29 அக்., 2008

கருத்துக்கள்-8: "எஃப்-எம் வானொலிகள்"

"எத்தனை வருஷமா லவ் பண்றீங்க?"
"ஏழு வருஷமா"
"அவ்வளவு வருஷமாவா... கேட்கவே பெருமையா இருக்கு... எப்போ கல்யாணம்?"
"அவங்களுக்கு ஏற்கனவே ஆயிருச்சு..."

இப்படி ஒரு உரையாடல் ஒரு நாளைக்கு பலமுறை பல்வேறு குரல்களில் பல்வேறு எஃப்-எம் வானொலிகளின் வழியே ஏதோ அன்றாட நிஜம்போல தமிழர்களின் செவியில் ஈயத்தைக் காய்ச்சி, வலி தெரியாமல் ஊற்றப்படும் கலாச்சார நிஜமாகி வருகிறது. நாள் பலன், நட்சத்திர பலன் தொடங்கி மூட நம்பிக்கைகளின் ஊற்றுக் கண்ணாகவும், 'செக்சை மனம் விட்டுப் பேசலாம்.. எஸ்.எம்.எஸ்., லவ் கவிதை, பாட்டை டெடிகேட் பண்ணலாம்'.. ஜாலியா லைஃப் கொண்டாடலாம்'... பீச், பார்க், நகைக்கடை என கலாச்சார சீரழிவின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய அவமானமாக நாம் எஃப்.எம். வானொலிகளைப் பார்க்கிறோம். கலை, பொழுதுபோக்கு எனும் பெயரில் நடைபெறும் இந்த அவமான பரிணாமம் அரசு வானொலிகளையும் விட்டுவைக்கவில்லை.

கோடிக்கணக்கான விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், அன்றாட உணவிற்கு அல்லல்களை வலியோடு தாங்குபவர்கள் குறித்த ஒரு அணுஅளவு அக்கறைகூட காட்டிக் கொள்ளாத இந்த அரைவேக்காட்டு நஞ்சு, நகர்ப்புற மத்திய வர்க்கத்தின் கிடைக்கும் நேரத்தையும் கொன்று, வாழ்வின் யதார்த்தத்தை விட்டு தள்ளிவைப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். தினசரிகளில் வரும் கள்ளக்காதல் கொலை, கணவனுக்கு விஷம் வைத்துக் கொலை, குழந்தைகளுடன் மனைவி எரித்துக் கொலை, ஆசைக்கு இணங்க மறுத்த அக்கா கொலை, இத்யாதிகளுக்கு, விஷக்கிருமியான தொலைக்காட்சித் தொடர்களைவிட, இன்று இந்த எஃப்.எம். வானொலிகள் அதிகப்பங்கு வகிப்பது வலி ஏற்படுத்தும் உண்மையாகும். காதலர் தினம், 'ஃபிரெண்ட்ஷிப் டே', என சர்வதேச சந்தையின் அங்கமாயும், உள்ளூர் கலாசார சீர்கேட்டின் வினை ஊக்கியாகவும் செயல்படும் இந்த மக்கள் விரோத அபினி... 'நங்கநல்லூர் வழியாப் போகாதீங்க... அங்கே ஒரு போராட்டம் நடந்து கிட்டுருக்கு'' என்று நல்வழிப் படுத்துவதையும் பார்க்கிறபோது, அவை யாருக்கான வேலையை பார்க்கின்றன, அவற்றின் நோக்கம் பொழுதுபோக்குதானா எனச் சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது.

நாம் 'காலர் டியூன்' காலத்தில் வாழ்வது உண்மைதான். ஆனால் ஒரு புத்தகத்தைப் படிக்கவோ, பிரச்னைகளை சிந்தித்து சராசரி மனிதனின் அன்றாட வாழ்வியலை முன்னுக்கு கொண்டுவந்து ஒரு முற்போக்குச் சமூகத்தை, சமத்துவத்தை, மாமனிதர்கள் கனவைக் கண்ட யதார்த்தத்தை சாதிப்பதற்கோ எவ்விதத்திலும் இந்த ஃஎப்.எம். வானொலி சேவை உதவிடப் போவதில்லை என்பது மட்டுமல்ல, தேவைப்பட்டால் அவ்விதமான மனிதநேயச் சமூக உருவாக்கத்திற்கு எதிராகவே அவர்களது செயல்பாடுகள் அமைகின்றன என்பதையும் பார்க்கிறபோது, அவைகளுக்கு எதிராக நாம் களம் இறங்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவே படுகிறது - தமிழைக் கொன்று, கலாச்சாரத்தையும் கொன்று, அது தன் விளம்பரதாரர் உதவியோடு, தின்று கொழுத்து ஏப்பம் விடுவதற்குள்.

நன்றி: "கீலுங்க..கீலுங்க... கீத்துக்கிட்டே இருங்க?", தலையங்கம் (ஆசிரியர் குழு), புதிய புத்தகம் பேசுது, செப்டம்பர் 2008.

கருத்துகள் இல்லை: