13 நவ., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-38: "யோகிக்கு வெகு அருகில்"

"நான்" அழிந்தால்தான்
ஏந்த முடியும் கையை;
பெயர் தொலைத்தால்தான்
எடுக்க முடியும் பிச்சை.

குடும்பம் விட்டு,
உற்றார் உறவினர் மறந்து,
ஒரு யோகிக்கு வெகு அருகில்
வருபவர்கள் பிச்சைக்காரர்கள்;
அழுக்கு மட்டுமே இவர்களை
அந்நியப்படுத்துகிறது;
வயிறும் வகை பிரிகின்றது.

ஒருவகையில் இவர்கள்
"அந்தக் கணத்தில்" வாழும்
ஜென் துறவிகள்;
கடந்த, எதிர் காலங்களைக்
கடந்தவர்கள்.

வினைப்பயனை
இந்த ஜென்மத்திலேயே
அனுபவிப்பவர்களை
அவமதிக்காதீர்கள்.

"பிச்சை போடாதீர்கள்"
என்பது
ஒரு விபரீதமான பகுத்தறிவு;
இவர்களின் இருப்பிற்கு
வெட்கித் தலைகுனிய
வேண்டும் நாம்.

இவர்களுக்கு உதவி,
மனிதநேயத்தை
தக்கவைத்துக்கொள்ள
வாய்ப்பளித்தமைக்கு
நன்றி சொல்வோம் நாம்.

கருத்துகள் இல்லை: