பொத்தக விமர்சனம்: 112/200
பொத்தகம்: காந்தியோடு பேசுவேன்
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பக்கங்கள்: 151
விலை:₹175
பதிப்பகம்: தேசாந்திரி
இந்த பொத்தகத்தில் மொத்தம் 13 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளது. பலரின் எண்ணங்கள் வாழ்கையில் எப்படி உள்ளது? ஒருவரை ஒருவர் எப்படியெல்லாம் புரிந்து கொள்கிறார்கள்? எதன் மீது பற்றுக் கொண்டு பற்றிக் கொள்கிறார்கள்? இன்றைய சமுதாயத்தில் வேறுபாடான பல மனிதர்கள் உள்ளார்கள். அவர்கள் வாழ்க்கையில் இடம்பெற்ற பல நிகழ்வுகளை அழகாக சுவைபட ஆசிரியர்
எஸ்.ராமகிருஷ்ணன் எடுத்துரைத்துள்ளார்.
காந்தியோடு பேசுவேன், கடக்க முடியாத பாலம், அஸ்தபோவில் இருவர், பிடாரனின் மகள், ஷெர்லி அப்படித்தான், பசித்தவன், ஒற்றை முள் போன்ற கதைகளை படிக்கும் போது மிகவும் அருமையாக இருந்தது.
இந்த பொத்தகத்தில் காந்தியோடு பேசுவேன் என்ற கதையின் ஒரு பகுதியில்.. உண்மையில் இந்தியர்கள் விசித்திரமானவர்கள். அவர்கள் எதை நேசிக்க விரும்புகிறார்களோ, அதற்கு எதிராகவே செயல்படுகிறார்கள். இந்தியர்களின் பிரச்சினை காந்தியை அவர்களால் இன்னமும் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே. அவர்களுக்கு இப்படி ஒரு அதிசயம் எப்படி சாத்தியமானது என்று வியப்பாக இருக்கிறது. உண்மையில் காந்தியின் செயல்பாடுகள், எண்ணங்கள் நமது பலவீனங் களை, குறைபாடுகளை, மனசாட்சியைக் கேள்விகேட்கிறதே என்று பலருக்கும் கோபமாக இருக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கு
காந்தி ஒரு விளையாட்டு பொம்மை. அவர்கள் உதைத்து விளையாட
விரும்பும் ஒரு கால்பந்து. அவர்களுக்குப் புதிராக இருப்பது எவ்வளவு
உதைத்தாலும் இந்தப் பந்து திரும்பத் திரும்ப அதன் இயல்பிற்கு வந்துவிடுகிறதே என்பதுதான்.
காந்தியை நெருங்கிச் செல்வதற்குத்தான் ஈடுபாடு தேவை. வெறுப்பதற்கு எவ்வளவோ காரணங்கள் முன்னதாக உருவாக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் இவ்வளவு மோசமான வசைகள், அவதூறுகள், தூஷணைகளைச் சந்தித்த மனிதர் வேறு யாராவது இருக்கக் கூடுமா என்ன? அப்படியிருந்தும் காந்தியின் வசீகரம் குறையவேயில்லை. ஒருவேளை காந்தியை வெறுப்பது என்பது அவரை நேசிக்கச் செல்வதற்கான ஒரு பயிற்சிதானோ என்னவோ.
அடுத்ததாக கடக்க முடியாத பாலம் இந்த சிறுகதையில்:
நகரங்களில் சாதியில்லை என்பது பொய். நகரங்களில் சாதி வேற்றுருவம் எடுத்திருக்கிறது. கிராமம் போல வெளிப்படையாக சாதி கண்ணில் படுவதில்லை. ஆனால் தொழில்பிரிவுகளில், குடியிருப்பில், வணிகத்தில், திருமணத்தில், பழக்கவழக்கங்களில் சாதி நீக்கமற நிறைந்திருந்தது, ஒவ்வொரு சாதிக்கும் ஒரு ரௌடி உருவாகியிருக் கிறான். ஒவ்வொரு சாதியிலும் நாலைந்து அரசியல்வாதிகள் சாதிய நாயகர்களாக மாறியிருக்கிறார்கள்.
பலவரிகளில் பல உணர்வுகளை எளிதாக தன் எழுத்தின் மூலம் நமக்கு கடத்தியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள். மேலும் இந்த பொத்தகத்தில் இடைப்பட்ட நாட்கள், நிகழ்காலத்தின் சுவர்கள், வெயில்போய் வரும் போன்ற கதைகளை படிக்கும் போது சற்று தொய்வாக இருப்பது போல உணர்ந்தேன்.
நன்றி..
- யாழினியன்
நன்றி :
திரு.யாழினியன்,
வாசிப்பை நேசிப்போம்,
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக