24 ஜூலை, 2023

ஆன்மீக மஞ்சரி

ஆன்மிக அமுதம்: 
...........................
*பொது அறமும் சிறப்பு அறமும்!*
*திருப்பூர் கிருஷ்ணன்*
...........................
   *பொது அறம் என்ற கோட்பாட்டிற்குள் அடங்கும் அறங்கள் பல இருக்கின்றன. `பொய் சொல்லக் கூடாது, திருடக் கூடாது, தாய் சொல்லைத் தட்டக் கூடாது, தந்தையை மதிக்க வேண்டும்` போன்றவை பொது அறங்கள். 

  ஆனால் இந்தப் பொது அறங்களை மீறும் சந்தர்ப்பங்களும் வாழ்க்கையில் நேரலாம். அப்படி மீறும்போது அதற்கும் ஒரு நியாயம் இருக்கலாம். 

  அப்போது பொது அறத்திற்கு நேர் முரணாக அனுசரிக்கும் அறம் `சிறப்பு அறம்` எனப்படுகிறது. சிற்சில சந்தர்ப்பங்களில் பொது அறத்தை மீறி முற்றிலும் மாறுபட்டு நடப்பதை தர்மம் அனுமதிக்கிறது. 

 `பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த 
 நன்மை பயக்கும் எனின்` 

 என்கிறார் வள்ளுவர். 

  குற்றமில்லாத நன்மையைச் செய்யக் கூடியதாக இருக்குமானால் அத்தகைய பொய்யும் கூட வாய்மை என்று கருதத் தக்கதுதான் என்பது இந்தக் குறளின் பொருள். 

  அதாவது வள்ளுவர் பொய் சொல்லலாம் என்கிறார்! ஆனால் அந்தப் பொய் கெடுதல் செய்யாத குற்றமற்ற நன்மையைத் தருவதாக இருக்க வேண்டும் என்கிறார்.

  *ராமன் தேரிலேறிக் காட்டுக்குச் செல்கிறான். தேரை ஓட்டுகிறார் சுமந்திரர். தேரில் லட்சுமணனும் சீதாதேவியும் ராமனுடன் அமர்ந்திருக்கிறார்கள். 

  அப்போது அரண்மனையின் உப்பரிகை மேலிருந்து உரத்துக் குரல் கொடுக்கிறார் தந்தைப் பாசத்தால் தள்ளாடும் தசரதர். 

  `ராமா! நான் கைகேயிக்குக் கொடுத்த வாக்கை அனுசரித்தால் உன்னைக் காட்டுக்கு அனுப்பியது குறித்து மக்கள் என்னைக் கடிந்து பேசுவார்கள். கைகேயிக்குக் கொடுத்த வாக்கை மீறினால் வாக்குறுதியை மீறியவன் என்று என்னை அப்போதும் பலர் பழிப்பார்கள். 

  எப்படியும் எனக்குப் பழி வரப் போகிறது. எனவே வாக்குறுதியை மீறியவன் என்ற பழியை ஏற்க நான் சித்தமாகி விட்டேன், அப்போது நீ என்னுடன் இருப்பாய். 

   அதுபோதும் எனக்கு. நீ கானகம் செல்ல வேண்டாம். திரும்பி வந்துவிடு! சுமந்திரரே! தேரைத் திருப்பி அயோத்தி நோக்கிச் செலுத்துங்கள்!`

  தசரதனின் இந்த தீனக்குரல் மிகத் தெளிவாக ராமன் சீதை லட்சுமணன் சுமந்திரர் அனைவர் செவிகளிலும் விழுகிறது. 

 `அயோத்தி மன்னர் வாக்குறுதியை மீறினார் என்ற பழி வரக்கூடாது சுமந்திரரே! நீங்கள் தந்தை சொல்வதைப் பொருட்படுத்த வேண்டாம். கானகத்தை நோக்கியே  தேரைச் செலுத்துங்கள்!` என்கிறான் ராமன்.

 சுமந்திரர் திகைக்கிறார்:

  `தசரதர் மன்னரல்லவா? அவர் கட்டளைக்கு நான் எப்படிப் பணியாமல் இருப்பது? நான் திரும்பிச் சென்றதும் ஏன் என் கட்டளையை மீறி ராமனைக் காட்டுக்கு அழைத்துச் சென்றாய் என மன்னர் கேட்டால் நான் என்ன சொல்வது?`

 சுமந்திரரின் கேள்விக்குச் சற்றும் தயங்காமல் பதில் வருகிறது ராமனிடமிருந்து:

 `எதிர்க்காற்றில் மன்னர் குரல் காதில் விழவில்லை என்று சொல்லிவிடுங்கள்.`

 சீதை திகைக்கிறாள். 

`பிரபோ! சுமந்திரரைப் பொய் சொல்லச் சொல்கிறீர்களா?` என வினவுகிறாள். 

 `சீதா! என் தந்தை பிள்ளைப் பாசத்தால் தடுமாறுகிறார். ரகுவம்சத்து மன்னர் அவர். வாக்குறுதியைக் காப்பாற்றாவிட்டால் பெரும் பழிக்கு ஆட்படுவார். அவருக்கு மட்டுமல்ல. ரகு வம்சத்திற்கே அது இழுக்கு. 

  அவரை அந்தப் பழிநேராமல் காப்பாற்றுவதுதான் இப்போது முக்கியம். யாருக்கும் கெடுதல் தராமல் நன்மை மட்டுமே செய்யக் கூடிய பொய்யைச் சொல்லலாம் என்று தர்ம சாஸ்திரம் அனுமதிக்கிறது!` என விளக்கம் தருகிறான் ராமன். 

  ஆக விசேஷ சந்தர்ப்பங்களில் பொய் அனுமதிக்கப் பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொண்ட சீதை தன் சேலையில் ஒரு முடிச்சுப் போட்டுக் கொள்கிறாள். 

  சுந்தர காண்டத்தில் அனுமன் சீதையை வந்து சந்திக்கிறான். அப்போது சீதையைச் சுற்றி அமர்ந்திருந்த அத்தனை அரக்கியருக்கும் உறக்கம் வருமாறு ஒரு மந்திரம் போடுகிறான். எல்லோரும் ஆழ்ந்து உறங்குகிறார்கள். 

  சீதையைச் சந்தித்து கணையாழியைக் கொடுத்து சூடாமணியை வாங்கிக் கொண்டபின் சீதையிடம் விடைபெற்று சோலைக்குள் சென்று அங்குள்ள மரங்களையும் செடி கொடிகளையும் அழிக்க முற்படுகிறான். 

 அதற்குள் அரக்கிகள் துயில் நீங்கிக் கண்விழிக்கிறார்கள். அனுமனின் அட்டகாசத்தைப் பார்த்து திகைக்கிறார்கள். `அந்தப் பொல்லாத குரங்கு இங்கே வந்து உன்னைச் சந்தித்ததா?` எனக் கேட்டு சீதையை அதட்டுகிறார்கள். 

 `எந்தக் குரங்கைப் பற்றிக் கேட்கிறீர்கள்? எனக்கு யாரையும் தெரியாது! அரக்கர்கள் தான் எப்படி வேண்டுமானாலும் தங்கள் உருவத்தை மாற்றிக் கொள்கிற மாயக் கலைகளில் வல்லவர்கள்.` என்கிறாள் சீதை. 

  இப்படிக் குரங்கைப் பற்றித் தனக்கு எதுவுமே தெரியாது என்று பொய் சொன்ன சீதை, தன் சேலையில் முன்னர் போட்டிருந்த முடிச்சை அவிழ்த்தாள் என்கிறது ஓர் அபூர்வ ராமாயணம். 

  ராமாயணம் பற்பல நீதிகளைச் சொல்வது போலவே பொய்யும் சொல்லலாம் என்ற நீதியையும் சொல்கிறது. ஆனால் அந்தப் பொய் யாருக்கும் கெடுதல் செய்யாத பொய்யாக இருக்க வேண்டும். 

  `பொய்மையும் வாய்மையிடத்த` என்ற திருக்குறளுக்கு விளக்கம்போல் அமைந்துள்ளது அபூர்வ ராமாயணத்தின் இந்தப் பகுதி. 

  *`தந்தை சொல் மிக்க மந்திரமில்லை` என்பது ஓர் அறநெறி. ராமன் அதன்படி நடந்து காட்டினான். தந்தை சொன்னதற்காகக் கானகத்திற்குச் சென்றான்.

 ஆனால் இரணியன் மகன் பிரகலாதன் விஷயத்தில் நாம் இந்த அறத்தைப் பிரகலாதன் பின்பற்றவில்லையே எனக் குற்றம் சாட்ட முடியுமா? இறைபக்தியில் தோய்ந்த மகன், தன்னுடைய நாத்திகத் தந்தை சொன்ன சொற்களை எப்படிப் பின்பற்ற முடியும்? 

  அவன் திருமால்மேல் தான் கொண்ட பக்தியை ஒருபோதும் கைவிட மாட்டேன் என உறுதியோடு நிற்கிறான். `தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்` எனத் திருமாலின் பெருமையை வலியுறுத்துகிறான். 

  நரசிங்கம் தூணிலிருந்து வெளிப்பட்டு இரணியனை அழிக்கிறது. ஆக இரணியன் அழிந்துபோக அவன் மகன் பிரகலாதனே காரணமாகிறான். 

  `தந்தை சொல் மிக்க மந்திரமில்லை` என்ற அறநெறியை ராமனைப் போல் ஏன் பிரகலாதன் பின்பற்றவில்லை என்று நாம் கேள்வி எழுப்ப இயலுமா? ராமன் பின்பற்றியது பொது அறம். பிரகலாதன் பின்பற்றியது சிறப்பு அறம். இரண்டும் அறவழிப் பட்டவையே.  

  *தாய் சொல்லைத் தட்டாத அறநெறியைப் பின்பற்றியவன் ராமன். பெற்ற தாய் கோசலை மட்டுமல்ல, வளர்த்த தாய்மார்களான கைகேயி, சுமித்திரை இருவரும் கூட ராமனுக்குத் தெய்வங்கள் தான். 

  சீதை தான் வளர்க்கும் கிளிக்குப் பெயர் சூட்டுமாறு ராமனிடம் வேண்டினாள். 

  ராமன்  `உலகிலேயே நான் அதிகம் நேசிக்கும் பெண்ணின் பெயரைக் கிளிக்கு வைக்கிறேன்` எனச் சொல்லி சீதை வளர்க்கும் கிளிக்குத் தன் வளர்ப்புத் தாய் கைகேயியின் பெயரைச் சூட்டினான் என்கிறது கம்ப ராமாயணம். 

  வளர்ப்புத் தாய் மேலேயே இத்தகைய பாசத்தை வைத்திருந்த ராமனின் தம்பியான பரதன், தன் பெற்ற தாயான கைகேயி மேல் பாசம் வைத்திருந்தானா? தாய் சொல்லைத் தட்டாமல் நடந்தானா? 

  அப்படியானால் கைகேயி சொற்படி பரதன் முடி சூட்டிக் கொண்டு அயோத்தி மன்னனாக ஆகியிருக்க வேண்டாமா? 

  பரதன் தன் தாய் சொல்லை மீறுகிறான். அவளைப் பழித்துப் பேசுகிறான். கானகம் சென்று அண்ணனை மீண்டும் அயோத்திக்கு அழைத்து வரத் துடிக்கிறான். 

 `அது என்னமாய் பரதன் தன் தாய் சொல்லை மீறலாயிற்று? தாய் சொல்லை மீறுவது அறமில்லையே?` என்று நாம் சொல்ல முடியுமா? 

  அது ஒரு விசேஷ சந்தர்ப்பம். அந்த சந்தர்ப்பத்தில் தாய் சொல்லை மீறி நடப்பதுதான் பெருமை தரும் செயல். அப்போது தாய் சொல்லை மீறுவதே தர்மம். 

   சூழ்நிலை காரணமாக பொது அறத்தை மீறிச் சிறப்பு அறத்தைப் பின்பற்றுகிறது பரதனின் கள்ளம் கபடமில்லாத அன்பு மனம். 

  அண்ணனையே தெய்வமாகக் கருதிய அவன், தாய் சொல்லை மீறி நடந்ததை நியாயப் படுத்துகிறது ராமாயணம். 

  *சகோதரர்கள் எப்படி ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுப்பதும் ராமாயணம்தான். உடன்பிறந்த தம்பியரான ராமன் லட்சுமணன் பரதன் சத்துருக்கனன் நால்வரும் இடைவெளியற்ற அன்போடு வாழ்வதைப் பார்க்கிறோம். இது பொது அறம். 

 ஆனால் ராவணனின் தம்பியரான விபீஷணனும் கும்பகர்ணனும் எப்படி இயங்கினார்கள்? 

  அண்ணனே ஆயினும் அவன் அறநெறி தவறிப் பிறன் மனைவியை விரும்பிய நேரத்தில் அண்ணன் ராவணனைத் துறந்து அவன் விரோதியான பாதிக்கப்பட்ட ராமனைச் சரணடைகிறான் விபீஷணன். 

   அண்ணனைத் தம்பி துறக்கலாமா என்று கேட்டால் துறக்கலாம் என்கிறது ராமாயணம். 

  அண்ணன்மேல் பாசத்தோடு திகழ்வது பொது அறமாக இருக்கலாம். ஆனால் உடன்பிறந்த ரத்த பாசத்தை விட, பாவச்செயல் நடக்கும் அணியைச் சேராது தர்மத்தின்பால் நிற்பது விசேஷ அறம். அதையே பின்பற்றுகிறது விபீஷணனின் தர்மநெறிப்பட்ட மனம். 
 
  இன்னொரு தம்பி கும்பகர்ணனின் மனம் ஊசலாடுகிறது. அவன் சிறப்பு அறத்தைப் பின்பற்றி தர்ம நெறிப்பட்டு நிற்கத் துணியவில்லை. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் வகையில் தன் அண்ணன் அணியிலேயே நின்று அவனுக்காகப் போரிட்டு உயிரையும் துறக்கிறான். 

  பொது அறத்தின்பால் நின்று அண்ணனுக்காக உயிர்விட்ட கும்பகர்ணன் செய்தது சரியா, இல்லை சிறப்பு அறத்தின்பால் நின்று ராமனுக்கு வெற்றி தேடித் தந்த விபீஷணன் செய்தது சரியா? 

  இதற்கு ஒரே விடைதான். இரண்டுமே சரி என்கின்றன தர்ம சாஸ்திரங்கள்.

  பொது அறம் என்பது சட்டம். சிறப்பு அறம் என்பது சலுகை. ஆனால் இரண்டுமே அறம்தான் என்கிறது, எல்லாக் கோணங்களிலும் வாழ்வை ஆராய்ந்து வகுக்கப்பட்டுள்ள  நமது அற்புதமான தர்ம நெறி. 

(நன்றி: மாலைமலர்.)
...........................
நன்றி :
திரு திருப்பூர் கிருஷ்ணன், 
மாலை மலர்
மற்றும் 
முகநூல் 

கருத்துகள் இல்லை: