17 நவ., 2022

நூல் நயம்


வேடிக்கை பார்ப்பவன்,
நா. முத்துக்குமார்,
கட்டுரை தொகுப்பு,
விகடன் பிரசுரம்,
செப்டம்பர் 2014,
239 பக்கங்கள்,
ரூ 230/-

   1975ல் காஞ்சிபுரத்தில் பிறந்த இந்நூலாசிரியர், இளங்கலை இயற்பியல் மற்றும் முதுகலை தமிழ் இலக்கிய பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் திரைப்பாடல் ஆய்வுக்காக முனைவர் பட்டமும் பெற்றவர். இவரது கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், ஃபிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    தன் வரலாறு கூறுவதை, மாறுபட்ட கோணத்தில் பதிவு செய்திருக்கிறது இந்நூல். தாயை இழந்த ஒரு கிராமத்து சிறுவன், தன் பால்ய வயது நினைவுகளை, தந்தையின் கரம் பற்றி தடம் பதித்த இடங்களை, பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் படித்த பொழுதுகளை, திரைப்படத்துறையில் முன்னுக்கு வர எடுத்துக்கொண்ட பயிற்சிகளை, பத்திரிகை துறையில் பணியாற்றிய அனுபவங்களை, முதல் இரண்டு கவிதைத் தொகுப்பு, நூலாக வெளிவர உதவிய நல்லுள்ளங்களை, தன் மகனுடன் வாழ்க்கையைக் கொண்டாடிய தருணங்களை அவர்தம் எளிய எழுத்து நடையின் வழி நம்மை வேடிக்கை பார்க்க செய்திருக்கிறார்.

    இவரின் அப்பா ஓர் அரசுப்பள்ளி தமிழாசிரியர். சம்பளத்தின் பெரும்பகுதியை மட்டுமல்லாது, கடன் வாங்கியும் புத்தகத்தைக் குவித்திருக்கும் இலக்கிய தாகத்தைத் தன் மகனிடம் பகிர்ந்தபோது, "நீங்கள் கடன் வாங்கி நிறைய வாசியுங்கள். உங்கள் கடனை நான் அடைக்கிறேன்." என கூறும்போது முகம் தெரியாத அக்குழந்தையின் மீது வாஞ்சை ஏற்படுகிறது.

    இக்கட்டுரைகள் தொடராக வந்த போது பூங்காவில் ஒருவர், இதை எழுதி இருக்கலாமே! அதை எழுதி இருக்கலாமே! என்று கருத்து சொன்ன போது அவருக்கு பதிலளிக்கும் விதமாக,
"எழுது உன் கவிதையை நீ
          எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை                 
      என்றால் ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று என்னை கேட்காமலேனும் இரு" என்ற சுந்தரராமசாமி வரிகளைப் பகிர்ந்தது பல கருத்து கந்தசாமிகளுக்கும் பொருந்தும்.

படித்ததில் பிடித்தது:
"இருப்பதற்காக வாழ்கிறோம்
இல்லாமல் போகிறோம்"
நகுலன்.

"பனித்துளியின் நுனியில் பிரதிபலிக்கிறது சூரியன். சூரியனைச் சிறைபிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை". நன்றி!

நன்றி :
பா. கெஜலட்சுமி,
சென்னை - 19.


கருத்துகள் இல்லை: