27 டிச., 2008

கேள்வியும் பதிலும்-26: "கவிஞன் யார்?" "எது கவிதை?"

கேட்டேன் என்பவன் சமூக மருத்துவன். பலநேரங்களில் யதார்த்தம் முன் கற்பனை உலகிலேயே வாழும் கோமாளியாகவும் வாழ்ந்து மறைந்து போகிறான். பார்த்ததைப் புதிதாய்ப் பார்ப்பவன் பாவலன். பார்த்ததை மீண்டும் பார்ப்பவன் பாமரன். கவிஞன் என்பவன் தலைசிறந்த ரசிகனாகவும் இருக்கிறான். அதேபோல் கவிதையில் புதுக்கவிதை, மரபுக்கவிதை என்ற பேதமில்லை. கவிதைகளுக்கு வார்த்தைகளே தேவையில்லை. வாசிக்கும் முன்பே புரிந்துவிடக்கூடியதுதான் கவிதை. எளிமைதான் அதன் ஆகச் சிறந்த இயல்பு. இந்த இடத்தில் எனது கவிதை ஒன்றினைப் பகிர ஆசைப்படுகிறேன்:

மொழியின்முன் மண்டியிட்டு
வார்த்தை வரம் கேட்டேன்.
அரசியல்வாதிகள் வந்து
அள்ளிக்கொண்டு
போய்விட்டார்கள்.
கட்டுரையாளர்கள் சிலர்
கேட்டு வாங்கிப்போனார்கள்.
மீதமிருந்ததை பேசவும் ஏசவும்
மனைவியர் வாங்கிப்
போனார்கள்.
தாமதமாக வந்து நிற்கிறாயே,
தமிழ்க் கவிஞனே என்று
மொழி மிகவும் வருந்தியது.
வேறு வழியின்றி வெற்றுக்
காகிதத்தை மடித்து
வழியில் என் காதலியிடம் தந்தேன்.
வாங்க மறுத்த அவள்,
நீ என்ன எழுதியிருப்பாயென
எனக்குத் தெரியுமென்றாள்.
வார்த்தைகளே இல்லாத
கவிதையை
வாசிக்காமலேயே அவள்
புரிந்துகொண்ட பிறகுதான் தெரிந்தது,
கவிதைக்கு வார்த்தைகள்
அவசியமில்லையென்று.

- "ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் நேர்காணலிலிருந்து ஒரு பகுதி"
"இனிய உதயம்", மாத இதழ், நக்கீரன் வெளியீடு, டிசம்பர் 2008.

நன்றி: திரு எஸ்.இராதாகிருஷ்ணன் & "இனிய உதயம்"

கருத்துகள் இல்லை: