" கல் மரம் ".
திலகவதி எழுதியது .ருத்ரா பதிப்பகம் . முதல் பதிப்பு 2001. மொத்த பக்கங்கள் 192 விலை ரூபாய் 80.00
திலகவதி அவர்களின் சில கதைகளைப் படித்திருக்கிறேன் .இந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடனே பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பூமிக்கடியில் கிடந்த மரங்கள்மக்கிப் படிந்த நிழல் போல் தெரிவதுதான் கல்மரம் என்று இங்கே அது குறித்த புத்தகம் தான் இது என்று நினைத்தேன் .
ஆனால் கட்டடங்களை கட்டுகின்ற தொழிலாளர்கள் குறித்த கதை என்று படிக்க ஆரம்பித்தபோது தான் தெரிந்து கொண்டேன்.
வேலூர் மாவட்டத்தில் திலகவதி அவர்கள் போலீஸ் துறையில் அதிகாரியாக பணிபுரிந்த காலத்தில் , நான் வேளாண்மை அதிகாரியாக பணிபுரிந்த காலத்தில்,ஒரு முறை பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது தூரத்தில் இருந்து தான்.
அவரின் பார்வையில் தாய்மைக் கனிந்திருந்தது .
அவரின் பார்வையில் போலீஸ் துறைக்கே உள்ள சந்தேகப் பார்வை இருந்தது .
அவர் பார்வையில் இலக்கியம் செழித்த ஒரு எழுத்துப் பார்வை இருந்தது .
அவர் பார்வையில் சக பணியாளர்கள் மீது கனிவு கொண்ட தனிப்பார்வை இருந்தது.
இவை எல்லாவற்றையும் விட ஏழை மக்களின் மீது அன்பும் ஆதரவும் மாரி போல கொட்டுகின்றன ஒரு பனிப்பார்வை இருந்ததை நான் கவனித்திருக்கிறேன்.
குடியாத்தம் நகரில் நான் இருந்தபோது எனது நண்பர் கட்டிய கட்டடங்களை இரண்டு அடுக்குமாடிக் கட்டடங்களை கட்டிய போது உடன் இருந்து பார்த்திருக்கிறேன் .ஆனால் கட்டிட பணியாளர்கள் எல்லோரும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள்.
இங்கு சென்னை வந்த பிறகு எனது வீடு ஒன்று ஒரு மாடி கொண்ட கட்டிடமாக கட்ட எத்தனிக்கும்போது காண்ட்ராக்டர் தாம்பரத்தில் இருந்து ஒரு வாட்ச் மேனை கொண்டு வந்து பக்கத்து காலி மனையில் குடிசை போட்டு குடியமர்த்தி கட்டிடம் எழுப்பினார் .அப்போது அவர்கள் வேலை செய்வதையும் பணியாற்றுவதையும் கண்டிருக்கிறேன் .ஆனால் எந்த பிரச்சினையும் நான் காணவில்லை
பிறகு சென்னையில் எனது ஒரு கான்ட்ராக்டர் நண்பர் கட்டுகின்ற அடுக்குமாடி குடியிருப்பை காணுகின்ற வாய்ப்பு கிட்டியது. அங்கு எல்லோருமே வடநாட்டு தொழிலாளர்கள் தான் .அவர்கள் நிலை சற்று பரிதாபத்துக்குரியதாகவே இருந்தது .ஆனால் இதையெல்லாம் சற்று மேம்போக்காக வே பார்த்திருக்கிறேனே ஒழிய அவர்களது வேலை பிரச்சனை ஏழ்மை நிலை இவைகளைக் கண் கொண்டு நான் பார்க்கவில்லை .ஆனால் ஆசிரியர் திலகவதி அவர்கள் கருணைக் கண்கொண்டு , நல்நோக்கக் கண்கொண்டு ஆராய்ச்சி மனப்பான்மைகண்கொண்டு
அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கு சென்று, இருந்து கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களையும் நேரில் கண்டு பல தகவல்களை திரட்டி இந்த நாவலைப் படைத்திருக்கிறார். பாராட்டுக்குரிய ஒன்று.
கெட்டிக்காரனாக இருப்பவன் ,கடமையில் கண்ணாக இருப்பவன் ,உழைப்புக்கு அஞ்சாதவன் சித்தாள் பணியில் சேர்ந்து சில வருடங்களிலேயே ,சித்தாளாக இருந்தவன் மேஸ்திரி ஆகி காண்ட்ராக்ட் எடுக்கின்ற அளவில் வாழ்க்கையில் உயர்ந்து உன்னதம் பெறுகிறான்.
பிள்ளைப் பருவத்திலேயே கட்டிட வேலைக்கு சித்தாளாக பணிக்கு வந்து சித்தாளாகவே வாழ்ந்து சித்தாளாகவே மடிந்து போகும் அவலம் சிலருக்கு நேர்கிறது.
#####
ஆசிரியர் குறிப்பு.
திலகவதி அவர்கள் தமிழ்நாடு காவல் துறையில் மிக உயர்ந்த பதவி வகித்தவர் .இலக்கிய ஆர்வம் கொண்டவர் சமூக நலப்பணி சமுதாய நலப்பணிகளில் ஆர்வம் மிக்கவர். நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
####
என் உரை என்று ஆசிரியர் கீழ்கண்டவாறு கூறுகிறார்.
பெரும் கட்டிடங்களையும் உருவாக்கிவிட்டு நகரங்களில் பிளாட்பாரத்தில் குடிசை போட்டு அங்கேயே உண்டு உறங்கி பல குடும்பங்கள் வாழ்வதை பலமுறை பார்க்க
நேர்ந்திருக்கிறது .
கட்டிடத் தொழிலாளர்களின் அந்த நடவடிக்கையை கூர்ந்து கவனிக்கலானேன் .அவ்வப்போது கட்டட வேலை நடக்கும் இடங்களுக்குச் சென்று அவர்களோடு பேசினேன் .அவர்களது வாழ்வை கேட்டு மனம் தளர்ந்தேன்.
ராயபுரம் வண்ணாரப்பேட்டை குடிசைப் பகுதிகளில் வாழும் பல கட்டிட தொழிலாளர் குடும்பங்களுக்கு நேரில் சென்று அவர்களோடு டீ குடித்து பேசி பழகினேன்,பலமுறை சென்று .
அவர்களது வாழ்க்கையில் சோகத்திற்கான காரணங்களில் அறியாமையும் குடியும் பிரதான பங்கு வகிப்பதை அறிந்துகொண்டேன்
அவர்கள் வாழ்வில் ஒளி மிக்கதாக ஒளிர என்னால் இயன்ற சிறு அகல் விளக்கு ஏற்றும் பணியே இந்த கல்மரம் நாவல் ," என்கிறார் திலகவதி அவர்கள்.
####
இனி இந்தப் புத்தகம் குறித்து பார்ப்போம்.
கல் மரம் என்று இந்த நாவல் கட்டிடத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையை ஆராய்ந்து எழுதி இருக்கும் புதினம்.
புதிய புதிய கட்டிடங்களை உருவாக்கிவிட்டு மழையில் நனைந்து வெயிலில் காயும் தொழிலாளர்களின் வேதனைக் உணர்வை வெளிப்படுத்துகிறது.
பெண்களை மையமாகக் கொண்டு கதை சொல்லப்பட்டிருக்கிறது .
ஆதிலட்சுமி காவேரி கன்னியம்மா ரஞ்சனி சுசிலா ராகினி என்ற பெண் பாத்திரங்களின் மூலம் கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்வின் இன்னல்களையும் வாழும் நிலையையும் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.
யதார்த்தமாக கணவன் கட்டிட விபத்தில் இறந்ததால் பையனை அதே தொழிலுக்கு போக விடாமல் தடுக்க நினைக்கும் தாயுள்ளம் , சைக்கிள் வாங்க முடியாத நிலை , அன்றாட உணவுக்கும் வேலைக்கும் தேடல் என தொடங்கும் உழைப்பாளர் குடும்பத்தின் கதைகள் , சென்னை மாநகரில் அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதில் உள்ள நிலைமைகள் அனைத்தையும் படம் பிடித்து காட்டுகிறது இந்த நாவல் .
வேலையின்றி அலையும் பையனுக்கு பெண் பார்த்து திருமணம் முடிப்பதால் பையன் பொறுப்பு மிக்கவனாகி விடுவான் என நினைக்கும் தாயார் ஆதி லட்சுமி ,தனது பெண்ணிடம் ஆண்பிள்ளை குடத்தில் தண்ணீர் பிடித்து கொண்டு வரலாமா என்று கூறுகின்ற பழமை ஒருபுறம் ;பொம்பள கொத்தனாராக போகிறேன் என்று துணிவாக பேசும் மகள் காவேரி மறுபுறம் என நாவல் மலர்கிறது.
இட்டிலி கடை வைத்திருக்கும் சின்னத்தாயி அன்புத் தாயாக இருப்பதோடு அல்லாமல் அறிவுபூர்வமாக அங்கே குடிசைப்பகுதி இளைஞர்களுக்கு நல்ல ஞானத் தாயாக விளங்குகிறார்.
குடிசைப் பகுதியில் ஆய்வு செய்வதற்காக வந்து தங்கும் சுசிலா தனது சேவை மூலம் மாற்றம் செய்ய முடியும் என்பதை நம்பிக்கையோடு ,உணர்வையும் உரிமை உணர்வு ஊட்டுவதையும் சுட்டிக்காட்டுகிறார் .
சுசிலாவுடன் சேர்ந்து இளம்பெண் காவிரியும் விவரத்தை கற்றுக் கொள்கிறாள்; சங்கம் திங்கள் போல முழுமையாக முழுநிலவாக மாறப் பாடுபடுகிறாள்.
ஆதிலட்சுமியின் மகன் காசி ,காவேரியின் அண்ணன் காசி வேலையில் இருப்பதாக பொய் சொல்லி திருமணம் புரிவது ராகினியின் கனவுகள் கரைந்து ,கணவனுக்கு வாட்ச்மேன் வேலை பெற்று பிளாட் கட்டும் இடத்தில் தங்குமிடம் ஏற்படுத்த தானும் கணக்குப் பிள்ளையாக வேலை செய்கிறாள்.
முதலாளிக்கு விசுவாசமாக இருந்து அவர் தொழிலாளிகளை கசக்கிப் பிழிவது கண்டு மனம் வெதும்பினாள்
வேலை வாங்குவதற்கு கற்கண்டாய் பேசும் முதலாளி விபத்து ஏற்படும் போதெல்லாம் சிடுசிடுப்புடன் மனிதத்தன்மையற்ற அரக்க குணத்தை காணும் போது தான் புரிகிறது அனுபவத்தின் வழி சங்க உணர்வு பெறுகிறாள் ராகினி.
அடுக்குமாடி கட்டிடம் வளர்வது போல இந்த கதை நாவல் வளர்கிறது .
அடுக்குமாடி கட்டிடம் வளரும்போதே பிரச்சினைகள் சம்பவங்களால் வெளிப்படுகின்றன .
முதலில் கருந்தேள் கொட்டியபோது தொழிலாளியுடன் மருத்துவமனைக்குச் சென்ற கன்னியம்மாவை முதலாளி கோபித்தது ;காசியை முதலாளி கை நீட்டி அடித்தது ; கன்னியம்மா எதிர்த்தவுடன் ,உடன் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலையை நிறுத்துவது பிறகு முதலாளி வருத்தப்படுவது போல பேசியது என இயல்பான காட்சிகள் புத்தகம் முழுவதையும் கட்டிடம் வளர்வது போல காணலாம்.
கம்சலை என்ற பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டு இரண்டு விரல்கள் துண்டிக்கப்படும் போது உடன் பணியாற்றும் தொழிலாளிகள் பதறுவதும் பின் முதலாளி வந்ததும் வேலை நிற்பதை பற்றி கவலைப்படுவதும் மனிதத்தன்மையற்ற முதலாளி தொழிலாளி திருப்திப்படுத்தவே பண உதவி செய்கிறார் என்பதையும் உண்மைச் சம்பவமாக வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.
வெளியூரிலிருந்து ஆள் கொண்டு வந்து கட்டிடம் கட்டும் இடத்திலேயே குடியமர்த்துவது ;குறைந்த கூலிக்கு ஓடாய் உழைக்கும் குடும்பங்கள் -- நோய்வாய்ப்படும் போதும்; மழைக்காலத்தில் பட்டினி கிடக்கும்போதும்
முதலாளியின் பார்வைக்கு தெரிவதில்லை என்பதும் கதையில் சுட்டிக் காட்டப்படுகிறது.
தொழிலாளர் சங்கம் அமைத்து வர்க்க ஒற்றுமையை வெளிப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என உணரும் கட்டிடத் தொழிலாளர்களின் உணர்ச்சிப் பெருக்கையும் உணர வைக்கிறார் ஆசிரியர்.
கல்மரம் உத்வேகம் தரும் உண்மை கதை. இந்த நாவல் தாமரையில் தொடராக வந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக