19 டிச., 2024

சூரியின் நாட்குறிப்பு-70: தென்னங்கீற்று

தென்னங்கீற்று

இந்தப் பெயரில் ஒரு தமிழ்த் திரைப்படம் வந்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். சிலர் அந்தப் படத்தைப் பார்த்தும் இருக்கலாம்.

எழுத்தாளர் கோவி மணிசேகரன் எழுதி இயக்கிய படம். சுஜாதா, விஜயகுமார், ஜெய்கணேஷ் நடித்திருப்பாராகள். 

நடிகை சுஜாதா உச்சத்தில் இருந்த காலம்.  இப்படத்தில் வரும் மாணிக்க மாமணி மாலை என்ற பாடல் என் நினைவில் இன்றும் பசுமையாக இருக்கிறது.
 
சற்று வித்தியாசமான கதை. 

கதாநாயகி ஒரு செல்வந்தரின் செல்லப்பெண். 20 வயதுக்கு மேலாகியும் பூப்படையவில்லை. அவள் வாழ்க்கையே சிக்கலாகிக் கொண்டிருந்தது. மருத்துவத்தால் தீர்வு காணமுடியவில்லை.

இந்நிலையில், எதிர்ப்பை மீறி, தன் நண்பரை விரும்பி மணமுடிக்கிறாள். மேலும் சிக்கல், சோகம். இறுதியில் ஒரு வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்து அவளது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கிறது.

இதைப் போன்ற ஒரு பெண்ணை ஹோமியோபதி மூலம் கண்டிருக்கிறேன். அவளுக்கும் ஹோமியோபதியால் நல்ல தீர்வு கிடைத்தது. அதைத்தான் இன்று பேசப்போகிறேன்.

ஒரு கிறித்தவ சேவை அமைப்பு மாதந்தோறும் அருகிலுள்ள மருத்துவ வசதியில்லாத குக்கிராமங்களுக்குச் சென்று இலவச மருததுவ சேவை புரிவது வழக்கம். வழக்கமாக சளி, இருமல், காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள். நாட்பட்ட நோய்களுக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற உதவுவார்கள.

இப்படி ஒருமுறை சென்றபோது ஒரு வித்தியாசமான அனுபவம். 

18 வயதுக்கு மேற்பட்ட இளம்பெண். ஒல்லியான, கருத்த உருவம். முகத்தில் பயம் என்பதைவிட பீதியே அதிகம் தெரிந்தது.

அவளுக்கு திடீர் திடீரென வலிப்பு வந்து மயக்கமடைந்து விடுவாள். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பயனில்லை. பற்றாக்குறைக்கு ஏழ்மை. சிகிச்சையைவிட பிரார்த்தனைக்காகவே அவள் குடும்பத்துடன் வந்திருந்தாள்.

குழுவிலிருந்த நண்பர் அவர்களுக்கு நம்பிக்கையூட்டி தன் நண்பரான ஹோமியோபதி மருத்துவரிடம் அழைத்து வந்தார்.

ஹோமியோபதி மருத்துவர் அவர்களிடம் அன்பாக , பொறுமையாக வெகு நேரம் பேசிக் கொண்டிருந்த போதுதான் அந்த உண்மை வெளிவந்தது. 18 வயதுக்கு மேலாகியும் அவள் பூப்படைந்திருக்கவில்லை!

வலிப்பிற்கு ஹோமியோபதியில் பல மருந்துகள் உள்ளன. அவற்றில் எதைத் தேர்வது?

மேலும் மேலும் தோண்டி விசாரிக்க, எதிர்பாராத விதமாக அவருக்கு ஒரு பிடிமானம் கிடைத்தது.

அந்தப் பெண் சிறுமியாக இருந்த போது பக்கத்து வீட்டிலேயே பெரும்பாலும் விளையாடிக் கொண்டிருப்பாள் தன் வயதை ஒத்த குழந்தைகளுடன்.

ஒருநாள் பேரதிர்ச்சியாக ஒரு துயர சம்பவம். கடன்சுமையால் அந்தக் குடும்பமே தற்கொலை செய்து கொண்டது. ஊரேகூடி வேடிக்கை பார்க்க,  அவர்களது உடல்கள் அகற்றப்பட்டன. அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுமி பேயரைந்ததுபோல் ஆனாள்.

அதற்குப் பிறகு சில காலம் சென்று அவளுக்கு அடுத்தடுத்து துன்பங்கள், துயரங்கள்,  வலிப்புகள்!

ஆனால் அவளது குடும்பத்தினரோ அல்லது சிகிச்சையளித்த மருத்துவர்களோ இவற்றுக்குத் தொடர்பு இருப்பதை அறியவில்லை.

ஹோமியோபதி மருத்துவர் வெகுநேரமாக தேடிக் கொண்டிருந்த பிடிமானம் அவருக்குக் கிடைத்துவிட்டது.

After-effects of fright, fits after fright போன்ற குறிகளின் அடிப்படையில் ஓபியம் என்ற ஹோமியோபதி மருந்தைத் தேர்ந்துதரப்பட்டது.

ஓபியம் பல மருத்துவமுறைகளில் பல காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

ஹோமியோபதியில் வீரியப்படுத்தபட்ட ஓபியம் நுண்மமான அளவில், மேற்கூறப்பட்ட குறிகளின் அடிப்படையில், ஓரிரு டோஸ் மட்டுமே தரப்படுகிறது.

சிகிச்சை பெற்று அவர்கள் சென்று விட்டார்கள்.

காலம் ஓடியது.  அவர்கள் திரும்பி வரவில்லை, தகவலும் இல்லை. மருத்துவரும் மறந்து விட்டார்.

அந்த நண்பர் ஒருநாள் படுஉற்சாகமாக வந்து, "சார்! அந்தப் பெண் குணமாகிவிட்டது. நன்றாக இருக்கிறாள் " என்றார்.

மருத்துவருக்குப் பிடிபடவில்லை. யார் என்று விசாரிக்க, அந்த குக்கிராமத்துப் பெண் வலிப்பு நோய்க்காக அழைத்து வந்தேனே,  அவளுக்கு தற்போது வலிப்பு வருவதில்லை. உடல்தேறி நன்றாக இருக்கிறாள். அதுமட்டுமல்ல,  அவள் பூப்படைந்து, இயல்பாக, மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்றார்.

வியந்துபோனது நண்பர் மட்டுமல்ல,  அந்த மருத்துவரும்கூடத்தான்!

ஹோமியோபதியில் இதுபோன்ற பல ஆச்சரியங்கள், அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றன, தொடர்ந்து நடந்துகொண்டும் இருக்கின்றன.

என்னால் மறக்கமுடியாத முடியாத அனுபவக்குறிப்புகளில்
இதுவும் ஒன்று.

கருத்துகள் இல்லை: