பற்றவைத்த பின்னும்
வெடிக்காத பட்டாசு சொன்னது:
"பிஞ்சு விரல்கள் எனைச் செய்தபோதே
வெடித்துவிட்டது என் இதயம்
வெடித்த வெடி எப்படி
வெடிக்கும் மறுபடியும்?"
உரசிய பின்னும் ஒளி கொடுக்காத
தீக்குச்சி சொன்னது:
"எனைச் செய்த சிறார்களின் கண்கள்
ஒளியிழந்து கிடந்ததே!
நான் எப்படி ஒளி கொடுப்பேன்?"
சாயம் போன பனியன் சொன்னது:
"கைகழுவிய பின்னும்
சாயக்கரையோடு தானே
சாப்பிடப் போவார்கள் சிறுவர்கள்!
எங்கு மட்டும்
சாயம் போன மாயம் என்ன?"
ட்ராஃபிக் சிக்னல் சொன்னது:
"பிச்சை கேட்கும் சிறுவர்களின்
கை நிறைந்துவிடும் தினமும்,
வயிறு நிறைவதில்லை ஒருபொழுதும் -
பங்கு கொடுக்க வேண்டுமே பலருக்கும்."
உணவகத்தின் மேஜை சொன்னது:
"உணர்ச்சியற்ற மரக்கட்டைகள் நாங்கள் -
எழுதுகோல் ஏந்தவேண்டிய விரல்கள்,
எங்களைச் சுத்தம் செய்யும்போதும்
வாழாவிருக்கிறோம் நாங்கள்."
திருட்டுச் சிறுவனின் வாக்குமூலம்:
"படிப்பு சரியா வரலைங்க, ஐயா!
மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னாங்க.
பேப்பர் போட்டேங்க வீடு வீடா.
ஹோட்டல் வேலைக்கு போனேங்க;
காச ஏமாத்துனாங்க; ராத்திரில
கெட்ட வார்த்த பண்ணினாங்க;
பிடிக்கலீங்க எனக்கு.
ஓடிவந்து இப்படி ஆயிட்டங்க."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக