1 நவ., 2020

கோணங்கி விஜயம்!

நான் ஆசிரியராகப் பணியாற்றிக்   கொண்டிருந்த பள்ளிக்கு ஒரு நாள் திடீரென வந்தார் கோணங்கி. உள்ளே வரலாமா ஸார் என்று அனுமதி கேட்டு நிற்கும் ஒரு மாணவனைப் போல் வகுப்பறை வாசலில் வந்து நிற்கிறார்.  உடன் நண்பர் மணிவண்ணன்.  
உள்ளே வாங்க  கோணங்கி ! 

என்ன மணிவண்ணன் திடுதிப்புனு .......  

இல்ல ஸார்  தோழர் அப்பணசாமி வீட்டிலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தார் கோணங்கி   ,  போற வழியில் ஒரு பஸ் ஸ்டாப்பில விட்டுடுங்க அப்பிடின்னு அப்ஸ் - ஜுவசுந்தரியும் சொன்னாங்க . நான் தான் கிண்டி வரைக்கும் போறேன் உங்கள எங்க  விடணுமோ அங்க கொண்டுபோய் விடுறேன்னு சொல்லி கூட்டிகிட்டு வந்தேன் . அப்பிடியே போற வழியில்  உங்கள் ஸ்கூலுக்குப்  போவோமான்னே ,  சரின்னுட்டார்.  வர்ற  வழியில் அயப்பாக்கம் ஆலமரத்தப் பார்த்து , வண்டிய நிறுத்தச் சொல்லி  அப்படியே உட்கார்ந்துட்டார் ஸார்.... நான் தான்  வாங்க  போகலாம்னு கூட்டிக்கிட்டு வந்தேன் என்று ஒரு முன்கதைச் சுருக்கம் சொன்னார் மணிவண்ணன்.  

இதற்குள் மாணவர்களுக்கிடையே  வாகாக உட்கார்ந்து கொண்டு,   வகுப்பறை 
யை , மாணவர்களை  வேடிக்கை பார்ப்பது போல் இருந்தார் கோணங்கி.
 மாணவர்களிடம் ஏதாவது  பேசுங்களேன்  என்றேன். 
கரும்பலகையில்  எழுதியிருந்தைக் காட்டி - இது என்ன என்று மாணவர்களிடம் கேட்டார் 
பாடம் , கேள்வி பதில், எழுத்து  என்று  பலவாறு பதில்கள்  வந்தன . 
சரிடா தம்பி . நீ எப்ப , எதில மொத மொத எழுதின ? 
நோட்ல ஸார்.  
பேனாவால. 
நான் போர்டுலதான்  மொத மொத கிறுக்கினேன். 
இப்படி பலமாதிரி விடைகள். 
நான் தரையில தான் மொத மொத கிறுக்கினேன் என்றான் ஒருவன். 
ஆங்..... கோணங்கி புடித்துக் கொண்டார் . அப்ப இது எல்லாம்  கோடுதான் என்றார் கரும்பலகையைக் காண்பித்து. 
 கல்ல வச்சு மரத்தில அழுத்திக் கோடுபோட்டேன் ...... பச்சையா கோடு வந்துச்சு...என்றான் ஒருவன் 
ஆங் அப்பறம். .. ஒரு கதைசொல்லி உற்சாகமாக கதை கேட்கத் தொடங்கி விட்டார். நானும் மணிவண்ணனும் பார்வையாளர்களானோம்.
எல்லாமே கோடுதாண்டா தம்பி. 
ஸார்...... ஜன்னல் கம்பி கோடு மாதிரி இருக்கு. ..
ஜன்னல் கதவு , சைக்கிள் கம்பி , கொடிக்கம்பம் ,  டேய் கொடிக்கயிறு , கொடி ,   தொடப்பக்குச்சி, ஸார் நம்ம முடி ,  தலை வகிடு, ஜடை,  சீப்பு. .... சாக்பீஸ், பென்சில்,  பேனா, ரோடு, தண்டவாளம் .... சற்று நேரத்தில் அங்கே சுற்றி  இருந்த  பொருட்கள் அவர்கள் பார்த்த,  அனுபவத்திற்கு  உட்பட்ட  எல்லாமும் கோடுகளாக ஆகிவிட்டிருந்தன.
 ஒரு  இடைவெளியில் கோணங்கி சொன்னார் - எல்லாம் கோடுதான்.  எழுத்துந்தான் என்றார். 
சற்று நேரத்திற்குள்  எதையும் சொல்லலாம்  என்ற துணிச்சல் அங்கே  உருவாகிக்  கிளம்பியது. ஒரு மாணவன் ஒல்லியாக இருக்கும்  ஒருவனை  கோடு  என்றான்.  இன்னொருவன் ஸார்... என இழுத்து என்னைச் சுட்டிக் காட்ட ,நான் கோடானேன் . ஒருவன் கோணங்கியைக் காட்டி அண்ணனும்  கோடு தாண்டா  என்றான்.  வகுப்பே கைதட்டி  ஆர்ப்பரித்தது . 
ஸார் இவன் மிமிக்ரி பண்ணுவான் ஸார்.
 அண்ணே இவன் ஸார்  பாடம் நடத்துற மாதிரியே நடிப்பான் என்றான். 
அப்டியா ... அப்டியா... எங்கே செய்டா பாப்போம் .
உரையாடலில்  இருந்து நிகழ்த்து கலைக்குத் திரும்பியிருந்தது வகுப்பு. 
நான் பாடம் நடத்துவதுபோல் செய்து காண்பித்தான்  அந்த  மாணவன் (   பாடத்தின் முடிவில் ஆசிரியர்  எரிச்சல் அடைந்து கோபப்படுவதாக அந்த மிமிக்ரி  இருக்கும் ). வழக்கம்போல் வகுப்பு  கைதட்டி வரவேற்றது. 
வெரிகுட். ...வெரிகுட்றா தம்பி...... 
கூடவே புறப்படுவதற்கான எத்தனிப்புகளைச் செய்ய ஆரம்பித்தார்.  மாணவர்கள் கோணங்கியை விடுவதாக இல்லை.  ஒருமாதிரி  விடுபட்டுக் கிளம்பி விட்டார்.  இடையில்  பக்கத்து  வகுப்புகளில் இருந்து மாணவர்கள்,  ஆசிரியர்கள்  வந்து எட்டிப் பாத்துப்  போனார்கள் .
 நண்பர் என்றேன். 
ஆசிரியர்  இரகுவிடம் - இவர் தான்   எழுத்தாளர்  கோணங்கி  என்று  அறிமுகம்  செய்வித்தேன். நானும் மாணவர்களும்   வாசல் வரை சென்று வழி அனுப்பி விட்டு வந்தோம். வண்டி புறப்பட்டது . வண்டி போறது கோடு மாதிரியேஇருக்கு என்று  கூவினான் ஒருவன். 
வகுப்பறைக்கு வந்து  கணக்குப் பாடத்தை தொடர உத்தேசித்து நான்கு  இலக்க எண் ஒன்றை  எழுதி ஒரு மாணவனை  வாசிக்கக் கூறினேன் .                         
"ஸார்  கோடு ஸார்  "என்று கூலாகச் சொன்னான்
இன்று வழக்கமான பாடம் இனி  சாத்தியமில்லை என்பது புரிந்தது.  எல்லாம்  கிரவுண்டுக்கு போ . நான்  வர்றேன் என  உத்தரவிட்டேன்.  எனது உத்தரவு மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ,  உடனடியாக  நடைமுறைப்படுத்தப்பட்டது.

நன்றி :

கருத்துகள் இல்லை: