19 மே, 2023

நூல் நயம்

"சக்கரம் நிற்பதில்லை ."
ஜெயகாந்தன் எழுதியது. மீனாட்சி புத்தக நிலையம் .முதல்பதிப்பு 1976 .
விலை ரூபாய் 45 மொத்த பக்கங்கள் 90.

       ஜெயகாந்தன் குறித்து சொல்லிக் கொண்டே போகலாம் .அறுபதுகளில் "ஜெயகாந்தன் சிறுகதை காலம் "என்று அறியப்பட்டது .அப்படிப்பட்ட சகாப்தம் படைத்தவர் ,சகாப்த மனிதர்; இவரே ஒரு சகாப்தம். எழுத்து இவருக்கு கை வந்த கலை .எழுத்தினால் இவர் பெறாத பரிசுகளும் பட்டங்களும் எதுவுமே இல்லை என்று சொல்லிவிடலாம் .அவ்வளவு பட்டங்களை எல்லா உயரிய விருதுகளையும் பெற்று இருக்கின்றார். பாரதி போல மீசை கொண்டவர் ;பாரதியை முழுதுமாக முழுமையாக உள்வாங்கிப் படித்து அறிந்தவர்.
    
        *ஒரு நாட்டின் மகுடமான பெருமை காலத்தைக் கடந்து செல்லவும், மாற்றங்களை சமுதாயம் ஏற்கவும் செய்கிற சிந்தனையாளர்களில் ஒருவர் நம் ஜெயகாந்தன் *என்று முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் பாராட்டியுள்ளார்.

     இலக்கியத் துறையில் புரட்சி செய்த ஜெயகாந்தனின் ஆளுமைக்கு காரணம் "அவரிடம் காணப்படும் அளவற்ற தத்துவ தரிசனம் , மற்றும் மக்களோடு நெஞ்சு கலந்து உறவாடி ஓட்டும் பண்பு."

           சிறுகதை சிறப்புக்கு இவர் சொல்லும் காரணம் "புதுமைப்பித்தன் அடியொற்றி அவர் இறந்த ஆண்டில் எழுதிடத் தொடங்கியது ஒரு காரணம் என்றும் , புதுமைப்பித்தன் எழுத்துக்களில் பித்தம் கொண்டு தலை கிறங்கி இருந்ததாகவும், அவரது புத்தகங்களுக்கு எல்லாம் புரூப் திருத்தி தன்னை மேம்படுத்திக் கொண்டதோடு ,எல்லாவற்றுக்கும் மேலாக அவரது பதாகையை ஏந்தி பிடித்து தமிழ் சிறுகதை இலக்கியத்துக்கு அவரது வழியில் பெருமை சேர்த்தேன்  "என்று ஜெயகாந்தன் கூறுகிறார்.

   வாழ்க்கையை அவர் கூர்ந்து நோக்கி தான் கண்டவற்றை அனுபவங்களுடன் குழைத்து சின்னஞ்சிறு கலை வடிவங்களாக இழைக்கிறார்  .

           சில கதைகள் திரைப்படமாக கூட ஆகியிருக்கின்றன .இவர் எழுத்துக்களைக் கொண்டு சகலகலா வல்லவராக திகழ்ந்தார். இவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் .இவரை யாருடனும் ஒப்பிட இயலாது ,ஒப்பிடவும் கூடாது .
       இவரின் பல கதைகள் என்னைப் பல இரவுகள் உறங்கச் செய்யவிடாமல் செய்திருக்கின்றன .
       புதிய எழுத்தாளர்கள் இவரின் அத்தனை எழுத்துக்களையும் படித்து மனனம் செய்து கொள்வது சாலச் சிறந்தது. மூச்சு விடாமல் பேசிக்கொண்டே இருப்பார்; அதேபோல் முற்றுப்புள்ளி வைக்காமல், கமா, காற் புள்ளி ,என்று வைத்து சில பக்கங்களுக்கு எழுதும் வன்மை மிக்கவர்; திறமை மிக்கவர் .சொன்னால் புரியாது, படித்து சுவைக்கவேண்டும் இவரின் வரிகளை.
      முத்தாய்ப்பாக,
  * பருவம் நிரம்பாமே பாரெல்லம் உய்ய.....மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும் உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளை...
வன்னமெழில் கொள் 
திண்ணம் மிகுந்தவா காணீரே  *
என்று கண்ணனின் பிரமாண்டத்தைக் கண்டு மகிழ்ந்த யசோதை போல "மானுடம் முழுவதும் பேதமின்றி நேசிக்கின்ற ஒரு மகா தரிசனத்தை ஜெயகாந்தன் கதைகளில் இருபத்தோராம் நூற்றாண்டு வாசகர்களும் காண்பார்கள் "என்று 
நவ பாரதி குறிப்பிடுகின்றார்.

####

     இனி ,
*சக்கரம் நிற்பதில்லை *என்கிற இந்த குறுநாவலை பார்க்கலாம் .1974இல் நடந்த ஒரு ரயில்வே தொழிற்சங்க வேலை நிறுத்தம் குறித்து எழுதியிருக்கிறார்.

          ஆரம்பத்தில் மூன்று கதாபாத்திரங்களைக் கொண்டு கதையை துவக்குகிறார் .அகராதி எழுதுபவர் அதற்கு உதவி செய்பவர் , எலி வளையில் தனிக்குடித்தனம் செய்கின்றவர் ,ஒரு எழுத்தாளர் மூவரைக் கொண்டு இந்த கதை ஆரம்பமாகிறது.
       சக்கரம் குறித்து வியாக்கியானம் செய்கிறார் இரண்டு பக்கங்களில்.அச்சுஇல்லாமல் சுற்றுகின்ற சக்கரத்தை கையில் ஏந்தியவன் அச்சுதன் என்றும் குறிப்பிடுகிறார். 

  மேலும் சக்கரம் இது ஒரு சம்ஸ்கிருத சொல் .திரிந்து தமிழில் சக்கிரம் என்றும் உண்டு. எனிதிங் சர்க்குலர்(anything circular) வட்ட வடிவமானவை .
இரண்டாவதாக a wheel சகடம் .இதுவும் சம்ஸ்கிருத சொல் . உருளை .மூன்றாவதாக a circular missile weapon வட்டவடிவமான ஏவுகணை...

        ஒரு பொருள் குறித்து எழுதுவதற்கு முன் ஆழ்ந்து அறிந்து திறம்பட எழுதுகின்ற எழுத்தாணி ஆற்றல் மிக்கவர் என்பதற்கு இந்த ஒரு சக்கரம் குறித்த பதிவை ,இரண்டு பக்கங்களுக்கு மேலாக செல்கிற இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் அறிந்துகொள்ளலாம் புரிந்து கொள்ளலாம்.

   சமகால நிகழ்வுகளை கவனித்து சமுதாயத்திற்கு வேண்டிய கதையாக சக்கரம் நிற்பதில்லை என்ற நெடுங்கதை 1974ஆம் ஆண்டு எழுதினார். ரயில்வே துறையில் நடந்த தொழில் வேலை நிறுத்தம் குறித்து எழுதி இருக்கிறார் .ஆனால் அந்த வேலை நிறுத்தம் தோற்க்கட்டும் என ஒரு கதாபாத்திரம் சபிக்கிறது .சக்கரத்தை விடுபவன்தான் தொழிலாளி நிறுத்தியவன் தொழிலாளி அல்ல என்றெல்லாம் கதையில் நீண்ட சம்பாஷணைகள் இருக்கும் .
      சுவரில் வரைந்த அரிவாள் சுத்தியல் மீது சாணி வீசி அப்பும் காட்சியை கிண்டலாக விவரிக்கிறார் .
        மிகவும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான இந்த கதையை தினமணி கதிரில் எழுதினார் .பிறகு புத்தகமாக வெளிவந்தது .
        ஜெயகாந்தனை தெய்வமாக கொண்டாடுபவர்கள் இன்றும் உண்டு . கடுமையாக விமர்சிப்பவர்கள் உண்டு.
ஒரு நெடுங்கதை எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது என்பதை கதையைப் படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

          கதைகளில் வரும் எல்லா பாத்திரங்களின் மீதும் இவரே ஏறி அமர்ந்துகொண்டு சொற்பொழிவாற்றினார் கதாபாத்திரங்களை சுதந்திரமாக வாழ விடமாட்டார் என்பதை
இந்த கதையிலும் வருகின்ற ஒவ்வொரு பாத்திரத்திலும் அவரே கூடு விட்டு கூடு பாய்ந்து தனது எண்ணங்களை எல்லாம் கொட்டி விட்டுச் செல்கிறார்.

####
              ஜெயகாந்தனும் தன்னை அறிந்தவராகவே இருந்திருக்கிறார் .எல்லா விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டு தமிழ் சமூகத்தின் இரண்டு தலைமுறைகள் இரண்டு தலைமுறைகளை ஆட்டிப்படைத்த ராட்சசன் ஜெயகாந்தன் மட்டுமே என்பதை யாரும் மறுக்க முடியாது.

         அவர் சினிமாவுக்கு எழுதிய ஒரு பாடல் இன்றும் என்னை ஆட்டிப்படைக்கிறது.

உங்கள் கதையைச் சொல்லுகிறேன்
 
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்குக் காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
 
நல்லதைச் சொல்லுகிறேன்
இங்கு நடந்ததைச் சொல்லுகிறேன்
 
இதற்கெனைக் கொல்வதும் 
கொன்று கோயிலில் வைப்பதும் 
கொள்கை உமக்கென்றால்
உம்முடன் கூடி இருப்பதுண்டோ?
 
வாழ்ந்திடச் சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததைச் சொல்லுகிறேன்
இங்கு தாழ்வதும் தாழ்ந்து
வீழ்வதும் உமக்கு தலையெழுத்தென்றால்
உம்மை தாங்கிட நாதியுண்டோ?
 
கும்பிடச் சொல்லுகிறேன்
உங்களைக் கும்பிட்டுச் சொல்லுகிறேன்
என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ?
ஒரு தம்பிடி நஷ்டம் உண்டோ?

நன்றி :


கருத்துகள் இல்லை: