16 பிப்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-52: "அண்ணலுக்கு அஞ்சலி"

அண்ணலே!
உங்கள் சுயசரிதைக்கு
முன்னும் பின்னும்
கற்பனைக் கலப்பு
சிறிதுமின்றி வெளிவந்தது
தொலைபேசி அட்டவணை
மட்டும்தான் ஐயா!

நீங்கள் தொடங்கிய
உண்ணாவிரதத்தை
இந்தியப் பொருளாதாரம்
பட்டினியாக
கொண்டு சேர்த்துவிட்டது
பட்டி தொட்டியெல்லாம்!

மதுரை விவசாயியால்
நீங்கள் நிறுத்தினீர்கள்
சட்டை அணிவதை!

ஆடை இல்லாத
அனைத்து இந்தியனுக்கும்
ஆடை வழங்கிவிட்டு
உனது சிலைக்காவது
சட்டை போட்டுப் பார்க்கும்
எங்கள் ஆசை இருக்கிறது
இன்னும் நிராசையாகவே!

உங்களுக்குப் பின்
அரிச்சந்திரா
நாடகம் பார்த்த சிலர்

உண்மை சொன்னால்
இத்தனை துன்பமா என்று
இனிதே நிறுத்திவிட்டனர்
உண்மை பேசுவதையும்,
நாடகம் பார்ப்பதையும்!

இந்தியாவின் எதிர்காலம்
கிராமங்களில் இருப்பதாக
ஐயா சொன்னீர்கள் அன்று.
இன்று நாங்கள் கூட்டம் கூட்டமாக
கிராமங்களை காலிசெய்து
வேதனையில் வாடுகிறோம்,
வேலைக்காக நகரம் வந்து!

உன்னால் கிடைத்தது
அரசியல் சுதந்திரம்;
மறுபடியும் அவதரித்து
பெற்றுத் தரவேண்டும் நீ
பூரண சுதந்திரம்!

கருத்துகள் இல்லை: