28 ஜூலை, 2021

அந்த நாள் நினைவுகள் : பழைய சென்னை


‘அல்வா வேண்டும்’ என்று கேட்டால், அவர் மிகப்பெரிய பணக்காரர் என அர்த்தம்... அனைவரும் அவரையே பார்ப்பார்கள்... அந்தக் கால 'ஆஹா ஓஹோ' சுவைமிகு ஹோட்டல்கள் நிறைந்த சென்னை!

'மதராஸ்’ என அழைக்கப்பட்ட அக்காலம் முதல் சென்னை என அழைக்கப்படும் இக்காலம் வரை ஓகோ என சுவையாக சூடாகப் பேசப்பட்டு வரும் உணவு விடுதிகள் அதாங்க ஹோட்டல்கள் பல உண்டு நமது தருமமிகு சென்னையில்! அன்றைய சென்னை நகரம் இன்றைய அளவை விட மிகவும் சிறியது. இன்று பிரபலமாக விளங்கும் பல பகுதிகள், அன்று காடாகவும் கட்டாந்தரையாகவும் தோப்புகளாகவும் இருந்திருக்கின்றது.

உணவு விடுதிகள் பெரும்பாலும் ‘டவுன்’ என்று அழைக்கப்படும் வடசென்னைப் பகுதியில்தான் இருந்தன. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், அந்த நாளில் கல்லூரிகள், ஆபீஸ்கள், நீதிமன்றங்கள் எல்லாம் இந்த ‘டவுன்’ பகுதியில்தான் இருந்தன. 

பெரும்பாலான விடுதிகளின் வாசலில் ‘பிராமணாள் காபி ஓட்டல்’ பலகைகள் தொங்கும். இந்த வழக்கம் 1950-வரை நீடித்திருந்தது!

தங்கசாலைத் தெருவில் ‘காசி பாட்டி ஓட்டல்' என்று ஒரு ஓட்டல் இருந்தது. காசிக்குச் சென்று வந்த ஒரு பிராமண அம்மையார், போற இடத்துக்குப் புண்ணியம் கிடைக்குமென்று இந்த உணவு விடுதியைத் தொடங்கினார். அவருடைய சமையல் சுவையாக இருந்ததால் கூட்டம் சேர ஆரம்பித்தது. அந்த நாளில் உணவு விடுதிகளை நடத்துபவர்கள் ‘தாங்கள் செய்வது வியாபாரமல்ல… அன்னதானம்’ என்றுதான் நினைத்தார்கள். ‘லாபத்தைவிட புண்ணியம்தான் பெரிது’ என்று நம்பினார்கள். அதனால்தான் அந்த நாளில் ‘அளவுச்சாப்பாடு’ என்ற பேச்சே கிடையாது. காசி பாட்டி ஓட்டலில் எடுப்புச் சாப்பாட்டின் விலை இரண்டணா. நெய் தாராளமாகவே பரிமாறப்படும்.

அன்றைய ‘மெட்ராஸ் பிரசிடென்ஸி’ என்று அழைக்கப்பட்ட சென்னை மாகாணம், இருபத்தாறு ஜில்லாக்களைக் கொண்டது. அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நாலாயிரம் வக்கீல்கள் இருந்தனர். நீதிமன்றத்துக்கு வரும் கூட்டம் மிகவும் அதிகம். அவர்களை நம்பி நடத்தப்பட்ட உணவு விடுதிகள் பல உண்டு.

தம்புச்செட்டித் தெருவில் இப்படிப்பட்ட உணவு விடுதிகள், தஞ்சாவூர், உடுப்பி, பாலக்காடு ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் கைகளில்தான்  இருந்தன. தம்புச்செட்டித் தெருவில் ‘மனோரமா லஞ்ச் ஹோம்’  ஏ.நாராயணஸ்வாமி ஐயர் என்பவரால் 1920-இல் தொடங்கப்பட்டது. இங்கு அனைத்துமே நெய்யில்தான் செய்யப்படும்.

வக்கீல் குமாஸ்தாக்கள் சங்கத்தினர், இந்தத் தெருவில் ஒரு கேன்டீனைத் தொடங்கினர். இந்த விடுதியில் வியாபாரம் பிற்பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரைதான். இரண்டு மணிக்குப் பிறகு மிஞ்சியிருக்கும் இட்லி, போண்டா, வடை போன்றவற்றைப் பாதி விலைக்கு விற்று விடுவார்கள். ‘தம்புச்செட்டித் தெருவில் சிற்றுண்டி உணவகம் வைத்தால் லாபம் தரும்’ என்றொரு நம்பிக்கை பலரை இந்தத் தெருவுக்கு அழைத்தது. இந்த நாளில் ‘சரித்திரம் படைத்த ஓட்டல் சக்கரவர்த்தி’ என்று அழைக்கப்பட்ட ‘தாசப்பிரகாஷ்’ புகழ் கே.சீதாராமராவ் இங்குதான் வளரத் தொடங்கினார்.

சீதாராமராவ் இந்தத் தெருவில் ஒரு லாட்ஜையும் கட்டினார். அது மட்டுமல்ல… தனது பணியாளர்களை சென்ட்ரல், எக்மோர் ஸ்டேஷன் போன்ற இடங்களுக்கு அனுப்பி, சென்னைக்கு வரும் ரயில் பயணிகளைத் தன் விடுதிக்கு அழைத்து வர ஏற்பாடுகளைச் செய்வார். இன்று உலகளவில் மிகப் பிரபலமாக இருக்கும் ‘மசாலா தோசை’யைச் சென்னைக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான். நெய்யில் செய்யப்பட்டு, ‘மைசூர் மசாலா தோசை’ என்று அழைக்கப்பட்ட இதன் விலை அரையணா. 

அன்று ஓர் இந்திய ரூபாய்க்குப் பதினாறு அணாக்கள். ஒரு அணாவுக்கு நாலு காலணா அல்லது பன்னிரண்டு தம்பிடிகள். அதாவது, ஒரு ரூபாய்க்கு 192 தம்பிடிகள். பன்னிரண்டு தம்பிடிகள் கையில் இருந்தாலே, வயிறு நிறையச் சாப்பிடலாம். ‘மைசூர் போண்டா’ என்று அன்றுபோல இன்றும் அழைக்கப்படும் இந்தச் சுவையான சிற்றுண்டியைச் சென்னைக்குக் கொண்டு வந்தவரும் சீதாராமராவ்தான்.

உடுப்பி சமையல் முறையில் சாம்பார், ரசம் ஆகியவற்றில் வெல்லத்தைச் சற்றுக் கலப்பார்கள். இதற்குத் தனியான சுவை உண்டு. இரண்டு இட்லிக்கு இரண்டு பக்கெட் சாம்பார் சாப்பிடுபவர்களும் அந்த நாளிலும் உண்டு. ‘நான் இரண்டு இட்லி, இரண்டு பக்கெட் சாம்பார் ஆசாமி’ என்று சொல்லிப் பெருமைப்படுவதில் அந்த நாளில் பலர் இருந்தனர்.

‘பிராட்வே’ என்றழைக்கப்படும் குறுகிய சாலையிலும் பிரபலமான உணவகங்கள் இருந்தன. இந்தத் தொழிலில் முன்னோடியாகக் கருதப்படும் சங்கர ஐயர், இங்கு ‘சங்கர் கபே’ என்ற பெயரில் ஒரு உணவகத்தைத் தொடங்கினார். இது மிகவும் பிரபலமடைந்தது. இந்த இடத்தில்தான் பின்னாளில் ‘அம்பீஸ் கபே’ இயங்கத் தொடங்கியது.

இன்று முழுமையாக மறக்கப்பட்ட மற்றொரு உணவகம் ‘கராச்சி கபே’. இதைத் தொடங்கியவர்கள், சென்னையின் மிகப் பிரபலமான துணி வியாபாரிகளான கிஷன்சந்த்ஸ்-செல்லாராம்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களெல்லாம் சிந்திக்காரர்கள். கராச்சியிலிருந்து வந்தவர்கள். 

இது, ஹை-கோர்ட்டுக்கு எதிரில், இன்றைய பாம்பே மியூச்சுவல் கட்டடத்துக்கு அருகே இருந்தது. சென்னை நகரத்திலேயே முதன்முறையாக ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட ஒரு தனியறை அந்த நாளில் சரித்திரம் படைத்தது. இந்த உணவகத்தின் வாசலில் நின்று வேடிக்கை பார்ப்பதுண்டு. ‘உள்ளே போனா குளிருமாமே” என்று மூக்கின்மேல் விரலை வைத்தவர்களும் உண்டு. இந்த உணவகத்தின் ‘கராச்சி அல்வா’ அன்று மிகப் பிரபலம். 

அந்த நாளில் இனிப்புப் பண்டங்களுக்கு வடஇந்திய அடையாளத்தோடு பெயர்கள் வைப்பது வழக்கம். காசி அல்வா, டெல்லி பாதுஷா, கல்கத்தா மல்கோவா, பாம்பே அல்வா… இப்படிப் பல! இவற்றின் விலை இரண்டணாதான்.பாதாம் அல்வாவுக்கு என்றுமே தனிச் சிறப்பு உண்டு. அதன் விலை மூனணா.

‘இந்த அல்வா வேண்டும்’ என்று ஒருவர் கேட்டால், அவர் மிகப் பணக்காரர் என்று அர்த்தம். எல்லோரும் அவரையே பார்ப்பார்கள். பாதாம் அல்வா என்றால், உடனே மனதில் பளிச்செனத் தோன்றுவது, ‘கோயம்புத்தூர் கிருஷ்ண ஐயர்’தான். மிகப் பிரபலமான இந்த உணவகம் திருவல்லிக்கேணி பைகிராஃப்ட்ஸ் சாலையில் (பாரதியார் சாலை) இருந்தது. 

இதன் உள்ளே சென்றால், படாடோபம் இல்லாத ஒரு நடுத்தர வீடு போலத்தான் இருக்கும். ஆனால், இங்கு வக்கீல்கள், எழுத்தாளர்கள், சினிமாவுலகப் பிரமுகர்கள் அன்றைய சென்னை நகரத்தின் பல பிரபலங்களை அடிக்கடிப் பார்க்கலாம். சரித்திரம் படைத்த எஸ்.எஸ்.வாசன், கல்கி போன்றவர்களும் இங்கு வருவதுண்டு. பாதாம் அல்வாவைச் சாப்பிடுவதற்கென்றே சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருவார்கள்.

அதுபோலவே, மயிலாப்பூரில் ‘ராயர் ஓட்டல்’ மிகவும் பிரபலம். ‘இங்கு இட்லி சாப்பிட்டால்தான் காரியங்கள் சரியாக நடக்கும்’ என்று அந்த நாளில் நினைத்தவர்களும் ஓட்டலுக்கு ரெகுலர் கஸ்டமர்கள். இதில் சினிமாக்காரர்களும் உண்டு. அவர்களில் ஒருவர், ஜெமினி கணேசன்! 

அதுபோலவே, தங்கசாலைத் தெருவில் ‘சீனிவாஸ் பவன்’ மிகவும் புகழ்பெற்றது. இந்த உணவகம் மாலை 7 மணிக்குத் திறக்கப்படும். நள்ளிரவைத் தாண்டி மூடப்படும். இங்கு விசேஷம் என்ன ஈன்றால், பூரியுடன் ‘பாசந்தி’தான் கொடுப்பார்கள். உருளைக்கிழங்கு கறி வேண்டுமென்றால், முதலிலேயே சொல்ல வேண்டும். இல்லையென்றால் பாசந்திதான் வரும். இங்கு பூரி – பாசந்தி சாப்பிடுவதற்காக மயிலாப்பூரிலிருந்து பலர் இரவில் காரில் வருவார்கள். 

உணவக வியாபாரம் சிலருக்குப் புண்ணியத்தை மட்டுமல்லாமல், பணத்தையும் வாரிக் கொடுத்தது. பெருமளவில் வளர்ச்சி கண்டவர்கள், வி.ஆர்.ராமநாத ஐயர், சி.எம்.சர்மா, கே.சீதாராம் ராவ் ஆகியோர்.

ஐயருக்கும், சர்மாவுக்கும் சென்னை நகரத்தில் நூறு வீடுகள் சொந்தமாக இருந்ததாக அந்த நாளில் பரபரப்பாகப் பேசுவார்கள். அதே அளவில் வளர்ந்தவர், உடுப்பியைச் சேர்ந்த கே.கிருஷ்ணாராவ். 

இன்று உலகெங்கும் புகழைப் பரப்பிய உட்லண்ட்ஸ் உணவகத்தையும் விடுதியையும் நிறுவியவர் இவர்தான். இட்லி மாவு அரைக்கும் சாதாரண தொழிலாளியாகச் சென்னைக்கு வந்தவர். மவுண்ட் ரோடு பகுதியில் ‘உடுப்பி கிருஷ்ண விலாஸ்’ என்று பல பெயர்களில் வெற்றியைக் கண்டவர். 

சில கூட்டாளிகளுடன் சேர்ந்து, ராயப்பேட்டை பகுதியில் ஒரு ஜமீன்தாருக்குச் சொந்தமான இடத்தை வாங்கி, உட்லண்ட்ஸ் ஓட்டல் நிறுவினார். இது, இன்றைய அளவிலும் இயங்குகிறது. அதற்குப் பிறகுதான் ராதாகிருஷ்ணன் சாலையில் இன்னொரு ஓட்டலைத் தொடங்கினார்.

தேவராஜ முதலித்தெரு பகுதியில் வெங்கட்ராம ஐயர் உணவகம் இருந்தது. அங்கு சாப்பாடு பிரபலம். தரையில் உட்கார்ந்து கொண்டுதான் சாப்பிட வேண்டும். மேஜை, நாற்காலி எல்லாம் கிடையாது. இங்கு என்ன விசேஷம் என்றால், ஒவ்வொரு நேரத்துக்கும் ஒரு காய் கிடைக்கும். 

கூட்டம் அலைமோதுவதால் பரிமாறப்படும் காய்கறிகள் உடனே தீர்ந்து விடும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உருளைக்கிழங்கு பொரியல் என்றால், அரைமணி நேரம் கடந்து சென்றால் வாழைக்காய் பொரியல் பரிமாறப்படும். அடுத்து கருணைக்கிழங்கு பொரியல் கிடைக்கும். பலர் டிக்கெட் வாங்குவதற்கு முன்பு, ‘இப்ப என்னய்யா பொரியல்?’ என்று கேட்டு வாங்குவார்கள். அவ்வளவு பிரபலம் இந்த வெங்கட்ராம ஐயர் ஓட்டல்.

இரண்டாவது உலகப்போர் நடைபெற்ற கால கட்டத்தில், ‘ஜப்பான்காரர்கள் சென்னையில் அணுகுண்டு போட்டு விடுவார்கள்’ என்ற பயத்தினால் நகரமே காலியானது. கல்லூரிகள், பள்ளிகள் எல்லாம் மூடப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றம் கோயம்புத்தூருக்கு மாற்றப்பட்டது. 

இந்த குண்டு பயத்தினால், டவுன் பகுதியில் பல உணவகங்கள் மூடப்பட்டன. அந்தப் பயம் நீங்கிய பிறகு, மீண்டும் தொடங்கப்பட்டன. ஆனால், தொடங்கப்படாமலே மறைந்தது ‘கராச்சி கபே’!      

நன்றி :        ‌ ‌     
அவள் கிச்சன்
😏😏❣️😏😏❣️😏❣️😏❣️

கருத்துகள் இல்லை: