1 நவ., 2020

ஸ்ரீரங்கம் பயணம் : சுஜாதா

ஸ்ரீரங்கம் பயணம் - சுஜாதா

ஸ்ரீரங்கத்துக்கு சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் புறப்பட்டு விடுவேன். ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் அதிகாலை கொண்டு சேர்த்து விடுகிறது. ஒவ்வொரு முறையும் நகர நாகரீகத்தின் தாக்கத்தால் கோவில் சார்ந்த இந்த நகரம் கொச்சைப்படுத்தப்படுவதைக் கவனிக்கிறேன்.
இதுபற்றி வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை. ஆதங்கம்தான்.ஸ்ரீரங்கம் போன்ற கோயில் சார்ந்த தலங்கள் வருஷாவருஷம் மாறத்தான் வேண்டியிருக்கிறது. அதன் குறுகலான தெருக்களில் ராட்சச பஸ்கள் நுழைந்து உறுமுகின்றன. சாப்பாட்டுக் கடைகள் பெருகியுள்ளன. 
விதம்விதமான புகைப்படங்கள், வெண்கல விளக்குகள், மரப்பாச்சி பொம்மைகள் போன்ற பல பொருள்கள் அங்காடிகளில் அதிகமாகியுள்ளன.

ஆதாரமாக ஸ்ரீரங்கத்தின் பொருளாதாரம் இன்றைய தினங்களில் மற்றொரு அடையாளத்தின் மூலம் கிடைக்கிறது. 
இதை இங்கு ஒரு வங்கியில் பணிபுரியும் நண்பர் சொன்னார். ஸ்ரீரங்கம் என்பது ஒரு விதமான சரணாலயம் போல உள்ளது. 
அமெரிக்காவில் சாஃப்ட்வேர் பணிபுரியும் இளைஞர்கள் இங்கே ஒரு ஃப்ளாட் வாங்கி, தத்தம் பெற்றோரைப் பொருத்தி வைத்துச் சென்றிருக்கிறார்கள். 
மாசம் இருநூறு, முந்நூறு மிஞ்சிப் போனால், ஐநூறு டாலர் அனுப்பி வைத்தால் யதேஷ்டம். அவர்களுக்கு அங்கே இது ப்ளாக்பஸ்டர், கோக் பிட்சா காசு இது. இவ்வகையில் ஸ்ரீரங்கத்துக்கு டாலர் வருமானம் அதிகம் என்று நண்பர் சொன்னார்.
உத்திரை, சித்திரை வீதிகளை விட்டு வெளிச் சுற்றுகளில் நிறைய ஃபிளாட்கள் வந்திருக்கின்றன. புறாக்கூடுகள். துறையூர் வழியாகச் செல்லும்போது பிடிவாதமாக மண்ணச்சநல்லூர் வரை இடைவெளி கோபுரங்கள் அனைத்தையும் வண்ணவண்ண கோமாளி கலர் பெயிண்ட் அடித்துவிட்டார்கள்.

கோவில் யானையான ஆண்டாள் லீவுக்கு முதுமலை போய் ரெஸ்ட் எடுத்து வந்து தெம்பாகத் தலையாட்டிக் கொண்டிருக்கிறது. பெருமாள் உற்சவருக்கு பளபளப்பாக வைர முடி சார்த்தியிருந்தார்கள்.
ஐயப்பா கூட்டமும் எப்போதும் க்யூவில் நிற்கிறார்கள். திருமடப்பள்ளியில் செல்வரப்பமும், தேன்குழலும் இன்னமும் கிடைக்கிறது.

இவைகள் அனைத்தின் இடையிலும் என்னுடைய பழைய  ஸ்ரீரங்கத்தைத் தேடினேன்.

கிடைக்கவில்லை. காவிரியில் தண்ணீர் நெளிவதைப் பார்த்ததும் சற்று ஆறுதல். அரங்கனின் தீவும், ஒரு மிகப் பெரிய டூரிஸ்ட் தலமாக மாறிப் போய் அம்மா மண்டபம் வரை நிற்கும் பேருந்துகளின் ஜன்னல்களில் ஈரத்துண்டுகள் காய்கின்றன. கோவிலை நெருங்குவதற்கே ஒன்றரை மைல் சுற்ற வேண்டியிருக்கிறது.

ரங்கவிலாசத்தில் நகர இடமில்லாமல் கடைகள் இரண்டு பக்கமும் அடைத்துக் கொண்டுள்ளன. என் மனைவி வெண்கல விக்கிரகம் ஒன்று வாங்கினாள். 
கடைக்காரர் ஆயிரத்து ஐநூறு ரூபாய் சொன்னார். ”ஸார் யாரு தெரியுமில்ல, புஸ்தகத்தில் எழுதிடுவார்” என்று கூட வந்தவர் சொன்னதும், இருபத்தைந்து பைசா குறைத்துக் கொண்டார்.

தேவஸ்தானத்து அதிகாரியுடன் சென்றதால் ரங்கனின் தரிசனம் விசேஷமாகக் கிடைத்தது. குத்துவிளக்கு வெளிச்சத்தில் கற்பூரத்தின் ஒளிப்பிழம்பு. உற்சவர் முன் சற்று நேரம் நின்றபோது மட்டும் என்னால் ஆறாம் நூற்றாண்டுக்குப் போக முடிந்தது.

இன்றைய ஸ்ரீரங்கம் திருச்சி கார்ப்பரேஷனின் ஓரங்கம். ஏ.டி.எம்.களும் தாறுமாறான கேபிள்களும் அம்மா மண்டபத்திலிருந்து தொடர்ந்து நிற்கும் ஆம்னி பஸ்களும் பெண்கள் கல்லூரியும் புதிய பள்ளிகளும் என்ன என்னவோ நகர்களும் மேம்பாலங்களும் என்னுடைய ஸ்ரீரங்கமல்ல.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் திருப்பணியில் ஒரு சிக்கல் எழுந்தது. ’திரு உறை மார்பன்’ என்று சிலப்பதிகாரத்தில் சொன்னபடி பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாதருக்கு மார்பில் ஒரு இலக்குமி வடிவம் உண்டு.
திருப்பணி செய்யும்போது அதற்கு பதில் தந்திர சாஸ்திரத்துக்கு ஏற்ப ஒரு முக்கோணம் வைத்தார்கள். அதை சில பெரியவர்கள் ஆட்சேபித்தார்கள். என்னை அணுகினார்கள்.

நான் அமைச்சர் தமிழ்க்குடிமகன் அவர்களுடன் பேசினேன். அவர் உடனே இதைக் கவனித்து அதிகாரிகளுடன் பேசினார். 
இலக்குமி மறுபடி அரங்கனின் மார்பில் பெண்கள் தினத்தன்று (மார்ச் 8) வாசம் செய்யத் துவங்கியிருக்கிறாள்.

இதில் ஒரு சின்ன வியப்பான சமாசாரம், ஸ்ரீரங்கத்தில் ஓர் ஆஸ்திரேலியர் தன் பெயரை கேசவன் என்று மாற்றிக் கொண்டு, குடுமி வைத்துக் கொண்டு, தினம் பெருமாளுக்கு பெரியாழ்வார் மாதிரி கைங்கரியம் செய்து கொண்டு அண்மைக் காலமாக வாழ்கிறாராம். அவரிடம் தீ விபத்துக்கு முன் எடுத்த பழைய ஃபோட்டோக்களைக் காட்டியபோது, அவர் அவைகளை ஸ்கான் பண்ணி, பஜ் என்று இருந்த அந்த மார்புப் பகுதியை தன் லாப் டாப்பில் ஸ்கேன் பண்ணி, டிஜிட்டலாக அதை பெரிது படுத்தி பிழை நீக்கிப் பார்த்ததில் இலக்குமி தெரிந்தாளாம்.

நன்றி :

கருத்துகள் இல்லை: