எனக்குள்ளே வாசிப்புத் தாகத்தையும், எழுத்தார்வத்தையும் வளர்த்துவிட்டவர்களில் முக்கியமானவர் பேராசிரியர் தே.லூர்து!
பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார்! அமெரிக்காவின் போர்டு நிதிய (Ford Foundation) உதவியோடு அங்கே நாட்டார் வழக்காற்றியல் (Folklore) மையத்தை உருவாக்கினார். தமிழகத்தில் மட்டுமல்ல - தென்னிந்தியாவிலேயே இந்தத் துறை வல்லுனர்கள் அனைவருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராக விளங்கினர். அவருடைய ஐம்பதாவது வயதுகளிளிருந்தே அவருக்குப் பார்வைக் குறைபாடு! அறுபதுகளில் கிட்டத்தட்ட வாசிக்கவே முடியாத நிலை! போதாக்குறைக்குப் பக்கவாதமும் தொற்றிக்கொண்டது! எழுதுவதும் சிரமமாகிப் போனது! கண்ணுக்கும் மருத்துவம்! பக்கவாதத்துக்கும் மருத்துவம். ஆனால் அவரது அறையெங்கும் நூல்கள். உலகெங்கும் இருந்து நன்கொடையாகவும், வாங்கியும் சேகரித்த நூல்கள். காலையிலும் மாலையிலும் அவர் சுட்டும் நூலை வாசித்துக் காட்ட மாணவர்கள் அல்லது பணியாளர்! ஒவ்வொரு நூலிலும் பக்கம் வாரியாகக் குறிப்புகள்! அவர் சொல்லச் சொல்ல கட்டுரைகள் எழுதப்பட்டன. ஆய்வுக் கட்டுரைகள்! மாணவர்களுக்கு ஆய்வுப் பட்டங்கள்! ஆய்விதழ்கள்! நூல்கள்! தமிழக, கேரளப் பல்கலைக்கழகங்களுக்குப் பயணம்! விரிவுரைகள்! இலங்கை உள்ளிட்ட இடங்களில் கருத்தரங்கக் கட்டுரைகள். ஏப்ரல் 2008-ல் தந்து 71-வது வயதில் தன் இறுதி மூச்சு விடும்வரை அதே வாசிப்புத் தாகம்! சிந்தனைத் தாகம்! வாசிக்கத் தூண்டும் தாகம்! புத்தகத்தைப் புரட்ட முடியாத கைகளில் புத்தகம்! வாசிக்க முடியாத கண்களில் அறிவுத் தேடல்!
நம்முடைய வாசிப்புத் தாகம் தணியாமல் தொடர இவருடைய வாசிப்புத் தாகம் நமக்கு வழிகாட்டட்டும்.
மிகப் பெரிய சாதனையாளர்கள் பல தடைகளையும் மீறி, வாசிப்புத் தாகத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாமும் வாசிப்புத் தாகத்தை வளர்ப்போம்! வளர்வோம்.
நன்றி: முனைவர் மீ.நோயல், ஆசிரியர், அறிக அறிவியல், ஆகஸ்ட் 2008.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக