27 ஏப்., 2021

நூல் நயம் : பூமணியின், "அஞ்ஞாடி"


நன்றி :

RM 255
28/25

அஞ்ஞாடி
- பூமணி

அம்மாவை அஞ்ஞை என்று அழைக்கும் கரிசகாட்டு கலிங்கல் பள்ளர் குடியில் ஆரம்பிக்கும் கதை. இப்போது புரிகிறதா... அஞ்ஞாடி என்றால் என்ன அர்த்தம் என்று?! நமக்கு படிக்கும் போதே 1000 முறை அஞ்ஞாடி என்று பெருமூச்சு விட வைத்து விடும் 1950 பக்க பொக்கிஷம். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த ஒரே புத்தகத்தில் மூழ்கி மூழ்கி எடுத்த முத்துக்களை மாலையாக கோர்த்தால் உலகத்தில் உள்ள அத்தனை சாமிகளுக்கும் போட்டு விடலாம்.
இதுவரை நான் படித்த நாவல் களிலேயே ஆகச் சிறந்த உண்மையான வரலாற்று நாவல் என்று தயக்கமே இல்லாமல் "அஞ்ஞாடி"யை மிகப் பெருமையாக சொல்வேன். கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றை தங்கு தடையின்றி எப்படித்தான் மனிதர் இப்படி எழுதினாரோ தெரியவில்லை. வாழ்க்கையில் ஒரு தடவையேனும் பூமணி அவர்களை சந்தித்து காலில் விழுந்து கும்பிட வேண்டும் போலிருக்கிறது. என்னால் நாவலில் பேசப்பட்ட விஷயங்களை சத்தியமாக தொகுத்தோ விவரித்தோ எழுத முடியவே முடியாது. எப்படி எழுதினாலும் குருடன் யானையை அல்ல... மொத்த உலகத்தையும் தடவிப் பார்த்து விவரித்தது போல் இருக்கும்.

இது என்.சிவராமன் எழுதிய நாவலின் பின்னுரையின் ஒரு சிறு பகுதி -
கடந்தகாலத்தில் நிகழ்ந்ததாகக் கூறிக்கொண்டு வாராவாரம் கிளுகிளுப்புக் காக எழுதப்பட்டு வருஷக் கணக்கில் வந்ததெல்லாம் வெறும் சரித்திரக் கதைகள் தான். ‘அஞ்ஞாடி...’ தான் உண்மையில் தமிழின் முதல் வரலாற்று நாவல்.
இது முதலில் ஒரு நல்ல நாவல். பிறகு ஒரு தகவல் களஞ்சியம். சவுரி முடிமுடியின் மூலம் தெரியுமா? மூல நோய்க்கு எத்தனை விதமான நாட்டு வைத்திய முறைகள் இருக்கின்றன? அகத்திக் கீரையை ஒரு வாரம் வைத்துக்கொள்வது எப்படி? பெண்ணை வசப்படுத்தும் உபாயம் என்ன? மீசையின் ஆறு வகைகள் என்ன? வீட்டுக்கூரை, படப்பு வேய்வது எப்படி? தேடுங்கள். கிடைக்கும். இழந்துவிட்ட இந்த வாழ்வை இனிக் கற்பனையில்தான் உருவாக்கிக்கொள்ள முடியும் என்ப தால் இதை ஒரு அருங்காட்சியகம் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். பஞ்சம், ஜாதிச் சண்டை, ஒரு இனமே இடம்பெயர்வது, பல்வேறு ஜாதிகளின் பொறா மைக்கும் எதிர்ப்புக்குமிடையே நாடார்களின் பொருளாதார முன்னேற்றம், தங்கள் சமூக மேம்பாட்டுக்கான அவர்களது முயற்சி, வெள்ளைக்காரர்களுக்கு எதிராக அங்கங்கே நடந்த சண்டைகள், ஆடுமாடுகளை, கோவில் நகைகளைத் திருடுவது, எந்திரமயமாதலின் விளைவுகள் எனப் பல தலைப்புகளிலான சமூக ஆவணம். ஒரு தரமான ஆய்வேடு. பல பரிமாணங்களுடனானபெயரில்லாத பாத்திரமொன்று பனைமரங்களைப் பற்றிச் சொல்கிறது. ‘அதென்ன இண்ணைக்கு நட்டி நாளைக்கு மொளச்சு வளருத பயிரா. ஒரு தலமொற வளத்து மறுதலமொறைக்குக் குடுத்துட்டுப்போற சீதனம்.’ இந்த நாவலும் அப்படித்தான். இன்பமும் துக்கமும் நிறைவும் ஏக்கமுமான நினைவுகள், பல தலைமுறை வாழ்க்கை-ஒரு நாவலுக்கான நியாயமே அது வாழ்க்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுதான்-இவற்றை செறிந்த மொழியில் அடுத்த தலை முறைகளுக்கு அளிக்கும் கலாச்சார மூலதனம். தமிழில் நல்ல நாவல்கள் இருக் கின்றன. ஆனால் great  நாவல் இல்லை. இன்னும் எழுதப்படாத அந்த great  நாவலுக்கு மிக அருகில் வந்திருக்கிறது பூமணியின் ‘அஞ்ஞாடி...’. 

வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு அவ்வப்பொழுது திருப்பி திருப்பி படித்து அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்கிற அளப்பரிய ஆசையை கொடுத்துவிட்டது "அஞ்ஞாடி"

கருத்துகள் இல்லை: