28 அக்., 2021

நூல் நயம் : ஒரு வானம் இரு சிறகு : கவிஞர் மு.மேத்தா


#ReadingMarathon2021
#RM223
#ஆண்டுவிழா
#கவிதைத்தொகுப்புகள்
63/50+

புத்தகம் : 
ஒரு வானம் இரு சிறகு
ஆசிரியர் : 
கவிஞர் மு.மேத்தா
வெளியீடு : வர்மா பதிப்பகம், சென்னை
ஆண்டு : ஜூன் 2000, ஏழாம் பதிப்பு

கவிதைகள், கவிஞனின் உள்ளத்து உணர்வுகளை, உணர்ச்சிகளை படம் பிடித்துக் காட்டும் கண்ணாடி. அந்த உணர்வுகளையும், உணர்ச்சிகளையும், ஒரு வாசகனுக்கு கடத்தி விடும் திறத்தினைக் கவிதைகள் பெற்றிருந்தால், ஒரு கவிஞன் வெற்றி பெறுகிறான். அந்த வாசகனின் மனதில், கவிதைகள் ஏற்படுத்தும் உணர்வலைகள், கவிஞனுடையது. தன் உணர்வலைகளை, வாசகனுக்கு கடத்துமிடத்தில், ஒரு கவிஞனின் எழுத்தாற்றல் மிளிர்கிறது. 

இந்தக் கவிதைத் தொகுப்பில் , கல்கி, குமுதம், குங்குமம், அமுத சுரபி, வண்ண மயில், ஜூனியர் விகடன், இதயம் பேசுகிறது போன்ற பத்திரிகைகளில் வெளியான கவிதைகளுடன், சென்னை தொலைக்காட்சி நிலைய நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட கவிதையும் இடம்பெற்றிருக்கிறது.

கவிஞர் மு.மேத்தா அவர்களின், ஒரு வானம் இரு சிறகு கவிதை தொகுப்பில், நான் இரசித்த சில வரிகள்...

பெண்களின் வாழ்வில், எத்தனை எத்தனை மாற்றங்களும், முன்னேற்றங்களும் வந்தாலும், மாறாதது, இந்த வரதட்சணைக் கொடுமை

ஆராதனை

தெருவிலே அந்த
தேவதை நடந்தால்....
லட்சம் விழிகளில்
அவளுக்கு
லட்சார்ச்சனை !

ஆனால் -
அவள்
வாழ வேண்டுமானால்
தரவேண்டுமாம்
வரதட்சணை !

எந்த ஒரு செயல், நிகழ்வோ, அதனை, நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் தான், அது குறித்த பார்வையோ, கருத்தோ உருவாகிறது என்பதைச் சொல்லும், அழகிய கவிதை வரிகள்.

நினைவுகள்

பட்டொளி வீசும்
பௌர்ணமி நிலவு
சின்ன
ஜன்னலிலேயே
சிறைபட்டுக் கிடந்தது !

கதவைத் திறந்து
வெளியே நடந்தேன்...
வெள்ளி நிலவுக்கும்
விடுதலை கிடைத்தது !

தெய்வப் புலவர், திருவள்ளுவர் குறித்த பெருமைகளை எடுத்தியம்ப, அழகிய கவிதை ஒன்றை வடித்துள்ளார் கவிஞர். அதில், என்னைக் கவர்ந்த வரிகள், 

செவிகளின் சிம்மாசனம்

உள்ளங்கள் தோறும் 
உள்ளவர் - எங்கள்
வள்ளுவர்
ஒன்றே முக்கால் அடியால்
உலகையே அளந்த
வல்லவர் !

தீபங்கள் தீ வைக்கலாமா? என்ற கவிதையில், மதுவினால் தள்ளாடுபவரின் கால்களின் கீழ் மிதிபடுவது, அவர்களது சொந்த வாழ்க்கையே என்று சொல்லும் கவிஞர் இன்னும் சொல்கிறார், 

மதுக்குவளையை
அவர்கள் காலி செய்கிறார்கள்...
அதற்கு பதிலாக
அவர்கள் குடும்பத்தாரின்
கண்ணீரை 
அது நிரப்பிக் கொள்கிறது.

முதுகில் ஒரு மூட்டை கவிதை, பல சமுதாய பிரச்சனைகளை சாடுகிறது.
கல்வி, சுமையானதை கவிஞர் சொல்கிறார் பாருங்கள், 

கல்வி இங்கே
இதயத்தில் சுமக்கும்
இனிமையாய் இல்லாமல்
முதுகில் சுமக்கும்
மூட்டையாகி விட்டது...
குழந்தைகளெல்லாம்
கூனிகளாயினர் !

கல்வியைக்
'கண்' என்கிறார்கள்...
உண்மை தான்-
அதற்கிங்கே
அறுவை சிகிச்சை
அவசியமாய் உள்ளது !

நிதர்சனமான வரிகள்.

சிறந்த வாசிப்பு அனுபவம். நான் ஆரம்பத்தில் சொன்னது போல், கவிஞர் மேத்தா அவர்கள், தன் கவிதைகளின் வாயிலாக, தன் உணர்வுகளை நம்மிடையே கடத்தி இருக்கிறார். வாசகரின் மனதை  தைக்கும் வகையில் இக்கவிதைகள் அமைந்திருக்கின்றன. வாசித்து முடித்த பின்னும் மனதில் நிழலாடும் வரிகளில், கவிஞரும் அவர்தம் வரிகளும் வெற்றி பெறுகிறார்கள்.

நன்றி :

கருத்துகள் இல்லை: