Must Read!
Reviewed in India on 27 December 2023
“கள், காமம், காதல் இவற்றைவிடவும் போதை தருவது கருத்து. கருத்துகள் தரும் போதை அலாதியானது; முடிவற்றது”
- ஆ.இரா.வேங்கடாசலபதி
பி.காம். படித்து, வங்கி உத்தியோகத்துக்குப் போக வேண்டும் என்பது சலபதியின் பால்யகால விருப்பமாக இருந்துள்ளது, படிக்கவும் எழுதவும் நிறைய நேரம் கிடைக்கும் என்பதால் அப்படியான முடிவை எடுத்துள்ளார். அவர் பி.காம். படித்தது எதற்குப் பயன்பட்டதோ இல்லையோ, கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் என்றறிய படும் வ.உ.சி சிரத்தை எடுத்துத் தொடங்கிய கப்பல் கம்பெனியின் கதையைத் துல்லியமான கணக்கிடலோடு, சரளமான ஆங்கிலத்தில், எப்போதும் போல் ஆழமான விரிவான தரவுகளுடன், சம்பவ கோர்வையோடு, படைப்பதற்குப் பயன்பட்டுள்ளது.
வ.உ.சி., பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோரை தனது ஆய்வால் மீட்டெடுத்த காரணத்தால் சலபதியை ‘குட்டி உ.வே.சா’ என்று சில பத்திரிகைகள் எழுதின. அதற்கான நியாயத்தைத் தனது ஆய்வுகள் மூலம் இன்றளவும் செய்துகொண்டிருக்கிறார், இன்றைக்கும் அவர் அலுவலகத்தில்(MIDS) உ.வே.சா புகைப்படத்தின் கீழே அமர்ந்து தான் தட்டச்சு செய்கிறார்.
1984-ம் ஆண்டு தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் வ.உ.சி. கடிதங்களைத் தேடிச் சேகரித்துத் தொகுப்பாக வெளியிட்ட 17 வயது சிறுவன் தன்னுடைய 56 வயதில், “வ. உ. சி. யும் திருநெல்வேலி எழுச்சியும்” “வ.உ.சி.யும் பாரதியும்” 'வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா', ‘திலக மகரிஷி: வ.உ.சி’, 'வ.உ.சியின் சிவ ஞான போத உரை', 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும்' , 'வ.உ.சி: வாராது வந்த மாமணி' என வ. உ. சி பற்றி மட்டும் தமிழில் 7 புத்தகங்களை எழுதியும், தொகுத்தும் வெளியிட்டுள்ளார்.
தேசிய இயக்கம், தொழிலாளர் அமைப்பு, சைவ சமய மறுமலர்ச்சி இயக்கம், திராவிட இயக்கம், இலக்கியம், பதிப்பு எனப் பரந்துபட்டு இயங்கிய வ. உ. சி பற்றி ஆங்கிலத்தில் வரும் முதல் புத்தகமாக “Swadeshi Steam: V.O. Chidambaram Pillai and the Battle against the British Maritime Empire” நூலைக் கருதலாம். (ம.பொ.சி எழுதிய நூல் ஒன்று இருக்கிறது)
இந்திய விடுதலை இயக்க வரலாறு ‘வட இந்திய’ வரலாறாகவே விளங்கி வரும் நிலையில் நம்முடைய வரலாற்றை, கதைகளை, கருத்துக்களைச் சர்வதேச அரங்கில் சொல்லும் நோக்கிலும், நமக்கே நம்முடைய வரலாற்றை நினைவு படுத்திக் கொள்ளும் விதமாகவும் இந்நூல் வெளியாகி இருக்கிறது . வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுல போராட்டம், பெரியாரின் நண்பர் வரதராஜலு ஆகிய நூல்களின் ஆசிரியரும், சமீபத்தில் நான் விரும்பி படிக்கும் பத்தி(அற்றைத் திங்கள்) எழுத்தாளருமான பழ. அதியமான் அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பித்திருந்தார் சலபதி.
‘வ.உ.சியின் மகள்’ என்று பாரதியால் போற்றப்பட்ட எஸ்.எஸ். காலியா சுதேச கப்பல் வாங்கப்பட்ட நாளான டிசம்பர் 22, அன்று Swadeshi Steam நூல் வெளியானது. சலபதி ரசிகர் மன்ற தலைவன் என்ற முறையில் எனக்கு இரு தினம் முன்பே (டிசம்பர் 20) சலபதியிடமிருந்து ‘மிக்க அன்புடன்’ படிக்கக் கிடைத்தது. வ.உ.சி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட டிசம்பர் 24 அன்று 350 பக்கங்களைக் கடந்திருந்தேன். ஒரு பக்கம் சுதேச கப்பல் கம்பெனியும் இனொரு புறம் கப்பல் கம்பெனியை கட்டி எழுப்பிய வ.உ.சி உள்ளிட்ட தமிழ் ஆளுமைகளும் மறக்கப்பட்ட வரலாற்றை நினைவூட்டி உயர்ந்து நின்றார்கள். உண்மையிலேயே வரலாற்றுப் பாடப் புத்தகங்கள் எழுப்பாத பிரமிப்பைக் கப்பல் கம்பெனி பற்றிய இந்நூல் எழுப்புகிறது.
விவசாயத்தில் மாத வருமானம் 5 ரூபாய்க்கும் குறைவாகவும், தமிழ் பத்திரிகையில் துணை ஆசிரியர் 30 ருபாய் மாத சம்பளமும், கல்லூரி தமிழ் பண்டிட்டுகள் 50 ரூபாய் மாத சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு கப்பல் கூட கைவசமின்றி ‘சுதேச கப்பல் கம்பெனி’(SSNco) தொடங்கப்படுகிறது. பிரிட்டிஷ் இந்தியக் கப்பல் கம்பெனி ஆட்சியாளர்களின் உதவியுடன் கோலோச்சும் காலகட்டமாக அது விளங்கியது என்பதை நாம் மனங்கொள்ளவேண்டும்.
10 லட்சம் முதல்(Capital) திரட்டும் லட்சியத்துடன் ஒரு பங்கின்(Share) விலை 25 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு 40,000 பங்குகள் விற்பனைக்கு வருகின்றன. 100 பங்குகளை வாங்குவோர் இயக்குநராகும்(Director) தகுதியைப் பெறுகிறார்கள். இந்தியா, சுதேசமித்திரன், தி ஹிந்து போன்ற சுதேச பத்திரிகைகள் விளம்பரப்படுத்தி பங்குகள் விற்கப்படுகின்றன, பாரதி சுதேச கப்பல் பங்குகளை வாங்குமாறு அறைகூவலிடுகிறார், பங்குகளை விற்பதற்காகவே வ.உ.சி பல இடங்களுக்குப் பிரச்சார பயணம் செய்கிறார், பொதுக்கூட்டங்களில் தமிழ் மொழியில் பேசும் போக்கு நடைமுறைக்கு வருகிறது.
சுதேச உணர்வுள்ள மக்கள் பங்குகளை வாங்கத் தொடங்குகிறார்கள், அயல் தேசத்தில் வசிக்கும் தமிழர்களும் பங்குகளை வாங்குகிறார்கள். ஈரோட்டில் பெரியாரும், சேலத்தில் ராஜாஜியும் கூட குறிப்பிட்ட அளவில் பங்குகளை வாங்குகிறார்கள், வங்காள பிரிவினைக்குப் பிறகு வட இந்தியாவில் காணப்பட்ட இந்து-முஸ்லீம் பிரச்சனை தென்னிந்தியாவில் இல்லை என்பதைச் சுதேச கப்பல் கம்பெனியில் இஸ்லாமியர்கள் பங்குகளை வாங்கியதன் மூலம் உறுதிப் படுத்தலாம். இயக்குநர்களாகவும் இஸ்லாமியர்கள் இருந்துள்ளார்கள். ஆசியர்களுக்கு மட்டுமே பங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதைப் போலவே சுதேச வங்கிகளில் மட்டும் கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் உயர்சாதியைச் சேர்ந்தவர்களே பங்குகளை வாங்கி இருத்தாலும் பரதவர், நாடார் போன்ற ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு சிலரும் பங்குகளை வங்கியுள்ளார்கள். எல்லாவற்றிலும் இந்தியர்களே இடம்பெற வேண்டும் என்று விரும்பிய சுதேசிகளால், கப்பல் கேப்டன் உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த சில பணிகளை ஐரோப்பியர்களைக் கொண்டே மேற்கொள்ள முடிந்தது.
வணிக நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்டாலும் சுதேச கப்பல் கம்பெனி ஒரு அரசியல் இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. சுதேச கப்பல் கம்பெனி வ. உ. சியின் முயற்சியால் பெற்றெடுக்கப்பட்ட குழந்தை. மிதவாதிகள் vs தீவிரவாதிகள் என்று விரிசலில் கிடந்த தேசிய காங்கிரஸில் சூரத் மாநாடு நிரந்தர பிளவை ஏற்படுத்தியது. திலகரை நேரில் பார்த்த பிரமிப்பு வ. உ. சியை மதராஸ் கிளைக்குத் தலைமை வகிக்கச் செய்தது. அதுவரை இருண்ட மாகாணம், தூங்குமூஞ்சி மாகாணம் என்றழைக்கப்பட்ட சென்னை மாகாணம் விடுதலை இயக்கத்தில் புது ரத்தம் பாய்ச்சப்பட்டது போல் தூத்துக்குடியில் கப்பல் கம்பெனியாக சிலிர்த்தெழுந்தது. நினைத்த அளவில் பங்குகள் விற்பனையாக வில்லை என்றாலும், கப்பலற்ற கப்பல் கம்பெனியில் பங்கு வாங்க யார் தான் முன் வருவார்கள் என்ற தர்க்கத்தில் வ. உ. சி மும்பை சென்று முயற்சி எடுத்து இரண்டு கப்பல்களை வாங்கினார்.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், கங்காணிகள் உள்ளிட்ட பயணிகளையும் பல்வேறு வியாபார பொருட்களைச் சுமந்து செல்லவும், பிரிட்டிஷ் இந்திய(B.I) கப்பல் செலுத்தி வந்த ஏகபோக ஆதிக்கத்தை முறியடிக்கவும், அதுவரை இந்திய வியாபாரிகள் சந்தித்து வந்த இன்னல்களுக்குத் தீர்வு காணவும் எஸ்.எஸ். காலியா மற்றும் எஸ்.எஸ். Lawoe ஆகிய சுதேச நீராவிக் கப்பல்கள் தூத்துக்குடி முதல் கொழும்பு வரை கடலில் பாய்ந்தன.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் துணை கொண்டு பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடிகளைப் பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி, சுதேச கப்பல் கம்பெனிக்கு கொடுக்க தொடங்கியது. வியாபார ரீதியாக மிகவும் நியாயமற்ற போட்டி இரண்டு கம்பெனிகளுக்கு இடையில் நடைபெற்றது.சுதேச கப்பல் கம்பெனி வருகை பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியை அச்சுறுத்தியது என்றால் அது மிகையல்ல. நெடுங்காலமாகக் கடலில் ஆதிக்கம் செலுத்திவந்த பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி நுகர்வோருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியது, இலவச சிற்றுண்டிகள் தொடங்கி விலை குறைப்பு வரை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதன் காரணமாக மிகப் பெரிய அளவில் இழப்புகளை B.I சந்தித்தாலும் சுதேச கப்பல் கம்பெனியின் வியாபாரத்தை முற்றிலுமாக முடக்குவது அதன் நோக்கமாக இருந்தது. பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியோடு இணைந்து விஞ்சும், ஆஷ்-ம் , மெட்ராஸ் மாகாண கவர்னர் லாவ்லேயும் பெரும் திட்டம் ஒன்றைத் தீட்டினர்.
கப்பல் கம்பெனியை சுதேசி இயக்கத்தின் குழந்தையாக வார்த்தெடுத்த வ. உ. சியின் அரசியல் நடவடிக்கைகளை முடக்குவது அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. சுதேச கப்பல் கம்பெனி இயக்குநர்களின் ஒரு சாரார் மிதவாதிகளாக இருந்த காரணத்தால், வ. உ. சியை ஓரம்கட்டுவது வியாபார நலன் பயக்கும் என்று அவர்களும் நம்பினர். சுதேச கப்பல் கம்பெனியின் இயக்குநர்களில் சிலர் வ. உ. சியை ஓரம்கட்டினர், திருநெல்வேலி எழுச்சியை காரணம் காட்டி பிரிட்டிஷ் அரசால் வ. உ. சி கைது செய்யப்பட்டார். வ. உ. சியின் கைதும் அவரது பங்கேற்பும் இல்லாமல் போனது, நலிந்திருந்த கப்பல் கம்பெனியை மேலும் நலிவடையச் செய்தது.
மீண்டும் பங்குகளை விற்பனை செய்து, நிதி திரட்டி, புதிய வழித்தடங்களில் கப்பலை இயக்க முடிவு செய்தாலும், வ. உ. சியின் இன்மையால் அவை எதுவுமே சாத்தியப்படவில்லை. கப்பல் கம்பெனியின் எழுச்சிக்கு பல்வேறு காரணங்களைச் சுட்டினாலும், தோல்விக்குப் பொறுப்பேற்க ஒருவருமில்லை. கடன், நம்பிக்கையின்மை, கைது, அரசியல் நெருக்கடி, சூழ்ச்சி என அனைத்தும் சேர்ந்து கப்பல் கம்பெனியை மூழ்கடித்தது. கப்பல் கம்பெனி தோல்வி அடைந்தால் அதுவொரு ‘தேசிய பேரிடராக’ முடியும் என்று தி ஹிந்து பத்திரிகை எழுதியது . காலனிய இந்தியாவில் ஒரு சுதேச முயற்சி தோல்வியுற்றது. கப்பல் கம்பெனியின் வீழ்ச்சியைப் பற்றி பெரிய அளவிலான குறிப்புகளைக் காண இயலவில்லை என்பதையே சுதேசிகள் மனதில் ஏற்படுத்திய வடுவின் அளவை குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். காலனிய தமிழ்நாட்டில் நடந்த ஒரே ஒரு அரசியல் கொலையான ஆஷ் படுகொலைக்குக் கப்பல் கம்பெனியின் செயல்பாட்டை அவர் முடக்கினார் என்பதும் முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.
வக்கீல் தொழிலைத் துறந்து கப்பல் கம்பெனியை கட்டியெழுப்ப வந்த வ. உ. சிக்கு இந்த வீழ்ச்சி பெரும் உளவியல் சிக்கலை ஏற்படுத்தியது. கடைசியாக கப்பல் கம்பெனியின் அலுவலகம் வ. உ. சி இல்லத்தில் செயல்பட்டது அவருக்கு நிம்மதி அளித்திருக்கலாம். ஆனால் அதை விட பெரும் வடுவை அவர் தன் வாழ்நாள் முழுக்க சுமந்தார். திலகரின் மறைவை ஒட்டியும், காந்தியின் வருகைக்கு பிறகும், தமிழ்நாடு காங்கிரசில் பார்ப்பனர்களின் ஆதிக்கமும், அவர்கள் முன்னெடுத்த மிதவாத அரசியல் நடவடிக்கையும் வ. உ. சி-க்கு உவப்பளிக்கவில்லை. வ. உ. சி மறைவுற்ற போதும் கூட தேசிய இயக்க பெருந்தலைவர்களாக அறியப்பட்ட காந்தி, நேரு, ராஜாஜி போன்றவர்கள் ஒரு அஞ்சலிக் குறிப்பையும் வெளியிடவில்லை, என்பதை நினைக்க வருத்தமாகத்தான் இருக்கிறது.
வ. உ. சி உள்ளிட்ட சுதேசிகளும் , கப்பல் கம்பெனியும் சலபதியின் விவரிப்பில் உயிர்த்தெழுகிறார்கள். அந்த காலத்தில், ரூபாயின் மதிப்பில் தொடங்கி, கப்பலிலிருந்த பாகங்கள், பணியாளர்கள், பயணித்த தூரம், நேரம், விற்பனையான பங்கு, பங்கு வாங்கியோர் விவரம், வங்கத்திலும், மும்பையிலும், கொழும்புவிலும், தென் ஆப்பிரிக்காவிலும் சுதேச இயக்கத்திற்கு இருந்த வரவேற்பு, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள், ஆகியவற்றை தன்னுடைய 40 ஆண்டுக்கால ஆய்வின் மூலம் விரிவாகவும் ஆழமாகவும் கோர்வையோடு இந்நூலில் நமக்களிக்கிறார் சலபதி.
1.A Sea Change 2. Setting Sail 3. Floating a Company 4. Full Steam Ahead
5. A Rough Crossing 6. A Political Storm 7. Choppy Waters 8. In the Doldrums
9. Dire Straits 10. Running Aground 11. Marooned 12. The Great Helmsman எனக் கப்பல் சார்ந்த சொற்களே 12 அத்தியாயங்களின் தலைப்புகளாக இடம்பெற்றுள்ளது, கப்பல் கம்பெனியின் பங்கு விவரம், வரவு செலவு கணக்கு, பயண விவரம் ஆகியவை பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளது. அடிக்குறிப்புகள் அந்தந்த பக்கத்தின் இறுதியிலே இடம்பெற்றிருப்பது வாசிப்பைச் சரளமாக்குகிறது. “கற்பனையைவிட உண்மை நம்பமுடியாததாக இருக்கிறது!” என்பார் சலபதி, இந்நூலில் அப்படியான பகுதிகள் ஏராளம். படித்துணர வேண்டிய பகுதிகள் அவை.
தமிழ்நாட்டைப் பற்றிய ஆய்வுகளையெல்லாம் வெளிநாட்டார் அதிகம் செய்து வந்த காலம் மெல்ல உதிர்ந்து இது போன்ற புத்தகங்களை நம்மால் எழுத முடியும் என்ற ஊக்கத்தைச் சலபதியின் இந்நூல் வழங்குகிறது.
பெரும் அரசியல் லட்சியத்தோடு, பொருளாதார பின்புலமின்றி, சுதேசிகள் உழைப்பின் மூலம் உருவான சுதேச கப்பல் கம்பெனி, நீராவி போல் சுவடே இன்றி காற்றில் கலந்த காரணத்தால் ‘Swadeshi Steam’ என்ற தலைப்பு இந்நூலுக்கு மிகப் பொருத்தமாகவும் உவமை நிரம்பிய ஒன்றாகவும் படுகிறது. 2023-ல் வெளியான புத்தங்களில் மிக முக்கியமான புத்தகமாக இந்நூல் இருக்கும். வரலாற்று ஆர்வலர்கள், பொது வாசகர்கள் என அனைவரும் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகமும் கூட.
ஜே.என்.யூவில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு சலபதி - பணிக்கர் இடையே நடைபெற்ற ஒரு உரையாடலை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆய்வை முடித்ததும், ‘‘என்ன செய்யப் போகிற’’ என்று பணிக்கர் கேட்டுள்ளார். ‘‘தமிழ்நாட்டுக்குப் போகிறேன்’’ என்று சொல்லி இருக்கிறார் சலபதி. ‘‘வௌங்கமாட்ட. அங்கே வரலாற்று ஆய்வுகளே இல்லை’’ என்று பணிக்கர் சொன்னதும், சற்றும் தயங்காமல், ‘‘அப்ப, அங்கதான நான் போகவேண்டும்’’ என்று சலபதி சொன்ன வார்த்தைக்கு இன்று வரை நியாயம் செய்து கொண்டிருப்பது ஒரு மாணவனாக, ஆர்வலனாக, வாசகனாக, தமிழனாக மகிழ்வூட்டுகிறது.
நன்றி :
திரு ராஜா பாகம்,
சிதம்பரம்பிள்ளை ராஜ்யம்,
வாட்ஸ்அப் குழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக