தி.ஜா. 100. (கதை35) -
சந்தானம் (கணையாழி மே-ஜூன் 1968).
குழந்தை குட்டிகள் இல்லாதவர்களுக்கு, வீட்டில் வளர்க்கும் பிராணிகளே - பூனையோ, நாயோ - ’சந்தான பாக்யமாக’ வலம் வருவது இயல்பு. குழந்தைகளுக்கு அளிக்கப்படும் அனைத்து சலுகைகளும், உரிமைகளும் அவற்றுக்குக் கொடுக்கப் படும்! அப்படிப்பட்ட முதலியார் வீட்டு சந்தானம் - பிள்ளை, பெண்ணு, பேரப்பிள்ளை எல்லாம் அதுதான் - ‘கிட்டி’ என்னும் பூனையைச் சுற்றி தி.ஜா. சொல்லும் சிறுகதைதான் ‘சந்தானம்’!
முதலியாருக்கு சந்தான பாக்கியம் கிடையாது. ஐம்பத்தி எட்டு வயது முதலியாருக்கும், ஐம்பத்தி மூன்று வயது ஆகும் அவர் மனைவிக்கும் வீட்டில் வளரும் ‘கிட்டி’ பூனையே வீட்டு சந்தானம். முதலியாருக்கு எதிரில் நாற்காலியில் மெத்தை மீது படுத்திருக்கும் கிட்டி. கிட்டியுடன் முதலியார் தம்பதிகள் பேசுவதை தி.ஜா. தனக்கே உரிய நடையில் எழுதியிருக்கிறார் - அப்படியே பாத்திரங்களின் மன ஓட்டத்தையும் வாசகனுக்குச் சொல்லிவிடுகிறார்.
“இங்க வாடின்னா” குதித்து வரும் கிட்டியை மடியில் வைத்துக்கொண்டு, “பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” . தெரியுமாடி கிட்டி?”. என்பார். பூனைக்கு என்ன தெரியும்; புரண்டு மல்லாந்து மீசையைக் காட்டி வாயைப் பிளந்து கூர்ப் பற்களைக் காட்டிற்று. அவர் மனைவிக்கோ அதன் மீது பாசம்: ”அனுப்புங்க அவளைக் கொஞ்சம். வெந்நீர் சாதம் போடறேன். கார்த்தாலெ ஒரு ஆளாக்கு பால் குடிச்சதுதான். ஏய், கிட்டி, வறியா?”.
மூன்று வருடங்களுக்கு முன்னால் - அப்போது கிட்டிக்கு வயது நான்கு மாதம் - எதிர் வீட்டுக்குக் குடியேறிய ஜில்லா போலீஸ் தலைவர் முத்தையாவுக்குப் பூனைக் குட்டிகள் என்றாலே பிடிக்காது - பயம்! ஆனால் அவரைக் கண்டால் ஊருக்கே பயம் - ஏரியா எம் எல் ஏ, விறகுக் கட்டுகளை அடாவடியாகப் பிடுங்கி ஏலம் விடும் கோபாலக் கோனார், குடித்துவிட்டு எல்லோரையும் வேசிகளாகத் திட்டும் மாமுண்டி, சீட்டாடும் அக்கிரகாரத்துப் பெண்கள், எல்லோரும் இருக்கும் இடம் தெரியவில்லை! எல்லா இடங்களிலும் ஒழுங்கான கியூ வரிசை - எல்லாம் முத்தையா வந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்கள்! மேலும் அவர் மாறு வேஷங்களில் ஊரில் வலம் வருவதாகவும், முருங்கைக்காயை யாரோ கொடுக்க அதை வாங்கிக்கொண்ட அவர் சம்சாரதையே மூன்று நாட்கள் அறையில் பூட்டி வைத்தாராம் - ஆறு மாதம் பிறந்த வீட்டுக்கு அனுப்பி விட்டாராம் என்ற கதைகள் வேறு! “நல்லவன் என்றால் கோமாளியாக்கவும் தயங்கமாட்டார்கள் ஜனங்கள்” என்கிறார் தி.ஜா.
முத்தையாவின் சின்னப் பையன் ஒரு நாள் கிட்டியுடன் விளையாடிவிட்டுத் தன் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறான் - அன்று மாலையே முத்தையாவின் சம்சாரம் வந்து “பையன்கிட்டே பூனைக்குட்டியை குடுக்காதீங்க. அவுங்களுக்குப் பூனைக் குட்டியக் கண்டா வாய் கொளரும், கிலி பிடிச்சாப்பல ஓடுவாங்க. சிங்கம், புலி, பெரிய பூனையெல்லாம் பார்ப்பாங்க. குட்டி மட்டும் கண்ணிலே படப்படாது” என்கிறாள். முதலியாரும் மனைவியும் இரக்கப்பட்டாலும், சிரிக்காமல் இருக்க முடியவில்லை! மேலும், கிட்டியைக் காட்டி, பயமுறுத்தி, முத்தையாவிடம் தான் சினிமா போக அனுமதி வாங்கியிருக்கிறான் அந்தப் பையன்! அது (பூனைக் குட்டி) போன பிறகே மாடி அறையிலிருந்து வெளியே வருகிறார் முத்தையா - பேயறைந்தாற்போன்ற முகத்துடன். இதை நினைத்து நினைத்துச் சிரிப்பார்கள் முதலியாரும் அவர் மனைவியும்.
திடீரென்று ஒருநாள் முத்தையா இறந்துவிடுகிறார். அவர் மனைவி, மகன்களை நினைத்து முதலியார் தம்பதிகள் வருத்தப் படுகிறார்கள். பத்துப் பன்னிரண்டு நாட்கள் கழித்து, இறுதி ஈமச்சடங்கு நடக்கிறது. அன்று, கிட்டி கிணற்றுக்குள் விழுந்துவிடுகிறது: “கிட்டி நீர்மட்டத்தில் பாசி பிடித்த பொக்கை விழுந்த இரண்டு அங்குலப் படியில் பற்றிப் பற்றி நழுவிக்கொண்டிருந்தது” - பதறிப் போகிறார்கள் - முதலியார் அழத் தொடங்கி விடுகிறார். கயிற்றையும் பக்கெட்டையும் விட்டுப்பார்த்தும் ஒன்றும் பயனில்லை.
பிள்ளைகளைக் கருமாதிக்கு அனுப்பிவிட்டு, தரையில் குப்புறக் கிடக்கும் முத்தையாவின் சம்சாரத்திடம் உதவி கேட்கிறார். இங்குதான் தி.ஜா. தன் கதையின் மையப் புள்ளியைக் காட்டுகிறார். முத்தையாவின் பயத்தைக் கேலி செய்தவர், கிட்டிக்குப் பயந்து, தன் மகனைச் சினிமாவுக்கு அனுபியதை நினைத்து கிண்டலாகச் சிரித்தவர், முத்தையாவின் மனைவியிடமே உதவி கேட்கிறார். “உங்க ஐயாவை நான் வேணும்னு பயமுறுத்தலெம்மா. பூனையும் வேணும்னு செஞ்சிருக்காது. அதுக்கென்ன தெரியும்? பாவம் பாவம்தானே? கிணத்திலெ விழுந்திடிச்சிம்மா. உசிருக்கு மன்றாடிட்டு கிடக்கு” என்று கண்ணீர் விடுகிறார்.
முத்தையாவின் மனைவி கேட்டுக்கொண்டதின் பேரில் தீயணைக்கிற மோட்டார் வருகிறது. கிணற்றில் இறங்கி, கம்பளி ஒன்றைப் போர்த்தி, பூனையை வெளியே எடுத்துவிடுகிறார்கள். அதற்குள் முதலியார் படும் அவஸ்தையை தி.ஜா. விவரிப்பது, நம்மையும் பதபதைக்க வைப்பது! ’எல்லாச் சந்தானங்களின் போஷாக்கையும் ஜீரணித்து முக்கால் நாய் அளவுக்கு வளர்ந்திருந்த’ கிட்டி வெளியே வந்து முதலியாரைப் பார்த்தும் சீறுகிறது - முதலியார் கெஞ்சுகிறார் செல்லமாக!
இறைவன் படைப்பில் சந்ததிகளைக் கொடுத்தும், கொடுக்காமலும் விளையாடுவது இயற்கை. பூனைக்குட்டியைப் பார்த்து முத்தையா கிலி கண்ட கதையில் கேலி செய்ய என்ன இருக்கிறது என்று முதலியார் உணர்கிறார். “முத்தையாவை இது கிலி மூட்டினத்துக்காக சந்தோஷப்பட்டோம் - அதுதான் நமக்கு வினையா வந்திடிச்சு” என்று முதலியார் சொல்வதில் உண்மை இருக்கிறது.
“தெரியாமக் கூட யாருக்கும் தொல்லை கொடுக்கக் கூடாது. உடனே இல்லாட்டியும், எப்பவாவது அதற்குத் தண்டனை கிடைச்சிடும்”
சில பெற்றோர் தேவைக்கதிகமாக செல்லம் கொடுத்து வளர்க்கும் குழந்தைகள், எப்படி அவர்களுக்கெதிராக மாறுவார்கள் என்பதை, கிணற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட கிட்டி முதலியாரைப் பார்த்து சீறுவதை தி.ஜா. ஒரு குறியீடாகச் சொல்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
மீண்டும் அடுத்த வாரம் மற்றொரு கதையுடன்……
ஜெ.பாஸ்கரன்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக