" குதிரைக்காரனின் புத்தகம் ".
மஞ்சுநாத் .அகநாழிகை வெளியீடு .
முதல் பதிப்பு 2021 விலை ரூபாய் 200 மொத்த பக்கங்கள் 168.
பனிரெண்டு சிறுகதைள் உள்ள 'குதிரைக்காரனின் புத்தகம்' என்ற இந்தத் தொகுப்பு, புதிதாக எழுத முனைகிற ஒருவரது கடந்த, நிகழ் காலங்களின் கதைப் பதிவுகளை உள்ளடக்கியதாக உள்ளது. தொடர்ச்சியான தீவிர வாசிப்பும், பயிற்சியும், அதன் மூலம் அவரது மொழி அடைந்திருக்கும் மேம்படுத்தலையும் உணர்த்துவதாக உள்ளது.
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்*, என்று அப்பர் பெருமான் அருளிச் செய்தார். திரு மஞ்சுநாத் அவர்களின் கதைகள் படிப்போர் உள்ளத்தை பரவசம் ஆக்குகின்றன .அதில் தெள்ளுதமிழ் துள்ளுகிறது.இனிமை தேன் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுகின்றது .பொருள் நயம் களிநடம் புரிகின்றது..
கதைகளில் இனிமை இருக்கின்றது .அழகு இருக்கின்றது .எளிமை இருக்கின்றது. இவைகளுக்கும் மேலே உயிரோட்டம் இருக்கின்றது .
எடுக்கவோ கோர்க்கவோ என்று சிந்திவிட்ட முத்துக்களை பார்த்து துரியோதனன் சொன்னதுபோல இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு எதை எடுத்துச் சொல்வது எதை விடுத்துச் செல்வது என்று புரியாமல் தவிக்கின்றேன்.
He who finds elevated and lofty pleasure in the feeling of poetry is a true poet, though he never composed a line of verse in his entire life -time.
Mad.Dudevant.
எவனொருவன் க(வி)தையை படிக்கும் போது தன்னை மறந்து ஓங்கிய இன்பம் அடைகின்றானோ அவன் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு அடிகூட க(வி)தை எழுதாதவன் ஆயினும் அவனே உண்மை கவிஞன்,கலைஞன் ஆவான் என்கிறார் அறிஞர் Mad.Dudevant.
இது முற்றிலும் மஞ்சுநாத் அவர்களுக்கு பொருந்தும்.
#######
ஆசிரியர் குறிப்பு:
மஞ்சுநாத் ,கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஆலூரில் பிறந்து,தற்போது புதுச்சேரி, பாகூர் பகுதியில் வசித்து வரும் இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாற்று அறிவியலும், சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மருந்தாளுநர் கல்வியும் நிறைவு செய்தவர்.
பன்முகத்தன்மை கொண்ட தீவிர வாசிப்பாளர். மாறுபட்ட எழுத்தாக்கமும் ஆழமான விமர்சகத் திறனும் கொண்டவர். இவரது சிறுகதைகள், புத்தகத் திறனாய்வுகள், விமர்சனங்கள், பயணங்கள், உணவு மற்றும் நலவாழ்வு தொடர்பான கட்டுரைகள் சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் தொடர்ந்து வெளியாகி வாசகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. துடிப்பான ஊர்சுற்றியான இவரது பட்டியலில் இமயமலைச் சிகரங்கள் ஒவ்வொரு ஆண்டும் நீங்காமல் இடம்பெறுகின்றன. இவரது குறுங்கவிதைகள் அகத்தை அசைக்கும் அனுபவத்தைக் கொண்டவை. பாரம்பரிய தமிழர் மருத்துவமான சித்த மருத்துவத்தின் மருந்து செய்யும் கலையில் திறன் பெற்றவர்.
புதுச்சேரியில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநராக பணிபுரிந்து வருகிறார்.
####
* பெருநீர்க் கல் பொரு சிறு நுரை*என்ற தலைப்பில் அணிந்துரையாக
பொன். வாசுதேவன் அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்
"வாழ்க்கையின் சம்பவங்களோடும் அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களோடும் பின்னிப்பிணைந்து எழுதப்படுகிற படைப்புகள் எப்போதும் வாசிக்கச் சலிப்பேற்படுத்துவதில்லை. எழுதுவென்பது சில நேரங்களில் ஆத்மார்த்த திருப்தியைத் தருவதாகவும், சில நேரங்களில் துயர்களைத் தருவதாகுமே இருக்கிறது. முழுமையாக்கி எழுத முடியாத எத்தனையோ விஷயங்களை எழுத்தாளனின் மனம் கருக்கொண்டிருக்கிறது.
சிதைக்கப்பட்ட தனி மனித உணர்ச்சிகளை, தேயும் மனதின் சக்திகளைப் பற்றிய சித்தரிப்புகளை கதைகளில் விவரிக்கும் போது அதில் ஓர் அழகியல் அம்சம் வந்து விடுகிறது."
"மனித வாழ்வின் அவலங்கள், அகச்சிக்கல்கள், மனிதாபிமானம், ஆன்ம சுத்தி, சித்த மூலங்கள், வாழ்க்கை மீதான ஏளனங்கள், அலட்சியங்களைப் பேசுகின்ற இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் வேறு வேறு பரிமாணங்களில் பயணிக்கின்றன. வளர்ந்து வந்த வாழ்க்கை, பல்வேறு தரப்பட்ட மக்களோடு பழகும் வாய்ப்பு, அவர்களது வாழ்க்கை, எண்ணங்கள், ஆசைகள், அபிலாஷைகள் பற்றியெல்லாம் கூர்ந்து கவனிப்பதற்கான ஒரு நிலை நூலாசிரியர் மஞ்சுநாத்திற்கு வாய்த்திருக்கிறது. இவையே அவரது கதைகளின் அடிநாதமாக உள்ளது. இது கதைசொல்லலுக்கு பலம் சேர்க்கிறது."
"எளிமையான முறையில், அதே சமயம் நிகழ்ச்சிகள் ஆழமாக, ஒழுங்காகப் பின்னப்பட்டிருக்கும் நுட்பத்தைப் பேசுகிற கதைகள் ஈர்க்கின்றன.
"தொகுப்பின் கதைகளை வாசித்து முடிக்கையில் அலையடித்து மோதும் கடலின் பொருமிய தன்மைதான் உணர்வில் பளிச்சிடுகிறது."என்கிறார் தனது அணிந்துரையில் பொன். வாசுதேவன்
####
*புனைவுகளில் பொதிந்த பூரணம்*என்ற தலைப்பில் தனது முன்னுரையில் கீழ்கண்டவாறு கூறுகிறார் ஆசிரியர்:,
" வாழ்க்கையானது இந்தக் கணத்தில் கூட உங்கள் சுவாசத்தின் வழியே வெளியேறிக் கரைந்து கொண்டிருக்கிறது. உண்ணும் போதும் உறங்கும் போது புணரும் போதும் அல்லது எந்தவொரு செயலை செய்யும் பொழுதும், உங்கள் சுவாசம் போல் வாழ்க்கை, அதாவது உங்கள் மகிழ்ச்சி கரைந்து கொண்டிருக்கிறது.
இதை உணரும் போது வாழ்க்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிகழ்வும் அல்ல அல்லது எதிர்காலத்தில் செயல்கள் பல செய்து அடைய வேண்டிய நோக்கமும் அல்ல. அது இங்கே இப்பொழுதே நிகழ்ந்து கொண்டிருக்கும் நிதர்சனம். இந்த நிதர்சனம் தரிசனமாகும் போது நமது செயல்கள் மகிழ்ச்சிக்காக அல்ல. மாறாக செயல்களே மகிழ்ச்சியின் நீட்சிதான் என்பது புலனாகும். ஒவ்வொரு மூச்சுக்காற்றும் மகிழ்ச்சியின் உயிர்த்துடிப்பு என்று உணர்ந்தவர்களுக்கு இந்த வாழ்க்கை இங்கேயும் எங்கேயும் இப்பொழுதும் எப்பொழுதும் கொண்டாட்டம்தான்.
இந்த உண்மையை இலக்கியங்கள் பல்வேறு வடிவங்களில் உணர்த்தி வருகின்றன.
வாழ்வின் உயிர்ப்பான அனுபவங்கள் புனைவாகும் பொழுது அங்கு புனைவு என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு உயிர்ப்பு மட்டுமே பிரதிபலிக்கிறது."என்கிறார் தனது முன்னுரையில் ஆசிரியர்.
####
இனி இந்த புத்தகம் குறித்து பார்ப்போம்:
இந்த புத்தகத்தில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் இடம் பெற்றிருக்கிறது.
1. நகுநா
2.மரம் சொன்னது
3. தனிமையின் விபத்து
4. பரம சந்தோஷம்
5. நிலவு சாட்சி
6. இருட்டுக்குள் வெளிச்சம்
7.சுவானா
8. குதிரைக்காரனின் புத்தகம்
9. ருத்ர விந்து
10. ஊருக்கெல்லாம் ஒரே வானம்
11. புகைச்சல்
12. மூக்கைப் பொத்தாதே.
இந்த புத்தகம் எனது கைக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிறது .அவ்வப்போது எடுத்து படிக்கிறேன் .பதிவு செய்யவேண்டும் என்று விரும்பிய நாட்கள் இப்போ முட்களாய் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. நேற்று இரவு ஒரு கனவு .கனவில் ஒரு பக்கம் திறந்த வெள்ளம் ஓடி வருவது போலவும், மறு பக்கத்தில் அதை தடுத்து நிறுத்தக் கூடிய அளவில் ஏதோ அடைத்துக் கொண்டிருப்பது போலவும் ஒரு கனவு .இந்த புத்தகத்திலும் சில பல கனவுகள் அதிகமாக வருவதின் எதிரொலியாக கூட எனக்கு கனவுகள் பரிமளம் கண்டிருக்கலாம்.
1) நகுநா:
நகுநா ஒரு கரகாட்டக்காரியின் கதை .புனைவு கதை என்றாலும்
அ -புனைவு கதைக்குரிய எல்லா பரிமாணங்களையும் உள்ளடக்கி எழுதப்பட்டிருக்கிறது .ஒரு சிறுகதைக்குள் 30 ஆண்டுகால அனுபவத்தை கடுகைத் துளைத்து தந்தது போல் இருக்கிறது.
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது எனது பக்கத்தில் ராஜேந்திரன் என்கிற நெசவு தொழிலாளி மகன் அமர்ந்திருப்பான்.ராஜா ராணி கதைகள் எம்ஜிஆர் கதைகளை குதிரையில் செல்லும்போது குதிரை குளம்படி ஓசை எல்லாம் வாயினால் சொல்லி கதை சொல்லுவான் .
அது போன்றதொரு கதாபாத்திரம் சந்தோஷ்குமார் .அவனும் பாவுகளுக்கு நூலிழைழைகளுக்கு சாயம் ஏற்றுவதற்கான சாயப்பட்டறைகள் நடத்திவந்த ஒருவனின் மகன்.
பள்ளி நண்பர்களோடு இவன் கதை சொல்வான் .தனியே ஒரு கூட்டம் இருக்கும் இவளை சுற்றி கதை கேட்க.இவனது கதைகள் பெரும்பாலும் பெண்களை குறித்த வர்ணிப்பு தான் அதிகமாக இருக்கும் .
பெண்களின் மார்பகங்களை விதவிதமாக வர்ணிப்பான். மார்பகங்களின் கவர்ச்சியை வார்த்தைகளில் கொண்டு வருவான் வாயைப் பிளந்து கொண்டு கேட்பவர்களின் உடல் சிறு ஆனந்த அதிர்வில் படப்படப்பாக இருக்கும். ஒருவேளை பெண்களுக்கு மார்பகங்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மனிதனின்பிறப்புச்சங்கிலி அறுந்து போயிருக்கும் என்பான். அதில் இருக்கும் கவர்ச்சியும் ஈர்ப்பும்தான் மனிதனில் இச்சைக்கு காரணம். இச்சையின்றி ஜனனம் கிடையாது என்பான்.
தஞ்சை பெரிய கோயிலின் நிழல் கீழே படியாமல் இருக்குமாறு கட்டிடம் செய்ததற்கு காரணமே பெண்ணின் மார்பகம் தான் என்று கூறுவன்.
அந்த ஊரில் கரகாட்டம் நடக்கிறது திருவிழாவின்போது.
நகுநா என்கிற அழகான இளமையான கரகாட்டக்காரி . இவன் ஊரை விட்டு அவளோடு செல்வதுதான் கதை .எப்படி சென்றான் ஏன் சென்றான் என்பது தான் கதை.
நகுநா யாருக்குமே அடிபணியாமல் போனதால் சிலர் ரவுடி கூட்டம் அவளின் இளமை பொங்கும் அழகை அறுத்து எறிந்து விடுகிறார்கள் .இவன்தான் அருகில் இருந்து காப்பாற்றி எங்கோ அழைத்துச் சென்று வாழ்கிறான்.
நகுநா எனும் செந்தமிழ் சொல்லுக்கு சிரிக்கும் நெற்கதிர் என்று அர்த்தம்.
கதை படித்த கண்கள் கலங்காமல் இருக்க முடியாது.
2) குதிரைக்காரனின் புத்தகம்:
* திரிகுடா : ஜம்முவிலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலுள்ள வைஷ்ணவ தேவி புனித குகை ஆலயம். கட்ராவிலிருந்து 15 கி.மீ. தூரக் கடினமான மலையேற்றத்தில் அமைந்துள்ளது. குகை ஆலயத்தில் உள்ள மூன்று சுயம்பு தேவிகளைக் குறிக்கும் விதமாக இப்புனித மலைக்கு (1700 மீ. உயரம்) 'திரிகுடா' என்று பெயர்.
கட்ராவிலிருந்து திரிகுடாவிற்கு பயணிகளை குதிரை மூலம் ஏற்றி செல்பவன் அவன் .அவ்வாறு ஏற்றி செல்லும் போது கனிவான குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் தரிசனம் முடித்து இரவு தங்கிய பின் மறுநாள் காலையில் புறப்பட்டு வரும் பொழுது இவன் மீண்டும் அவர்களை குதிரையில் செல்ல அழைக்க , அவளோ இவனை தம்மோடு ஹெலிகாப்டரில் வருமாறு அழைக்க,
அது அவனுக்கு புது அனுபவமாக இருக்கிறது .அன்றைய தினம் சில கனவுகள் காண்கிறான் .தனது பிள்ளைக்கு வாங்கிய புத்தகம் குறித்து கனவு காண்கிறான்.. வினோதமான கனவு.
ஹெலிகாப்டர் மூலம் வீடு வந்து சேர்ந்த பிறகும் தூங்கச் சென்றாலும் கனவு.
கவிதை போல புரியாமல் கனவு எனக்கு இருந்தாலும் இனிக்கிறது.
3) ருத்ர விந்து:
பெரியவர் சுப்பிரமணியம் திடீரென மாரடைப்பால் இறந்து விடுகிறார் சித்த மருத்துவமனையில்.
சிவகுருவுக்கு மூன்று நாள் பழக்கம் உள்ளவர் அவர் சிவகுரு மருந்தாளுனர் சுவாமிநாதன் அங்கு மருத்துவர். சிவகுருவிற்க்கும் பெரியவர் சுப்பிரமணி திற்கும் உள்ள தொடர்பில் இந்த கதை எழுதப்பட்டிருக்கிறது.
நேற்று முன்தினம்தான் சிவகுரு சித்த மருத்துவ மருந்தாளுநராக இந்த இடத்திற்கு மாற்றலாகி வந்திருந்தார். பாரம்பரிய சித்த மருத்துவ நூல்கள் கூறும் 32 புறமருந்து வகைகளும் 32 அகமருந்து வகைகளும் அவருக்கு அத்துபடி.
தாது மருந்துகள் செய்வதில் தேர்ச்சியும் ரசக்கட்டு செய்வதில் ஆழ்ந்த திறனும் படைத்தவர். நவீன விஞ்ஞான முறைகளால் பாதரசத்தை (மெர்க்குரி) திடநிலைக்கு மாற்றமடையச் செய்ய இயலாது; சித்த வைத்திய முறைப்படி முடியும்.
ரசத்தின் அனேக பெயர்களை அவர் அறிவார் : "பாரதம், பூதம், கனல், வேதம், விஜயம், விக்கியம், நாகம், போகம், ஞானம், கற்பம், காரம், சுக்கிலம், சூதம், சூத்திரன், ருத்ர விந்து, பாய்ந்திடு தூமம், பனிமை, பராபரம், கனிமை, ஆதி, அந்தகரந்தன், சுந்தரன், மகாமரம், கந்தம், கேசரி, வேந்தன், வஞ் சகம், ரௌத்ரகாரம், அரவீரியம், மகாதேவபலம், கமலினி, சிவம்"என.
பணியில் சேர்ந்த மறுநாள் சிவசுப்பிரமணியம் மருத்துவமனைக்கு தண்ணீர் குப்பி விநியோகிக்க வர இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது சிவகுரு கழுத்திலிருந்த பசுஞ்சாம்பல் நிற ரசமணி குறித்து பெரியவர் வினவினார்.
பெரியவருக்கு மருமகளும் மகனும் வேலைக்கு செல்ல, பள்ளியில் படிக்கும் பேத்தியை அழைத்து வர வேண்டும். முன்னாள் அஞ்சல் துறை சிப்பந்தி தனது செலவில் நோயாளிகளுக்கு காகித டம்ளர்கள் தந்து கொண்டிருக்கிறார்.
"இது செய்வதற்கு தப்த கல்வமும்* சித்தர்களின் பாடலும்,பாரம்பரிய தொழில்நுட்ப அறிவும் இறையருளும் தேவை. ரசத்தை சரியான வகையில் சுத்தப்படுத்தினால்தான் அதிலுள்ள எட்டு வகையான தோடங்கள் (உண்டீனம், கௌடில்யம், அநவர்த்தம், சங்கரம், சண்டத்தவம், பங்குத்வம், பளுவால் சமளத்வம், சவிஷத்வம் ) நீங்கும்.இதையெல்லாம் அறிந்து கொள்ளவே எனக்கு மூன்று வருடங்கள் பிடித்தது”
" எதுக்காக உருவாக்கினீங்க?” பெரியவர் கேட்க,
"பொன்னுலகை அடக்கும் சித்தியாகும் மலமாகும் தேகத்தையும் மலரச்செய்வோம்" . மேலும்,
"நிறைய பிச்சைக்கார சாமியார்கள் கஞ்சாவை புகைத்துக் காண்டு ஞானம் என்று உளறுவார்கள். குரு குளிகையை சரியான யமத்தில் நாம் பயன்படுத்தும்போது மனம் கட்டவிழ்ந்து பாகாமல் நமது கட்டுப்பாட்டில் இருக்கும். ஞானம் நோக்கிய பாதையை விரைவுபடுத்தும். மூப்பை ஒழித்து மரணத்தையும் வல்லவும் முடியும்"
. "ரசம் எல்லாவற்றுக்கும் சக்ரவர்த்தி. சகல மந்திர தந்திரங்களுக்கும் இது எமன் போன்றது. உலகத்துல இதற்கு ஈடானது எதுமே கிடையாது" என்று என்று சொல்லி அந்த மாலையை பெரியவர்தான் வாங்கி அணிந்து கொண்டு அவன் தோள் மீது சாய்ந்து இறந்துவிட்டார் சாவு கிடங்கில் கிடைத்திருக்கிறார்கள் சிவகுரு அவர்களின் வீட்டுக்கு தொலைபேசி கிரான் 4 மணி நேரம் கடந்துவிட்டது ஓடிப்போய் பெரியவர்களும் சடலத்தை பார்ப்பதற்காக செல்கிறான்.
" பெரியவர் உயிரற்ற உடலாகக் கிடந்த அந்த நீண்ட மர இருக்கையின் மீது சம்மணமிட்டபடி அமர்ந்திருந்தார். தனது கையில் வைத்திருந்த சிவகுருவின் பசுஞ்சாம்பல் நிற ரசமணி மாலை எனும் ருத்ர விந்துவையே பார்த்துக்கொண்டிருந்தார்.
சிவகுரு புன்னகை பூத்தார்.
(எங்கள் குடியாத்தம் வீட்டில் 60 ஆண்டுகளுக்கு முன் ஒரு தபால்காரர் குடியிருந்தார் .அவரும் சித்தமருத்துவத்தில் நாட்டம் கொண்டு பாதரசத்தை கெட்டிப்படுத்தும் புடம் போடும் பணியை செய்து கொண்டிருப்பார். நானும் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். எனது பழைய நினைவுகளை இந்த கதை கிளறிவிட்டு விட்டது
தப்த கல்வம்: இரும்பு அல்லது நன்னி கல்லினால் செய்ப்பட்ட புதிய கல்வத்தை தனிவீட்டில் பள்ளம் தோண்டி அதில் வைத்து அதன் மீது வெள்ளாட்டு ரோமத்தையும் நெல் உமியையும் போட்டு அதில் நெருப்பிட்டு அந்த தீ அதில் படரும்படி செய்வதால் அக்கல்வம் தப்த கல்வமாகிறது. மருந்தின் மூலப்பொருளாக பயன்படுத்துவதற்கு முன்பு பாதரசத்தினை சுத்திகரிப்பதற்கு இந்த தப்த கல்வம் பயன்படுத்தப்படுகிறது)
######
When you turn the last page and feel a little as if you have lost a friend. ஒரு புத்தகத்தை படித்து முடித்த பிறகு ஒரு நல்ல நட்பினை இழந்து விடுவோமோ என்கிற எண்ணம் மரத்தடி அளவில் அந்த புத்தகத்தின் பாதிப்பு இருக்குமேயானால் அது நல்ல புத்தகத்தை அடையாளம் என்று படித்த நினைவு அது இந்த புத்தகத்திற்கு பொருந்தும்.
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம் மஞ்சுநாத் கன்னி முயற்சி கண்டதொரு குதிரைக்காரன் புத்தகம் .
* இரும்புக்குதிரை *எழுதியவர் உலக வாசகர் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டது போல இந்த *குதிரைக்காரன் புத்தகம் * எழுதிய ஆளனும் நாளை இந்த உலகை ஆளும் நாள் வரணும்.
வித்தகம் நிரம்ப அவன் சித்தம் உள்ளதினால் புத்தகம் தத்தை தரும் முத்தம் போல் சித்திக்கிறது ; தித்திக்கிறது ; வற்றாத ஜீவநதி, இவன் காலடிபட்ட இமயமலை கங்கை போல் பரிசுத்தமாய் பாரிஜாதம் உணர்வில் காட்டுகிறது.
எத்திக்கும் தித்திக்கும் இன்ப கவிதைகளை சித்திக்கும் வித்தாக செப்புகின்றான்-
சத்திக்கும்
மஞ்சு நாதா தன் கொஞ்சு தமிழால் வண்ணம் வாங்கி எண்ணம் விதைதுச் செல்கிறான் இமய மலை கங்கை
கருணையினால்
வண்ண முடன் வாழி மகிழ்ந்து.
நன்றி :
திரு கருணா மூர்த்தி
மற்றும்
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக