும்.  தொடர்ந்து எழுதணும்கிற ஆசை இருக்குது இல்லையா? அது மனசில இருந்துதான் பல விஷயங்களை உருவாக்குது’  தி. ஜா (சுராவிடம் சொன்னது).

எழுத்தாளனின் எழுத்தை விட்டு, எழுத்தாளன் என்ற மனிதனை விமர்சிக்கும் சர்ச்சைகளில் அவர் ஈடுபட்டதில்லை. தன்னைக் கடுமையாகத் தாக்கியவர்களை அவர் மிகப் பெரியவர்களென்ற முறையில்தான் நோக்கினார்.

“எல்லா விமர்சனங்களுக்கும் ஜானகிராமன் தன் ஒன்றரைக் கண்ணைச் சிமிட்டி, ஒரு நமுட்டுச் சிரிப்போடு தாண்டிப் போய்விடுவார்.” - பாரதிமணி.

ஐம்பது வருடங்களைத் தாண்டியும், தி.ஜா.வின் படைப்புகள் அதே உயிர்ப்புடன் வாழ்கின்றன! தி.ஜா. என்னும் பெருங்கலைஞனின் சிருஷ்டிகளை ஒரு கட்டுரையில் அடக்கிவிட முடியாது - முடிந்தவரையில் தி.ஜா வின் அதிகம் பேசப்படாத பக்கங்களைத் தொட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

ஜெ.பாஸ்கரன்.

நன்றி :

திரு.ஜெ.பாஸ்கரன்
மற்றும் 

கருத்துகள் இல்லை: