6 பிப்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-49: "குப்பையும் கடவுளும்"

மனித மனம் தொடங்கி
மரத்தடி, தெருக்கோடி வரை
இல்லாத இடமில்லை
நீக்கமற நிறைந்திருக்கும்.

ஒன்றுக்குத் தொட்டி
ஒன்றுக்கு ஆலயம்
இருந்தாலும் இரண்டும்
சந்திக்கு வந்துவிடும்

மாதா, பிதா, குரு தெய்வமாம்,
அப்பா அம்மா கொட்டிய குப்பை
அவ்வப்போது சண்டையில் தெரியும்
ஆசிரியக் கடவுள்கள்
குப்பை கொட்டுவது வகுப்பறையில்.

அறிந்தவை தான்
ஆண்டவனின் அவதாரங்கள்
பத்திரிகை, திரைப்படம்
செய்தித்தாள், சின்னத்திரையிலும்
குப்பையின் அவதாரங்கள்
குறிப்பிட்டுச் சொல்ல சில.

ஒன்றில் அபூர்வமாய்
சக்கைகளுக்கு நடுவிலும்
சாரம் கிடைப்பதுண்டு
மற்றதில் மனிதர்கள்
சாரத்தை விட்டுவிட்டு
கொண்டாடுவதோ
சக்கையை மட்டும்.

கருத்துகள் இல்லை: